Published : 05 Feb 2020 10:51 AM
Last Updated : 05 Feb 2020 10:51 AM

கதை வழி கணிதம்-14: பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தது யார்?

இரா.செங்கோதை

பூஜ்ஜியம் ஒரு நாள் மிகுந்த சோர்வுடன் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து கொண்டே எதிரே வந்த எண் 5, “நண்பா, நீ ஏன் சோகமாக இருக்கிறாய்?” என்று கேட்டது.

அதற்கு பூஜ்ஜியம் என்னை பார்த்து சிலர் "உன்னை யார் கண்டுபிடித்தார்கள்? ஆர்யபட்டரா அல்லது வேறு ஏதேனும் நபரா? உன்னை கண்டறிந்தவர்களில் ஏன் இத்தனை குழப்பம்? என மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். எனக்கும் இதைப் பற்றி சரியாகத் தெரியாததால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன். இதுவே எனது சோகத்திற்குக் காரணம்” என்று பூஜ்ஜியம் கூறியது.

பெருமை சேர்த்த இந்தியர்கள்

“கவலைப்படாதே நண்பா! நான் உனக்கு விடையளிக்கிறேன்” என்ற எண் 5 தனது விளக்கத்தை தொடங்கியது: பூஜ்ஜியமே உன்னைக் கண்டுபிடித்தது யார் என சரிவரக் கூற இயலாது. இவ்வளவு ஏன், 5 ஆகிய என்னையும் மற்ற எண்களையும் கூட யார் கண்டுபிடித்தார்கள் என உறுதியாகக் கூறமுடியாது.

ஆனால், உனது இடமதிப்பு சிந்தனையை முதன்முதலில் கொடுத்தவர் இந்தியாவில் வாழ்ந்த முதல் ஆர்யபட்டர் ஆவார். அதுமட்டுமல்ல, உனது அடிப்படை கணித வாய்ப்பாடுகளான a 0=a,a-0=a,0 0=0,ax0=0,0/a=0 என்ற சமன்பாடுகளை முதன்முதலில் வழங்கியவர் மற்றொரு இந்திய கணித மேதை பிரம்மகுப்தர் ஆவார்.

இவர்களது சிந்தனைக்கு பிறகே உன்னை ஒரு எண்ணாக கருதி அறிவியல் முன்னேற்றம் நடைபெறத் தொடங்கியது. ஆர்யபட்டர் காலத்திற்கு முன்பு உன்னை சூனியம், வெறுமை, இல்லாமை, சைபர் போன்ற பல்வேறு பெயர்களில் பல குடியினர் பயன்படுத்தியுள்ளனர்.

ஆனால், உனக்கு எண் என்ற அந்தஸ்த்தை வழங்கி பெருமை சேர்த்தவர்கள் இந்தியர்களே என எண் 5 தெளிவாக எடுத்துரைத்தது. எனது வரலாற்றில் இந்தியர்கள் ஆற்றிய பெரும்பங்கினை எனக்கு விளக்கமாக கூறியதற்கு மிக்க நன்றி என எண் 5 இடம் கூறிவிட்டு பூஜ்ஜியம் மகிழ்ச்சியாக சென்றது.

குறிப்பு: பூஜ்ஜியத்திற்கு பயன்படுத்தும் வட்ட குறியீடு மத்திய பிரதேசத்தில் உள்ளகுவாலியர் நகரில் உள்ள ஓர் ஆலயத்தில்முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. இதையே நாம் இன்றுவரை பயன்படுத்துகிறோம்.

கட்டுரையாளர்: கணித ஆசிரியை, பை கணித மன்றம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x