Published : 10 Feb 2020 11:57 AM
Last Updated : 10 Feb 2020 11:57 AM
முனைவர் என்.மாதவன்
வளமையான வங்காள குடும்பத்தைச் சேர்ந்த வழக்கறிஞரின் மகனாகப் பிறந்தார். பள்ளிப்படிப்பில் படுசுட்டி. கல்லூரியில் இளங்கலை தத்துவத்தில் மாநிலம் போற்றிய வெற்றி. இங்கிலாந்து சென்று இன்றைய ஆட்சிப்பணி போன்று அன்றைய ஐசிஎஸ் தேர்விலும் வெற்றி பெறுகிறார்.
இந்தியாவின் ஐசிஎஸ் அலுவலர்களில் ஒருவராக பணியமர்கிறார். எவ்வளவு வசதியான வாழ்க்கை அவருக்கு அமைந்தது. ஆனால் அத்தனையையும் உதறித் தள்ளிவிட்டு நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் இறங்குகிறார். மகாத்மா காந்தியடிகளுடன் உடன்பட்டும் முரண்பட்டும் செயல்படுகிறார்.
ஆனால், என்றுமே தாய்நாட்டின் நன்மையைத் தவிர தன் நன்மையை யோசிக்கக்கூட நேரமில்லாமல் மடிந்தார். அவர்தான் சுபாஷ் சந்திரபோஸ். இந்தி மொழியில் நேதா என்றால் தலைவன். தலைவர் அவர்களே என்று பொருள் படும்படியாக நேதாஜி என்ற அடைமொழி அவரது பெயருடன் சேர்ந்தது.
தலைவர்களின் கருத்து வேறுபாடு!
காந்தியடிகளுக்கு இணையாகக் களத்தில்நின்றாலும் இருவருக்குமிடையே பொருளாதாரக் கொள்கை மற்றும் போராட்ட முறை தொடர்பாக கடும் கருத்துவேறுபாடுகள் இருந்து வந்தன. நேதாஜி இந்தியாவின் தொழிற்கொள்கை மேலை நாடுகளில் இருப்பதைப் போல் பெருந்தொழில்களை அமைத்து பெரிய அளவில் செய்யப்பட வேண்டுமென நினைத்தார்.
ஆனால், காந்தியடிகள் இந்தியா கிராமங்களில் வாழ்கிறது ஒரு பெரிய தொழிற்சாலையை விடசிறிய அளவிலான எண்ணற்ற தொழிற்கூடங்கள் கிராமங்களை உயிர்ப்புடன் பாதுகாக்கும் என்றார்.
நேதாஜி, “மயிலே மயிலேஎன்றால் இறகு போடாது. அதனிடமிருந்து இறகுகளை பிடுங்குவதன் மூலமாக எப்படிஇறகு கிடைக்குமோ அப்படி ஆங்கிலேயர்களுடன் ஆயுதம் தாங்கிய போராட்டம் மூலமாகவே சுதந்திரத்தை அடையமுடியும்” என்றார். காந்தியடிகள் இதற்கு நேர் எதிராக அகிம்சை மூலமும் சத்தியாகிரகம் மூலமும் தனது போராட்டங்களை நகர்த்தினார்.
எதிர்பாராத திருப்பம்!
நேதாஜி, காங்கிரஸ் அமைப்பில் செயல்பட்ட நேரு உள்ளிட்ட அனைத்து இளைஞர்களுக்கும் உத்வேகமாகத் திகழ்ந்தார். 1938-ல்நடைபெற்ற தேர்தலில் காந்தியடிகள் தனதுவேட்பாளராக பட்டாபி சீதாராமையா என்பவரை நிறுத்துகிறார். அவரை எதிர்த்து நேதாஜியும் போட்டியிட்டார்.
காந்தியடிகள் முன்மொழிந்த வேட்பாளர் தோல்வியைத் தழுவி நேதாஜி வெற்றி பெற்றார். இது குறித்து கருத்து தெரிவித்த காந்தியடிகள் பட்டாபி சீதாராமையாவின் தோல்வி எனது தோல்வி என்றார். அதற்குப் பிறகு நடைபெற்ற சில கூட்டங்களில் தொடர்ந்து காந்தியடிகள் கருத்துகளுக்கு நேர் எதிரானகருத்துக்களைப் பகிர்ந்ததால் நேதாஜி காங்கிரஸ் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதற்குப் பிறகு நேதாஜி பல்வேறு மாறுவேடங்கள் தரித்து உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்றார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்த இந்திய தேசிய ராணுவத்தினை உருவாக்கினார். ஜப்பான், ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் ஆதரவினை பெற்றார்.
தோளை தட்டிய ஹிட்லர்
நேதாஜியின் கொள்கை மிகத் தெளிவானது. எதிரிக்கு எதிரி நண்பன் என்பதே அது. அமைதி என்பது சொற்களால் மட்டுமல்ல வாளாலும் கொண்டுவர இயலும் என்பதே அவற்றில் முக்கியமான சிலவாகும். ஹிட்லரைச் சந்திக்க ஜெர்மனிக்கு நேதாஜி ஒரு முறை சென்றார். அப்போது ஒருவர் ஹிட்லர் போல வேடமணிந்து நேதாஜியை அணுகினார்.
நேதாஜி கண்டுகொள்ளவே இல்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து உண்மையான ஹிட்லர் வந்து நேதாஜியின் தோளைத் தட்டினாராம். இவரும் கைகளைக் குலுக்கினாராம். இதுபற்றி எப்படி நான்தான் உண்மையான ஹிட்லர் எனக் கண்டறிந்தீர்கள் என்று கேட்டதற்கு, ஹிட்லர் போலஅனைவரும் வேடமணியலாம். ஆனால் நேதாஜியின் முதுகினைத் தட்ட உண்மையான ஹிட்லருக்கே வீரமிருக்கும் என்றாராம் நேதாஜி.
வளமையாக வாழ வாய்ப்பு இருந்தும் அதனைத் துறந்து காந்திஜி போன்ற ஆளுமையின் கொள்கைகளில் முரண்பாடு கொண்டாலும் தனக்கென ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து அதில் உறுதியுடன் பயணம் செய்ததால்தான் நேதாஜியை நாம் இன்றும் நினைவுகூர்கிறோம். முரண்பாடுகள் நம்மை முடக்கிவிடக் கூடாது மாறாக புதிய பாதை காணும் வேகத்தை அளிக்க வேண்டும்.
(தொடரும்)
கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT