Published : 06 Feb 2020 11:39 AM
Last Updated : 06 Feb 2020 11:39 AM
ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
ஹெலிகாப்டரின் பிரதான விசிறியை இயக்குவது இன்ஜின். அது செயலிழந்தால் விசிறிக்கு சுழற்சிக்கான ஆற்றல் கிடைக்காது. எனவே ஹெலிகாப்டர் தொடர்ந்து பறக்க முடியாமல் விபத்து நிகழும். இந்த நேரத்தில் விபத்தில் இருந்து தப்பிக்க ஒரு வழியுண்டு.
ஸ்விச்சை அணைத்த பிறகும் மின்விசிறி தொடர்ந்து சுழலுவதை கவனித்திருப்பீர்கள். இந்த நுட்பம்தான் ஹெலிகாப்டரை சில விபத்துகளில் இருந்து காப்பாற்றுகிறது. எப்படி?
நியூட்டனும் ஹெலிகாப்டரும்
இன்ஜின் செயலிழக்கும் தருணங்களில், ஒரு பாறை கீழே விழுவதைப் போல ஹெலிகாப்டர் விழாது. ஏன்? இன்ஜினின் கட்டுப்பாட்டில் இருந்து ஹெலிகாப்டரின் விசிறிகள் தானியங்கி முறையில் விடுவிக்கப்படும். நியூட்டனின் முதலாம் விதிப்படி விசிறிகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். நியூட்டனின் முதலாம் விதி நினைவிருக்கிறதா?
‘ஒவ்வொரு பொருளும் புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நேர்க்கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும்’. செயலிழந்த இன்ஜினில் இருந்து விடுவிக்கப்படுவதால், விசிறி தொடர்ந்து தனது சுழற்சியில் இருக்கும். இந்த நேரத்தில், விமானி சுற்றிக்கொண்டிருக்கும் விசிறியின் நிலையைச் சற்று மாற்றுவார்.
தான் சுற்று?
இன்ஜினால் இயக்கப்படும் போது, விசிறி காற்றை மேலிருந்து இழுத்து கீழ் நோக்கித்தள்ளும். இதனால் ஹெலிகாப்டர் முன்னோக்கி செல்கிறது (படத்தை கவனியுங்கள்). எஞ்சின் செயலிழந்த பிறகு விசிறியின் நிலை மாற்றப்பட்டு, காற்று கீழிருந்து மேல்நோக்கி செல்லும். இப்படி மேல் நோக்கிச் செல்லும் காற்றினால் விசிறி தொடர்ந்து சுழன்றபடி இருக்கும். ஹெலிகாப்டர் தொடர்ந்து சமநிலையில் பறக்க முடியாது. ஆனால், வேகத்தை குறைத்து ஹெலிகாப்டரை பத்திரமாக தரையிறக்க முடியும். இப்படி தரையிறக்கும் நுட்பத்தை ‘தான் சுற்று’ (Auto Rotation) என்பர்.
இயக்கு பொறிகள் முக்கியம்
பாதுகாப்பு கருதி நவீன ஹெலிகாப்டரில் இரண்டு இன்ஜின்கள் பொருத்தப்படுகின்றன. ஒன்று செயலிழந்தாலும் மற்றொன்றின் மூலம் தொடர்ந்து ஹெலிகாப்டரை இயக்கி பயணத்தைத் தொடரலாம். ‘தான் சுற்று’ சோதனைகளை வெற்றிகரமாக முடித்த பிறகே ஹெலிகாப்டர்களுக்கு ‘பறக்குந்தகுதி’ (Airworthiness) சான்றிதழ் வழங்கப்படும். விமானி பயிற்சியிலும் இப்படித் தரையிறக்கி பயிற்சி பெற்ற பிறகே உரிமம் வழங்கப்படும்.
(தொடரும்)
கட்டுரையாளர், ஹெலிகாப்டர் பற்றி முதல் தமிழ் நூலான ‘எந்திரத்தும்பிகள்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT