Published : 27 Jan 2020 11:30 AM
Last Updated : 27 Jan 2020 11:30 AM

நதிகள் பிறந்தது நமக்காக! - 12: நகரங்களை இணைக்கும் காளி சிந்து நதி

ராஜஸ்தான். இந்திய பூகோளம் படிக்கிற எல்லாருக்கும் பரிச்சயமான மாநிலம். இங்குதான் ‘தார்' பாலைவனம் அமைந்து உள்ளது. இந்த மாநிலத்தில் ஆறுகளுக்கும் குறைவில்லை. அவற்றில் ஒன்றுதான் ‘காளி சிந்து'.

இந்த நதி, யமுனை ஆற்றுப்படுகையைச் சேர்ந்தது. சிலர் இதனை கங்கையைச் சேர்ந்தது என்றும் சொல்கிறார்கள். மத்தியபிரதேசம் தேவதாஸ் மாவட்டம் ‘பாக்லி’ (Bagli) என்கிற இடத்தில் விந்திய மலையின்வட சரிவில் உற்பத்தி ஆகிறது காளி சிந்துநதி. ம.பி. தலைநகர் போபால். அந்த மாநிலத்தின் மற்றொரு முக்கிய நகரம் இந்தூர். இவ்விரு நகரங்களையும் இணைக்கிறது காளி சிந்து.

நெடுஞ்சாலையைக் கடக்கும் ஆறு

ம.பி.யில் உள்ள மால்வா மண்டலத்தின் மிகப் பெரிய நதி இதுவே. ஷாஜப்பூர், ராஜ்கர் (Rajgarh) மாவட்டங்களுக்கு இடையே கோடு போட்டாற் போல் ஓடுகிறது. ‘சோன்கட்ச்’ (Sonkatch) அருகே இந்த ஆறு, தேசிய நெடுஞ்சாலையை (எண் 18) கடக்கிறது. எனவே, வெள்ளப் பெருக்கு ஏற்படுகிற போது, சாலைப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்படுகிறது.

‘பிண்டா’ (Binda) கிராமத்தில் இந்த ஆறு, ராஜஸ்தான் மாநிலத்துக்குள் நுழைகிறது. ஜலாவர் (Jhalawar) & கோட்டா (Kota) மாவட்டங்களில் பாய்கிறது. ராஜஸ்தான் பாரன் (Baran) மாவட்டத்தில் காளி சிந்து நதி, சம்பல் ஆற்றுடன் கலக்கிறது. ம.பி.யில் 405 கி.மீ., ராஜஸ்தான் மாநிலத்தில் 145 கி.மீ. என மொத்தம் 550 கி.மீ. நீளம் பாய்கிறது.

அலுமினியம் கிடைக்கிறது

இந்த நதியின் முக்கிய கிளை ஆறுகள்: பர்வன் (Parwan), நிவாஜ் (Niwaj), ஆஹு (Ahu) குவாரி (Kuwari) & பேட்வா (Betwa)பார்பன் நதி - ம பி யில் தோன்றி ராஜஸ்தானில் கலக்கிறது. காளி சிந்து நதியின் கிளை ஆறு. ம.பி. செஹோர் (Sehore) மாவட்டத்தில் தோன்றி, ஷாஜப்பூர், ராஜ்கார் வழியே பாய்கிறது. ஆஹு கக்ரான், ஜலாவர் & கோட்டா கிளை ஆறுகள் ராஜஸ்தான் வழியே பாய்கின்றன.

கவனம் பெறாத கோட்டை

காளி சிந்து பாயும் வழியில் அலுமினியம் அதிகம் கிடைக்கிறது. காளி சிந்து அணைக் கட்டு ராஜஸ்தான் ஜலாவர் மாவட்டத்தில் உள்ளது. ‘குண்டாலியா’ மிகப் பெரிய நீர்ப்பாசனத் திட்டம். வரலாற்று சிறப்புமிக்க ‘கக்ரான் கோட்டை’ (Gagron Fort) ஜலாவரில் இருந்து 12 கி. மீ. தொலைவில் உள்ளது.12ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டது.

இன்னமும் சுற்றுலாப் பயணிகளின் கவனம் பெறாத இடம் இது. கோட்டையைச் சுற்றிலும் பறவைகள் மிகுந்து காணப்படுகின்றன. காலை, மாலை நேரசூரிய ஒளியில், அற்புதமாகக் காட்சி அளிக்கும் ‘கக்ரான் கோட்டை’ புராதன சின்னங்களில் ஒன்று.

காளி சிந்து பார்க்க வேண்டுமா? ரயில் வசதி இருக்கிறது. பேருந்து மூலம் ஷாஜபூர் போனால், அங்கிருந்து 17 கி.மீ. விமானத்தில் போகிறவர்கள் இந்தூரில் அல்லது போபாலில் இறங்கலாம். காளி சிந்து ஓர் வற்றாத ஜீவ நதி. எனவே எந்த மாதத்திலும் இந்த நதியைக் காணச் செல்லலாம். போய்ப் பார்ப்போமா...?

(தொடர்வோம்)
கட்டுரையாளர், ‘நாட்டுக்கொரு பாட்டு’, ‘பொருள்தனை போற்று’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x