Published : 17 Feb 2020 08:25 AM
Last Updated : 17 Feb 2020 08:25 AM
1932 ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற நாடுகள்தொடர்பான விவரங்களில் குறிப்பிடத்தக்கவை எவை?
முதல் முறையாக கொலம்பியா நாடு இதில் பங்கு பெற்றது. 1924 ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்வதாக அறிவித்திருந்த போதிலும் சீனக் குடியரசு அதில் கலந்து கொள்ளவில்லை. முதல் முறையாக அது 1932 ஒலிம்பிக்ஸில்தான் பங்கு கொண்டது.
குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளை Winter Games என்கிறார்கள். அப்படி ஒரு தனிப்பிரிவு எதற்காக தொடங்கப்பட வேண்டும்?
தொடக்கத்தில் வழக்கமான (அதாவது கோடைக்கால) ஒலிம்பிக்ஸ் நடத்தப்படும் நாட்டிலேயே குளிர்கால ஒலிம்பிக்ஸும் நடத்தப்பட வேண்டும் என்றும், இவைஒரே ஆண்டில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், குளிர்காலத்தில் வழக்கமான ஒலிம்பிக்ஸை நடத்த முடியுமா? இரண்டு ஒலிம்பிக்ஸையும் ஒரே நேரத்தில்நடத்தினால் போட்டி முடிவுகளை தனித்தனியாக அறிவிப்பதா? இணைத்து பதக்கங்களைக் கணக்கிட்டு வெற்றியாளரைத் தீர்மானிப்பதா? அப்படிச் செய்தால் குளிர்கால விளையாட்டுக்கள் ஆடும் சூழலே இல்லாத நாடுகளுக்கு அது அநீதி செய்வதாக ஆகாதா? இந்தக் கேள்விகள் எழ, குளிர்கால ஒலிம்பிக்ஸுக்கான விதிகள் மாற்றி அமைக்கப்பட்டன.
குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகள் எவை?
ஆல்பைன் பனிச்சறுக்கு, பயாத்லான், பாப் இசுலெட், கிராஸ் கன்ட்ரி பனிச்சறுக்கு, கர்லிங், ஃபிகர் பனிச்சறுக்கு, ஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு, பனி வளைதடியாட்டம், லூஜ், நோர்டிக் கம்பைன்டு, குறுந்தொலைவு விரைவுப் பனிச்சறுக்கு, எலும்புக்கூடு ஸ்லெட், பனிச்சறுக்கு தாண்டுதல், பனிப்பலகை, விரைவுப் பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன.
முதல் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் எங்கு நடத்தப்பட்டன?
1924-ல் பிரான்ஸில் உள்ள சமோனிக்ஸ் என்ற நகரில் நடத்தப்பட்டது. பின்னர் 1936 வரை ஒவ்வொரு நான்காண்டும் இது நடைபெற்றது. ஆனால், இந்த தொடர்ச்சி, இரண்டாம் உலகப்போர் காரணமாக விடுபட்டது. பின்னர் 1948-ம் ஆண்டில் மீண்டும் நடைபெற்றது.
1986 முதல்தான் குளிர்கால ஒலிம்பிக்ஸ் வழக்கமான (கோடைக்கால) ஒலிம்பிக்ஸில் இருந்து பிரிக்கப்பட்டது.
எந்த விதத்தில் பிரிக்கப்பட்டது?
இந்த இரு நிகழ்வுகளும் தனித்தனியே நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சியில் நடத்தப்படும். கோடைக்கால ஒலிம்பிக்ஸ் நடைபெறும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்கால ஒலிம்பிக்ஸ் நடைபெறும்.
பிரான்ஸில் நடைபெற்ற முதல் குளிர்கால ஒலிம்பிக்ஸில் எத்தனை விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்?
பதினாறு நாடுகளைச் சேர்ந்த 250 தடகள வீரர்கள் பங்கேற்றனர்.
பிரான்ஸில் எந்த நகரில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் முதன் முதலாக நடைபெற்றது?
சமோனிக்ஸ் என்ற நகரில் நடைபெற்றது. 1924 ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி5,-ம் தேதி வரை முதல் குளிர்கால ஒலிம்பிக்ஸ் நடைபெற்றது. அன்றில் இருந்து இன்றுவரை கனடா நாட்டினர் பனி ஹாக்கி விளையாட்டில் சிறந்து விளங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமோனிக்ஸ் ஒலிம்பிக்ஸில் தோர்லெயிப் ஹாக் என்ற நார்வேயைச் சேர்ந்த ஸ்கீ சாம்பியன் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். பொதுவாகவே நார்வே மற்றும் வடஅமெரிக்க நாடுகள் குளிர்கால ஒலிம்பிக்ஸில் முன்னணி வகித்து வருகின்றன.
குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவலாகி 2018-ல் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் 92 நாடுகளைச் சேர்ந்த 2925 வீரர்கள் பங்கு கொண்டார்கள். நைஜீரியா, சிங்கப்பூர், ஈக்வேடார், எரித்ரியா, மலேசியா ஆகிய நாடுகள்கூட முதன் முறையாக அப்போது பங்கேற்றன
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT