Published : 12 Feb 2020 11:01 AM
Last Updated : 12 Feb 2020 11:01 AM
ரெ.சிவா
கேரளாவில் அழகிய கிராமம் வண்ணாமலை. அங்கு பழமையான ஓர் அரசு உயர்நிலைப்பள்ளி. ஏறத்தாழ ஐம்பது மாணவ மாணவியர் படிக்கிறார்கள். படிப்பில் அக்கறை இல்லாத மாணவர்கள். ஆசிரியர்களும் அப்படியே.
விரைவில் பள்ளியை மூடி மருத்துவமனை ஆக்கி விடுவார்கள் என்பதே ஊரின் பேச்சு.
இது எல்லாவற்றையும் விட அப்பள்ளிக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. மாநிலத்தின் கல்வியமைச்சரின் தொகுதியில் உள்ள அப்பள்ளியில்தான் அவர் படித்தார் என்பதே அது.
ஒருவர்கூட தேரவில்லை
ஒவ்வொரு பொதுத்தேர்வு முடிவுகளை அவர் அறிவிக்கும் போதும் நீங்க படிச்ச பள்ளியோட ரிசல்ட் என்ன சார் என்று பத்திரிக்கையாளர்கள் கேலியாகக் கேள்வி கேட்பதும் ‘ஒருவர்கூட தேறவில்லை’ என்று வேதனையோடு அமைச்சர் பதில் சொல்வதும் வாடிக்கை.
தலைமையாசிரியர் உட்படப் பள்ளியில் பணியாற்றும் பலரும் வேறு வேலைகளையும் செய்கிறார்கள். அழிவை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் அப்பள்ளியில்தான் வேலை செய்வேன் என்று வேண்டி விரும்பிக்கேட்டு ஓர் ஆசிரியர் வந்திருக்கிறார் என்பது சமீபத்திய ஆச்சரியம்.
வினயச்சந்திரன் என்ற அந்த இளம் ஆசிரியர் பள்ளிக்கு வருகிறார்.
மாணவ மாணவியருடன் பேசுவது பள்ளியின் செயல்பாடுகளை கவனிப்பது என்றுஒரு சில நாட்கள் கழிகின்றன. தலைமையாசிரியரிடம் பேசி ஆசிரியர் கூட்டத்தை ஏற்பாடு செய்கிறார் வினயன்.
துணை நிற்கும் பள்ளிக் காவலர்
“நண்பர்களே, இங்கு வேலை பார்த்தாலும் பலருக்கு வெளி வேலைகளில் அதிக அக்கறை இருக்கிறது. கொஞ்சம் இங்கு படிக்கும் மாணவ மாணவியர் மீது அக்கறை வைத்தால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அவர்களைத் தேர்ச்சியடைய வைத்துவிடலாம். சில மாணவர்கள் பள்ளிக்கு வராமலே இருக்கிறார்கள். அவர்களின் வீடுகளுக்குச் சென்று பெற்றோரிடம் பேசி அழைத்து வரலாம்” என்று ஆசிரியர் கூட்டத்தில் பேசுகிறார் வினயன்.
வினயனின் பேச்சால் ஆசிரியர்கள் அனைவரும் கோபமடைகின்றனர். “புதிதாக வேலைக்கு வந்துவிட்டு எங்களை விமர்சனம் செய்கிறாயா? ” என்று சத்தமிட்டு வெளியேறுகின்றனர்.
தம்புரான் என்று செல்லமாக அழைக்கப்படும் பள்ளிக் காவலர் வினயனுக்குத் துணை நிற்கிறார். இருவரும் சேர்ந்து மாணவர்களின் வீடுகளுக்குச் செல்கின்றனர். மரியாதையும் அவமரியாதையும் கிடைக்கின்றன. சிறுவன் மனோவைச் சந்திக்கின்றனர். அப்பா இல்லை. அம்மா துபாயில் இருக்கிறார். பாட்டி இருந்தாலும் தனியே வசிக்கிறான் மனோ.
பத்தாம் வகுப்பு படிக்க வேண்டிய மனோ, உள்ளூர் சாராய வியாபாரியிடம் வேலை செய்கிறான். போலீசிடம் சிக்காமல் சாராயம் கடத்துவதில் அவன் கில்லாடி. அப்படியே மாட்டிக்கொண்டாலும் 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு சட்டப்படியான தண்டனை குறைவு என்பதாலேயே குழந்தைகளைச் சமூக விரோதிகள் பயன்படுத்துகிறார்கள்.
மனோவுடன் பேசி அவனைப் பள்ளிக்குவரவைக்கிறார்கள் ஆசிரியரும் பள்ளிக்காவலரும். ஊரில் உள்ள இளைஞர்கள், மாணவர்களின் துணையுடன் விடுமுறை நாளில்பள்ளியைத் தூய்மை செய்து, வெள்ளையடித்துப் பொலிவாக ஆக்குகிறார்கள்.
கைகோக்கும் ஆசிரியர்கள்!
வினயன் சொன்னபடியே சில மாற்றங்கள் பள்ளியில் நிகழ்ந்திருப்பதை பார்த்த ஆசிரியர்கள் அவருடன் இணைகிறார்கள். பள்ளிக்குத் தேவையான உதவிகள் வேண்டி கல்வி அமைச்சரைச் சந்திக்கிறார்கள். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாணவர்களைத் தேர்ச்சி அடைய வைத்தால் வேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்து தருவதாக அமைச்சர் கூறுகிறார். ஆசிரியர்கள் ஊக்கத்தோடும் புத்துணர்வோடும் கற்பிக்கத் தொடங்குகின்றனர்.
தன்னைக் குரங்கு போல கார்டூன் வரைந்து கேலி செய்த மாணவன் யாரென்று கண்டுபிடித்துத் தண்டிக்காமல் வரைபொருட்கள் தந்து நிறைய வரையுமாறு ஊக்குவிக்கிறார் வினயன். அந்த மாணவர் மாநில அளவிலான ஓவியப் போட்டியில் பரிசு பெற்றதை ஊரே கொண்டாடுகிறது.
தொடர்ந்து பள்ளிக்கு வந்தாலும் அவ்வப்போது சமூக விரோதி சொல்லும் வேலைகளைச் செய்கிறான் மனோ. போலீசிடம் மாட்டிக்கொண்ட மனோவைக் காப்பாற்ற வேண்டி சாராயம் காய்ச்சும் இடம் குறித்து போலீசுக்குச் சொல்கிறார் வினயன். அதனால் கோபம் கொண்ட தீயவர்களால் தாக்கப்படுகிறார்.
பத்தாம் வகுப்பில் படிக்கும் தனது மகளுக்குத் திருமணம் செய்துவைக்க முயல்கிறார் சாராய வியாபாரி. இளம் வயதில் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். என்று எச்சரிக்கிறார் வினயன்.
வெற்றிவிழா காணும் வேளை
ஆசிரியர்கள், பெற்றோர் ஒத்துழைப்புடன் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பொதுத்தேர்வில் வண்ணாமலை மாதிரி உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் அனைவரும் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுத் தேறியிருப்பதாக மகிழ்ச்சியுடன் கல்வியமைச்சர் அறிவிக்கிறார். ஊரே விழாக்கோலம் கொண்டு தங்கள் வெற்றியைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். மாபெரும் வெற்றிவிழா நடைபெறுகிறது. கல்வி அமைச்சர் வந்து ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் பாராட்டுகிறார்.
பல்வேறு பள்ளிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாக எடுக்கப்பட்ட மலையாளப்படம் ’மாணிக்கக்கல்லு’. தொடக்கத்தில் ஆசிரியர்களைக் கடுமையாக விமர்சித்தாலும் இறுதியில் கொண்டாடுகிறது கதை. எளிய மக்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளையே நம்பி இருக்கிறார்கள்.
குறைகளைச் சொல்லிக்கொண்டும் புலம்பிக்கொண்டும் இருக்கும் ஆசிரியர்களே அதிகம். மாற்றத்தின் முதல் குரல் எழுவதே முக்கியம். அப்படி எழும் குரல் நிச்சயமாக மாற்றங்களை விதைக்கும். மாற்றங்களை பேசுபவர்களுக்கு மாபெரும் பொறுமையும் வேண்டும் என்பதையும் இப்படம் தெளிவாகக் கூறுகிறது.
படத்தின் பெயர் : மாணிக்கக்கல்லு ஆண்டு : 2011 மொழி : மலையாளம். |
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், எழுத்தாளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT