Published : 20 Feb 2020 10:40 AM
Last Updated : 20 Feb 2020 10:40 AM
ஆர். ரம்யா முரளி
ஒரு விரிப்பில் மல்லாக்க படுக்கவும். கை,கால்கள் உடலை விட்டு சில அடிகள் தள்ளி இருக்குமாறு வைக்கவும். உள்ளங்கைகள் மேல் நோக்கியவாறு இருக்க வேண்டும்.கண்களை மூடிக் கொள்ளவும். இந்த நிலையில், நாம் எடுக்கும் ஒவ்வொரு மூச்சிலும் நமது கவனத்தைச் செலுத்த வேண்டும்.
சவாசனத்தில் இருக்கப் போகும் அடுத்த ஐந்து நிமிடமோ, பத்து நிமிடமோ நாம் எடுக்க இருக்கும் மூச்சின் மேல் நமது கவனத்தை வைக்க வேண்டும். அதேபோல் உடலின் கால் விரல்கள் முதற்கொண்டு தலை உச்சி வரை ஒவ்வொரு பாகத்தின் மீதும் நமது கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு உறுப்புகளும் நன்றாகஓய்வெடுக்க நாம் மனதிற்குள், அவைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். பயிற்சி முழுவதும் நமது கவனம், நாம் விடும்,மற்றும் உள்ளிழுக்கும் மூச்சின் மீது இருக்க வேண்டும்.
பலன்கள்
சவாசனத்தின் போது நமது உடல் முழுமைக்கும் நல்ல ஓய்வும், மனதிற்கு அமைதியும் கிடைக்கும். மன அழுத்தத்திற்கு நல்ல தீர்வு கிடைப்பதுடன்,கவனிக்கும் திறனும் மேம்படும். அதேபோல் ஒவ்வொரு பாகத்தின் மீதும் நமது கவனத்தை செலுத்தி ஓய்வுக் கொடுப்பதால், அவற்றுக்குச் சீரான முறையில் பிராணவாயு கிடைக்கப் பெற்று புத்துணர்ச்சி பெறும். அனைத்து தசைகளும் தளர்வடையும். மன ஆரோக்கியத்திற்கும் உதவி செய்யும். ஆசனங்களின் முடிவில் சிறிது ஓய்விற்குப் பின் சவாசனம் செய்வது வழக்கம்.
பதற்றம் மற்றும் தூக்கமின்மையால் வரக்கூடிய தலைவலிக்கு, இந்த ஆசனம் நல்ல பலனை கொடுக்க வல்லது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்வதன் மூலம் அதன் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.இந்த ஆசனத்தில் 5- 10 நிமிடங்கள் இருக்கலாம். ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் மாதவிடாய் போது வலி உள்ளவர்களுக்கும் இந்த ஆசனம் நல்ல நிவாரணம் கொடுக்க வல்லது.
அன்பு மாணவச் செல்வங்களே, பெற்றோர்களே யோகாசனம் என்பது நம்முடைய வாழ்க்கையை நமது அடுத்த தலைமுறையின் வாழ்க்கையை இனிதாக்கும் அற்புதம். மிக எளிய முறைகளில் நாம் யோகாசனம் செய்து வரும் நிலையில் நோய் நொடியற்ற ஆரோக்கிய வாழ்க்கை கிடைக்கும். இந்த தொடர் தங்களின் வாழ்க்கையை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இருக்கும் என நம்புகிறோம். யோகாசனம் நம் வாழ்வின் பெரும் யோகம். வாழ்க உடல் மன வலிமையுடன்.(யோகம் நிறைவடைந்தது)
கட்டுரையாளர்: யோகா நிபுணர். எழுத்தாக்கம்: ப.கோமதி சுரேஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT