Published : 06 Feb 2020 11:19 AM
Last Updated : 06 Feb 2020 11:19 AM
ஆர். ரம்யா முரளி
வயிறு மற்றும் அதனை சார்ந்த உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தும் ஆசனங்கள் பல இருந்தாலும், சில குறிப்பிட்ட ஆசனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அத்தகைய ஒரு ஆசனம்தான் அபானாசனா.
தரை விரிப்பில் முதுகு தரையில் படும்படி படுக்கவும். கால் முட்டிகளை மடித்து, பாதங்களை தரையில் பதியுமாறு வைக்க வேண்டும். கைகளை உடலை ஒட்டியவாறு வைத்துக் கொள்ளவும். இதுதான் ஆரம்ப நிலை.
அபானாசனா செய்வது எப்படி?
இரு முட்டிகளையும் இரு உள்ளங்கைகளால் பிடிக்கவும். தரையில் இருந்து பாதங்களை உயர்த்தவும். முழங்கை நேராக இருக்க வேண்டும். இப்போது மெதுவாக மூச்சை விட்டபடியே, முழங்கையை சற்று மடக்கியவாறு முட்டியை மார்புக்கு அருகே கொண்டு வர வேண்டும். முட்டி எந்த அளவிற்கு மார்புக்கு அருகே கொண்டு வர முடியுமோ அந்த அளவிற்கு கொண்டு வந்தால் போதுமானது.
திரும்பவும் மூச்சை இழுத்தபடி பழைய நிலைக்கு வர வேண்டும். பாதம் தரையில் இருந்து சற்று உயர்த்தி, முட்டி மார்புப் பகுதியில் இருந்து சற்று விலகி, முழங்கை நேராக வைக்க வேண்டும். கைகள் முட்டியின் மீது இருக்க வேண்டும். இந்தப் பயிற்சியின் போது, தாடை கீழ் நோக்கி இருக்கட்டும். முட்டியை மார்பின் அருகே கொண்டு வரும் போது இடுப்பு பகுதியைத் தூக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேப் போல் முட்டியை வெளியே விலக்கும் போதும், தலை மற்றும் முதுகுப் பகுதியை மேலே தூக்கிச் சிரமப்பட வேண்டாம்.
பலன்கள்
இந்த ஆசனப் பயிற்சி பார்ப்பதற்கு எளிமையாக இருப்பினும், இதற்கான பலன்கள் அதிகம். வயிறு மற்றும் அதன் உறுப்புகளை சுற்றிச் சேரும் அசுத்தமான வாயு வெளியேற்றப்படுகிறது. அடிவயிற்று பகுதிகளில் உலவும் வாயு அபான வாயு என்று பெயர். இதை சுத்தம் செய்யக்கூடியது அபானாசனம். இதை பவன முக்தாசனம் என்றும் சொல்வதுண்டு.
சிலருக்கு ஒரு பக்கமாக முதுகு வலியோ அல்லது இடுப்பு வலியோ இருந்தால் இரு கால்களை மடக்கிச் செய்வதை போல், ஒரு கால் முட்டியை மட்டும் மார்புக்கு அருகே கொண்டு சென்று, பின் விலக்கிச் செய்யலாம். இதே போல் இரண்டு பக்கமும் செய்யலாம். இதனால் இன்னொரு பலனும் உண்டு. எந்த பக்கம் முட்டியை மடக்கி செய்கிறோமோ அந்த பக்க வயிற்று உறுப்புகள் இயக்கப்பட்டு பலன் பெறும்.
முதுகு வலிக்கு, இரண்டு கால்களைக் கொண்டு இந்தப் பயிற்சியை செய்யும் போது, முட்டிகளை அருகருகே வைத்துக் கொள்ளாமல் முதுகு வலிக்கு தகுந்தார் போல் சற்று தள்ளி வைத்து செய்யலாம். முட்டியை நீட்டி மடக்கி பயிற்சி செய்யும் போது, இடுப்பு பகுதியின் இயக்கத்திற்கு இந்த ஆசனம் நல்ல பலனை தரவல்லது. பயிற்சியின் போது தாடையைக் கீழ் நோக்கி வைத்திருப்பதால், தைராயிடு சுரப்பிகள் நன்றாக தூண்டப்படுகின்றன.
இந்தப் பயிற்சியில் சில நிமிடம் தங்கிசெய்யும் போது, வயிற்றில் உள்ள தேவையற்றகொழுப்புகள் கரையும். கடினமான ஆசனங்கள் செய்யும் போது ஏற்படக்கூடிய சிரமத்தை போக்குவதற்குச் செய்யப்படும் ஆசனம் இது. எந்த ஒரு பயிற்சியும் செய்ய முடியாத உடல்வாகு உள்ளவர்களும், உட்கார்ந்து கொண்டோ, படுத்தபடியோ செய்ய வைக்கக் கூடிய மிக பாதுகாப்பான ஆசனம் இது.
(யோகம் தொடரும்)
கட்டுரையாளர்: யோகா நிபுணர்.
எழுத்தாக்கம்: ப.கோமதி சுரேஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT