Published : 13 Jan 2020 09:27 AM
Last Updated : 13 Jan 2020 09:27 AM
தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்
பிளஸ் 2 உயிரி-விலங்கியல்
விலங்கியலின் பாடங்கள் தேர்வு நோக்கத்துக்கானவை மட்டுமல்ல. பல்வேறு மருத்துவ உயர் கல்விகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கும் அவை அவசியமானவை. மேலும் நமது வாழ்க்கைக்கு அடிப்படையாகவும், நடைமுறை பிரச்சினைகளை எதிர்கொள்ளவும், விழிப்புணர்வு பெறவும் விலங்கியல் பாடங்கள் துணை செய்யும்.
இந்தப் புரிதலுடன் படிக்கத் தொடங்குவது மதிப்பெண்கள் குவிப்பதிலும் உதவும்.
உயிரியலின் இரு பகுதிகளான உயிரி-தாவரவியல் இப்பகுதியில் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். உயிரி-விலங்கியலை இங்கே பார்ப்போம்.
வினாத்தாள் அமைப்பு
பிரிவு 1: இப்பிரிவில் 8 ஒரு மதிப்பெண் வினாக்கள் அமைந்துள்ளன.
பிரிவு 2: 6-லிருந்து 4 வினாக்களுக்கு பதிலளிப்பதாக 2 மதிப்பெண் வினாக்கள் அமைந்துள்ளன.
பிரிவு 3: 5-லிருந்து 3 வினாக்களுக்கு விடையளிப்பதாக 3 மதிப்பெண் வினாக்கள் அமைந்திருக்கும். அவற்றில் ஒன்று கட்டாய வினாவாகும்.
பிரிவு 4: ‘அல்லது’ வகையிலான இரு5 மதிப்பெண் வினாக்கள் இப்பிரிவில் உள்ளன.
அதிக மதிப்பெண்களுக்கு
ஒரு மதிப்பெண் வினாக்களில் ஒன்றிரண்டு மட்டுமே பாடங்களின் பின்னிருக்கும் நேரடி வினாக்களில் இருந்து கேட்கப்படும். ஏனைய வினாக்கள் பாடங்களின் உள்ளிருந்தே கேட்கப்படும். பொருத்துக, கூற்று சரியானதா, கூற்றுக்கான காரணம் என இந்த 8 வினாக்களும் 8 விதமாய் இடம்பெறும். முக்கிய பாடக் கருத்துக்களை அடிக்கோடிட்டு படிப்பது இந்த வினாக்களின் திருப்புதலுக்கு உதவும்.
கிரியேட்டிவ் வினாக்களுக்கு நீட்நுழைவுத் தேர்வுக்கான மாதிரி வினாக்களில் இருந்தும் பயிற்சி பெறலாம். SCERT இணையதளத்தின் மூலம்வீடியோ வடிவிலான பாடக் கருத்துக்கள், திக்ஷா செயலி, ‘க்யூ.ஆர். கோட்’ வாயிலான இணைப்புகள் ஆகியவையும் கிரியேட்டிவ் வினாக்களை எதிர்கொள்ள உதவும். ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள்NCERT வீடியோக்களில் இருந்தும் பயனடையலாம்.
2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்களுக்கு இடையே பெரிய வேறுபாடு கிடையாது. இரு பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 11 வினாக்கள், விலங்கியலின் 12 பாடங்களில் இருந்தே இடம்பெறுகின்றன. எனவே 2 மற்றும் 3 மதிப்பெண்களை பொருத்தவரை எந்த பாடத்தையும் தவிர்க்கக் கூடாது. இவற்றில் ‘பயன்பாடுகள், பாதுகாப்பு முறைகள், நோய் அறிகுறிகள், மனிதநலன் குறைபாடுகள், இனப்பெருக்க முறைகள், முக்கியத்துவம், நுண்ணுயிரிகளின் பயன்கள், தகவமைப்புகள், விளைவுகள், பாதுகாப்பு முறைகள், கட்டுப்படுத்தும் முறைகள், சுகாதார முறைகள்’ குறித்தான வினாக்கள் முக்கியமானவையாகும்.
5 மதிப்பெண் வினாக்களுக்கு, முதல் இரு அலகுகளைப் படித்து ஒரு வினாவுக்கும், கடைசி இரு அலகுகளை படித்து இரண்டாவது வினாவுக்கும் தயாராகலாம். 5 மதிப்பெண்ணுக்கு விடையளிக்கையில், பக்கங்களை நிரப்பாமல் 10 பாயிண்டுகளேனும் எழுதுவது அவசியம். வினாக்களில் படம் மற்றும் எடுத்துக்காட்டுகளை கேட்காவிட்டாலும், அவசியமெனில் அவற்றை எழுதுவது நல்லது.
கருத்து வரைபடமாக எழுதியும் அதற்கான மதிப்பெண்களைப் பெறலாம். 5 மதிப்பெண் வினாக்கள் பெரும்பாலும் பாடங்களின் பிற்பகுதியில் உள்ள வினாக்களில் இருந்தே கேட்கப்படும். இந்த வினாவும் ஒற்றை 5 மதிப்பெண் வினாவாகவோ, ஒன்றுக்கு மேற்பட்ட 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்களின் தொகுப்பாகவோ அமையலாம்.
தேர்ச்சி நிச்சயம்
ஏதாவது இரண்டு அலகுகளின் பாடங்களை தேர்வு செய்தே தேர்ச்சியை உறுதி செய்யலாம். இதற்கு முதல் மற்றும் கடைசி அலகு, 2 மற்றும் 4-வது அலகுகள் உதவும். பாடங்களின் பின்னுள்ள வினாக்களை படித்திருப்பது தேர்ச்சியை உறுதி செய்யும். அனைத்துப் பாடங்களின் நிறைவாகவும் உள்ள பாடச்சுருக்கம் மற்றும் கருத்து வரைபடத்துடன், பாடங்களின் உள்ளிருக்கும் அட்டவணைகள் மற்றும் படங்களும் கூடுதல் மதிப்பெண்ணுக்கு உதவும்.
விலங்கியலை பொருத்தவரை புரிந்துகொண்டதன் அடிப்படையில் எழுதியும் கணிசமானமதிப்பெண்களைப் பெறலாம். 2-வதுஅலகினை கடினமாகக் கருதும் மாணவர்கள் அப்பாடத்தை முழுவதுமாக தவிர்க்காது, அதன் வினாக்களில் எளிதானவற்றை படிப்பது அவசியம்.
கூடுதல் கவனக் குறிப்புகள்
பாடங்களின் பின்பகுதி வினாக்கள், கருத்து வரைபடம், பாடச் சுருக்கம், தனிநபர் ஆய்வு ஆகியவற்றுடன் நினைவாற்றல், சிந்தித்தல் மற்றும் புரிந்துகொண்ட விதம் ஆகியவற்றைச் சோதிக்கும் வகையிலும் வினாக்கள் அமைந்திருக்கும்.
‘எவ்வாறு தீர்வு காண்பாய்?’, ‘இந்தச் சூழலில் நீ என்ன செய்வாய்?’ போன்ற வினாக்களுக்கு முழுவதுமாக சொந்த கருத்துக்களை எழுதுவதை விட, பாடக்குறிப்புகளின் அடிப்படையில் பதிலளித்தல் நல்லது.
5 மதிப்பெண் பகுதியில் வெறுமனே பக்கத்தை நிரப்பாது, சிறு குறிப்புகளாக எழுதி முக்கிய இடங்களை அடிக்கோடிட்டுத் தனித்து காட்டலாம். பத்திகளாக எழுதுவதை விட பாயிண்டுகளாக எழுதுவதே சிறப்பு.
5 மதிப்பெண் தவிர்த்து இதர மதிப்பெண்களுக்கான வினாக்களில் பெரும்பாலானவை பாடங்களின் உள்ளிருந்தே கேட்கப்படும். ‘நடைமுறை தொழில்நுட்பம், பயன்பாடுகள், விழிப்புணர்வு, கட்டுப்படுத்துதல், பராமரிப்புகள், தகவமைப்புகள், பிரச்சினைகள்-தீர்வுகள்’ உள்ளிட்டவற்றை வாழ்வியல் சார்ந்து மாணவர்கள் எதிர்கொள்வது குறித்து இந்த வினாக்கள் அமைந்திருக்கும்.
முக்கியமான படங்கள்
உயிரி-விலங்கியலில் ‘விந்து செல், அண்ட செல் அமைப்புகள், அவற்றின் உருவாக்கம், அண்டகத்தின் அமைப்பு, இம்யூனோகுளோபுலின் (immunoglobulin) அமைப்பு, டி.என்.ஏ. இரட்டிப்பாதல், ஆர்.என்.ஏ. மாதிரி, எய்ட்ஸ் வைரஸ் அமைப்பு’ ஆகியவை முக்கியமான படங்களாகும். 2 மற்றும் 3 மதிப்பெண்ணில் படம் வரைந்து பாகம் குறிக்க சொல்வதுடன், 2 மதிப்பெண்ணில் படத்தைக் கொடுத்து பாகங்களை குறிப்பதாகவும் வினாக்கள் அமையலாம்.
திருப்புதல்
இப்போது தொடங்கி தினசரி ஒரு மணி நேரமேனும் உயிரியல் திருப்புதலுக்கு ஒதுக்குவது, 3 முறையேனும் முழு திருப்புதல் செய்வதற்கு உதவும். கருத்து வரைபடத்தின் தலைப்புகளில் ஒவ்வொன்றையும் ஒரு வினாவாக உருவாக்கி அதற்குப் பதிலளிக்க முயல்வதும் நல்லதொரு திருப்புதலாக அமையும்.
நேர மேலாண்மை
ஒரு மதிப்பெண் பகுதிக்கு 15 நிமிடங்கள், 2 மற்றும் 3 மதிப்பெண் பகுதிகளுக்கு மொத்தமாக 30 நிமிடங்கள், 5 மதிப்பெண்களுக்கு 30 நிமிடங்கள் என நேரத்தை ஒதுக்கினால், விடைத்தாள் சரிபார்த்தலுக்கு 15 நிமிடங்கள் கிடைக்கும்.
பாடக் குறிப்புகளை வழங்கியவர்:
போ.ப்ரீவா,
முதுகலை ஆசிரியர்(விலங்கியல்),
டிவிஎஸ் அரசு மேல்நிலைப்பள்ளி,
திருக்குறுங்குடி,
திருநெல்வேலி மாவட்டம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT