Published : 13 Feb 2020 11:06 AM
Last Updated : 13 Feb 2020 11:06 AM

டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்-13: இன்று மின்னணுவியல் என்றாலே மென்பொருள்தான்!

பாலாஜி

மின்னணு துறையில் 1970-ம் ஆண்டில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஹார்டுவேரில் இருந்து இத்துறை பிரிந்தது. மின்னணு துறை வேறு, ஹார்டுவேர் (வன்பொருள்) வேறு என்ற நிலை உருவானது. அதை அன்றைய தமிழக மின்னணு துறை வல்லுநர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். இதனால் தமிழகம் இத்துறையில் பின்னடைவைச் சந்தித்தது.

தமிழக மின்னணு துறை பொறியாளர்கள் மற்றும் மாணவர்கள் மின்னணு என்றவுடன் மின்னணு பொருட்கள், இணைப்புகள், பற்றவைப்பு, PCB என ஹார்டுவேர் பற்றிய எண்ணத்தில் உள்ளனர். மென்பொருள் பிடிக்காத காரணத்தினால்தான் மின்னணு துறையைத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்லும் மாணவர்களை இன்றும் பார்க்க முடிகிறது.

அதே போல் தமிழகத்தில் இ.சி.இ. துறையில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்குக் கல்லூரியில் படிக்கும் போது எலக்ட்ரானிக் துறையில் மென்பொருளின் பங்கு பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனால் அவர்கள் வேலை தேடும் போது, ஒவ்வொரு எலக்ட்ரானிக் துறை நிறுவனமும் அவர்களிடம் மென்பொருள் C-மொழி மற்றும்C-புரோகிராமிங் பற்றி கேள்வி கேட்கும்.அப்போதுதான் அவர்களுக்கு எலக்ட்ரானிக்துறையில் C-மொழி மற்றும் C-புரோகிராமிங் அவசியம் பற்றிப் புரிகிறது.

C-மொழி தெரிந்தால்தான் வேலை!

இதை இப்போது குறிப்பிட காரணம் இனி மின்னணு இணைப்புகளை மென்பொருளைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தப் போகிறோம். இதற்கு C மொழியை பயன்படுத்தப் போகிறோம். இன்று எலக்ட்ரானிக்ஸ் என்றால் சாஃப்ட்வேர் என்ற நிலைமை உள்ளது. ஆகவே சாஃப்ட்வேர் எப்படி எழுதுவது என்று கற்றுக் கொள்வதும் அது எப்படி வேலை செய்கிறது என்பதை அறிந்து கொள்வதும் அவசியம். அதை விட்டுவிட்டு இணையதளத்தில் இருந்து மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினால் சாஃப்ட்வேர் கற்றுக்கொள்ள முடியாது.

மேலும் புதுப்புது மின்/மின்னணு சாதனங்களை உருவாக்க இயலாது. இப்போது ஒரு வெளியீட்டை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று பார்க்கலாம்.

ஸ்விட்சை ஆன்/ஆஃப் செய்வதன் மூலம்எளிதில் LED D1-ஐக் கட்டுப்படுத்தலாம். இதை மென்பொருள் கொண்டு கட்டுப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம். நேரடியாக சுவிட்சை பயன்படுத்துவதற்கு பதிலாகசாஃப்ட்வேர் மூலமாக கட்டுப்படுத்தப் போகிறோம். சுவிட்சை ஆன் செய்தால் LEDஒளிரும், சுவிட்சை ஆஃப் செய்தால் LED ஒளிராது.

ஆனால், எலக்ட்ரானிக்ஸில் உள்ளீடு மற்றும் வெளியீடு மட்டுமே உள்ளது.அதுவும் IC-பின்களாக இருக்கிறது. ஆகவே நாம் சுவிட்சை ஆன் செய்தால்பின்னில் 5V, சுவிட்சை ஆஃப் செய்தால்0V இருக்கும். IC-ல் நிறைய பின்கள்இருப்பதால் எந்த பின் என்று சொல்லவேண்டும். இதனை கீழ்க்கண்டவாறு பல்வேறு வகைகளில் எழுதலாம்.

P5 = 0; // பின் 5-ல் 0v தரவும்.

Output(5,0); // பின் 5-ல் 0v வெளியிடவும்

Write(5,0); // பின் 5-ல் 0v எழுதவும்.

இது நாம் எந்த கம்பைலர் பயன்படுத்துகிறோம், எந்த மைக்ரோகன்ட்ரோலரை பயன்படுத்துகிறோம் என்பதை பொருத்தது. முதலில் இதனை ஒரு புரொக்ராமாக எழுதி கம்பைலருக்குத் தர வேண்டும். அதற்கு சில விதிமுறைகள் உள்ளன அதன் படி எழுத வேண்டும்.

புரொக்ராம் எழுத பழகலாம் வாங்க!

பிரபலமான இரண்டு மைக்ரோ கண்ட்ரோலர் போர்டுகளுக்கு எவ்வாறு புரொக்ராம் எழுதுவது என்று பார்க்கலாம். C-மொழியில் ஒரு பிட் என்று கிடையாது. குறைந்தபட்சம் எட்டு பிட்கள் மட்டுமே உள்ளது. .C மொழியில் ‘=’ என்ற குறியீட்டிற்கு வலதுபுறம், இடதுபுறம் என இரண்டு பிரிவுகள் உள்ளன. வலதுபுறம் படிப்பதற்கும், செயல்களைச் செய்வதற்கும் மற்றும் இடது புறம் எழுதுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

அதேபோல் மைக்ரோ கன்ட்ரோலர் பின்களை ஒரு குழுவாக குறிப்பிடுவார்கள். ஒரு குழுவில் எட்டு அல்லது பதினாறு அல்லது 32 பின்கள் இருக்கும். குழுவை ஆங்கிலத்தில் போர்ட் (PORT) என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு பின்னிற்கும் ஒரு மதிப்பு இருக்கும்.

உதாரணமாக எட்டு பின்கள் உள்ள போர்டில் பின்களுக்கு 1, 2, 4, 8, 16, 32, 64, 128 என மதிப்பு இருக்கும். இது நமது தசம எண் முறையில் எவ்வாறு (1,10,100,1000,,..) என்று இருக்கிறதோ அதே போல இங்கு பைனரி முறையில் இருக்கும்.

பொதுவாக பின் 1 முதல் 8 வரை குறிப்பிடுவர். நமக்கு ஆரம்பம் எப்போதுமே ஒன்றுதான். ஆனால் எலக்ட்ரானிக்ஸில் ஆரம்பம் ‘0’. ஆகவே இதனை பின் 0 முதல் பின் 7 வரை என்று குறிப்பிடுவர். அதேபோல் ஒரு மைக்ரோ கன்ட்ரோலரில் ஏராளமான போர்ட்கள் இருக்கும்.

அதற்கு ‘P0=32’ என்று எழுதினால் மைக்ரோ கன்ட்ரோலர் பின் 5-ல் மட்டும் 5V தரும். நாம் 8 LED-களை 8 பின்னிலும்இணைத்தால், பின் 5-ல் இணைக்கப்பட்டுள்ள LED மட்டும் ஒளிரும்.

இந்த முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட LED -களையும் கட்டுப்படுத்தலாம். ‘P0=42’ என்று எழுதினால் சிறிது குழப்பம். பைரனரியில் 42 என்ற எண் கிடையாது. ஆகவே இந்த 42 என்ற எண்ணை 32 8 2 எனக் குறிப்பிடலாம். இந்த மூன்று பின்களில் இணைக்கப்பட்ட LED-கள் ஒளிரும்.

LED-க்கு பதிலாக எந்த மின் அல்லது மின்னணு பொருள்களையும் கட்டுப்படுத்தலாம். அதை பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்

கட்டுரையாளர்: பொறியியல் வல்லுநர் மற்றும் பயிற்றுநர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x