Published : 10 Feb 2020 11:52 AM
Last Updated : 10 Feb 2020 11:52 AM
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் பாயும் நதிகளில் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிற ஒன்று 'மஹி'. மத்திய பிரதேசம் தார் மாவட்டம், மிண்டா கிராமத்தில் மஹி உற்பத்தி ஆகிறது. இது, விந்திய மலைப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில், சர்தார்பூர் நகருக்குத் தெற்கே உள்ளது. மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து வட மேற்காகப் பாய்ந்து, ராஜஸ்தான் மாநிலத்தின் வகாட் மண்டலம் (Vagad region) வழியே பயணிக்கிறது. தென் மேற்காக, குஜராத் மாநிலத்துக்குள் நுழைகிறது.
அரேபிய கதைகளோடு தொடர்பு
பரோடா நகரின் புறப் பகுதிகளைத் தொட்டுச் சென்று, ‘கம்பட்' வளைகுடாவில் (Gulf of Khambhat) அரபிக் கடலில் சங்கமிக்கிறது. நதியின் மொத்த நீளம் 580 கி.மீ. தாப்தி, சபர்மதி, நர்மதா போன்றே, மஹியும் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மும்பை மாநகரின் ‘மஹி காந்தா’ (Mahi Kantha) இந்த நதியின் பெயரைக் கொண்டே வந்தது. பிரிட்டிஷ் இந்தியாவில், பம்பாய் மாநிலம் (Bombay Presidency) குஜராத் மண்டலத்தில் இருந்த ராஜ்ஜியங்களின் (princely states) தொகுப்பு ‘மஹி காந்தா' ஆகும்.
20-ம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே (1901) இங்கே சுமார் 4 லட்சம் பேர் வசித்தனர். இதே போன்றுதான், இங்கு வசிக்கும் ‘மேஹ்வாசிஸ்’ (mehwasis) இனத்தவரின் பெயரும். அரேபியக் கதைகளில் அதிகம் குறிப்பிடப்படும், மேட்டு நிலக் கொள்ளையர்கள் இவர்கள்.
மஹி ஆற்றுப்படுகை, தரை மட்டத்தை விடவும் கீழே இருப்பதால், பாசனத்துக்கு அதிகம் பயன்படுவதில்லை. மிகப் பரந்து இருப்பதால் பெரிய ஆறு என்று பொருள்படும் விதத்தில் ‘மஹிசாகர்’ என்று அழைக்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் தற்போது, ‘மஹிசாகர்’ என்று புதிய மாவட்டமே உருவாக்கப்பட்டுள்ளது. ஆற்றை ஒட்டி எண்ணற்ற கோயில்கள் உள்ளன. ஏராளமானோர் வழிபடுகின்றனர்.
நூறு தீவுகளின் நகரம்
இரு முறை, ‘tropic of Cancer’ வழியே செல்கிறது. அது என்ன? பூமத்திய ரேகைக்கு வடக்கே, நேரே தலைக்கு மேலே செங்குத்தாக, சூரியன் வருகிற பகுதி. அநேகமாக ஜூன் மாதம் இது நிகழும். இந்தியாவில், 8 மாநிலங்கள் இப்பகுதியில் அடங்கும். இவை: மிசோரம், திரிபுரா, மேற்கு வங்கம், சத்திஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், குஜராத் & ராஜஸ்தான், மஹி ஆற்றின் மீது, ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா நகரின் அருகே, ‘மஹி பஜாஜ் சாகர் அணைக்கட்டு’ (Mahi Bajaj Sagar Dam) கட்டப்பட்டுள்ளது.
இங்கு வசிக்கும் மக்களின் தண்ணீர்த் தேவைக்குப் பயன்படுகிறது. 140 மெகா வாட்ஸ் மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. இந்த அணைக்கு எளிதில் சென்று வரலாம். நல்ல சாலைப் போக்குவரத்து உள்ளது.
இதில் முதலைகளும் அரிய வகை ஆமைகளும் உள்ளன. அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் ஏராளமான தீவுகள் உள்ளன. அதனால், பன்ஸ்வாரா ‘நூறு தீவுகளின் நகரம்’ (City of Hundred Islands) என்றும் அழைக்கப்படுகிறது. இதே போன்று, குஜராத் மாநிலத்தில், காதனா (Kadana Dam), வனக்போரி (Wanakbori) என்று இரண்டு அணைகள் உள்ளன.
இந்தியாவின் பிற ஆறுகளைப் போன்றே, 'மஹி' நதியும் மனிதர்கள் ஏற்படுத்திய மாசு காரணமாகப் பல பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. ஆறுகள், மலைகள், காடுகள், கடல்கள்... நமக்காக இருக்கின்றன. அவற்றைத் தூய்மையுடன் பாதுகாத்தல் நமக்குத்தானே நல்லது!
(தொடர்வோம்)
கட்டுரையாளர், ‘நாட்டுக்கொரு பாட்டு’, ‘பொருள்தனை போற்று’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT