Published : 27 Jan 2020 11:34 AM
Last Updated : 27 Jan 2020 11:34 AM
ஜி.எஸ்.எஸ்.
1928 ஒலிம்பிக்ஸ் எந்த நகரில் நடைபெற்றது?
நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில்நடைபெற்றது. இதற்கு முன்பும் இரண்டு முறை ஒலிம்பிக் போட்டிகள் நடத்த இந்த நகரம் கடுமையாக முயன்றது. ஆனால் 1928-ல்தான் இங்கு நடைபெற்றது.
இந்த ஒலிம்பிக்ஸுக்கு ஏதாவது தனிச்சிறப்பு உண்டா?
நிறைய உண்டு. முதன் முறையாக ஒலிம்பிக்ஸ் ஜோதி ஏற்றப்பட்டது இந்த ஒலிம்பிக்ஸில்தான். அந்த மரபு இன்று வரை பின்பற்றப்படுகிறது (ஆனால், ஒலிம்பிக்ஸ் ஜோதி தொடர் ஓட்டம் என்பது 1936 ஒலிம்பிக்ஸில்தான் தொடங்கப்பட்டது).
அதேபோல தொடக்க விழாவில் பல்வேறு நாடுகளின் அணிகள் பங்கேற்கும்போது முதல் அணியாக (ஒலிம்பிக்ஸின் தாயகமான) கிரீஸ் நாட்டு அணி இடம் பெற்றது. இறுதியாக அந்த ஒலிம்பிக்ஸ் நடைபெறும் நகரத்தின் அணி (அந்த ஆண்டு இது நெதர்லாந்து) இடம் பெற்றது. இன்று வரை இந்த மரபு பின்பற்றப்படுகிறது.
தடகள விளையாட்டுகள் 400 மீட்டர் தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டன. அதற்குப் பிறகு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இதுவே நிரந்தர ஏற்பாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. வேறொரு விதத்திலும் இந்த ஒலிம்பிக்ஸ் குறிப்பிடத்தக்கது. 16 நாட்களில் அனைத்துப் போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டு அவை வெற்றிகரமாக நடந்தேறின. இன்றுவரை இந்த 16 நாள் கணக்கு ஒலிம்பிக்ஸில் பின்பற்றப்படுகிறது (அதற்கு முன்பு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் மாதக்கணக்கில் நடைபெற்றன).
1928 ஒலிம்பிக்ஸ் போட்டியை தொடங்கியது யார்?
இளவரசர் ஹென்றிக். அந்தக் காலத்தில் பெரும் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஒலிம்பிக்ஸைத் தொடங்கி வைப்பார்கள். இந்த மரபுப்படி நெதர்லாந்தின் மகாராணி வில்ஹெல்மினாதான் ஒலிம்பிக்ஸைத் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் அப்போது அவர் நார்வேயில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தார்.
தவிர ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகள் மதங்களுக்கு அப்பாற்பட்டவை என்பதன் மூலம் ஒலிம்பிக்ஸ் கிறிஸ்தவ மதத்துக்கு எதிரானது என்ற எண்ணம் வேறு அவருக்குள் பதிந்திருந்தது. எனினும் இறுதி நாளில் வந்து பரிசுகளை மட்டும் வழங்கினார்.
1928 ஒலிம்பிக்ஸில் நட்சத்திரங்கள் யார்?
நீச்சலில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றார் ஜானி வெயிஸ் முல்லர்.பின்லாந்தைச் சேர்ந்த பாவோ நுர்மி 10,000 மீட்டர்பந்தயத்தில் தனது ஒன்பதாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றார். கனடாவைச் சேர்ந்த பெர்ஸி வில்லியம்ஸ் 100 மீட்டர், 200 மீட்டர் ஆகிய இரண்டு ஓட்டப்பந்தயங்களிலும் முதலிடத்தைப் பெற்று பலரை ஆச்சரியப்படவைத்தார்.
அப்போது கால்பந்தும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இருந்தன. இறுதிச் சுற்றில் அர்ஜெண்டினாவைச் வென்று உருகுவே முதலிடத்தைப் பெற்றது. இந்த இரு நாடுகளுமே தென்அமெரிக்காவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைத் தலைநிமிர வைத்ததும் 1928 ஒலிம்பிக்ஸ்தானே?
உண்மைதான். அந்த ஒலிம்பிக்ஸில்தான் ஹாக்கி விளையாட்டில் இந்தியா தங்கப்பதக்கத்தை வென்றது. முதல்முறையாக ஒலிம்பிக்ஸ் ஹாக்கி போட்டிகளில் இந்தியா பங்கு கொண்டது அப்போதுதான்.
ஒவ்வொரு ஹாக்கி அணியிலும் 22 பேர் வரை இருக்க அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒன்பது நாடுகள் பங்குபெற்றன. இதில் இரண்டாம் இடத்தை நெதர்லாந்தும், மூன்றாம் இடத்தை ஜெர்மனியும் பெற்றன. (1912க்குப் பிறகு ஜெர்மனி ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கு கொண்டது இதுவே முதல் முறை.) பதினெட்டு போட்டிகளில் 69 கோல்கள் போடப்பட்டன. மிக அதிகமான கோல்களைப் போட்டவர் நமது தியான்சந்த்தான் - 14 கோல்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT