Published : 10 Jan 2020 12:31 PM
Last Updated : 10 Jan 2020 12:31 PM
பிரியசகி
பள்ளி முடிந்து சோர்வுடன் வீட்டிற்கு வந்த ராணி மற்றும் குழந்தைகளை தனராஜ் தாத்தாவின் மசாலா பால் வாசனையோடு வரவேற்றது.
தனராஜ்: அம்மா ராணி, மசாலா பால்போட்டு வெச்சிருக்கேன், நீயும் குடிச்சிட்டு குழந்தைகளுக்கும் ஊத்திக்குடு.
ராணி: ஏன் மாமா உங்களுக்கு இந்த சிரமம், நான் வந்து போட்டுக்க மாட்டேனா?
தனராஜ்: இதுல என்னம்மா சிரமம் இருக்கு? வேலைக்கு போய்ட்டு களைப்பாவர்ற, உனக்கு உதவி செய்றதுல எனக்கு ஒரு சின்ன சந்தோஷம். இது உனக்கும் சந்தோஷம் தானே?
ராணி: உண்மைதான் மாமா. நாள் முழுசும் வேலை பார்த்துட்டு சோர்ந்து போய் வந்தாலும், நானேதான் சமையலறைக்குப் போய் வேலையத் தொடங்கனும்னு இல்லாம, சூடா மசாலா பால் கொடுத்து வரவேற்க அன்பான ஒருத்தர் காத்திருக்கார் என்ற எண்ணமே சந்தோஷமாத்தான் இருக்கு.
கீர்த்தி: எல்லா வீட்லயும் ஆம்பளைங்க நம்ம தாத்தா மாதிரியே இருந்தா நல்லாருக்கும் இல்லம்மா. போன வாரம் தமிழ் ஐயா பாலின சமத்துவம் பத்தி வகுப்பெடுத்தப்போ யார் யார் வீட்ல ஆம்பளைங்க சமையல், மற்ற வீட்டு வேலைகள் செய்வாங்கன்னு கேட்டார். நாலஞ்சு பேர்தான் கை தூக்கினாங்க. நான் எங்க தாத்தா டீ போடுவாங்க; எங்கப்பா துணி துவைப்பாங்க. எங்கண்ணனும் வீட்டு வேலைல எங்கம்மாவுக்கு உதவி செய்வாங்கன்னு சொன்னதுக்கு எல்லாரும் கொல்லுன்னு சிரிச்சாங்க. எனக்கு கோவமா வந்துச்சு.
தன்ராஜ்: சரி அதுக்கு உங்க ஐயா என்ன சொன்னார்?
கீர்த்தி: சிரிச்சவங்கள ஐயா கண்டிச்சார். பெண்கள்தான் சமைக்கணும், பெண்கள்தான் வீட்டு வேலை செய்யணும்னு எந்த கட்டாயமும் இல்லை. ஒரு வீட்டில் எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் இருப்பது போல வேலைகளும் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கப்படணும். பாலின சமத்துவத்தோட அடிப்படையே அங்கிருந்துதான் ஆரம்பிக்குது. அதுவும் வேலைக்குப்போகும் பெண்களோட வீட்டில அதிகமான வேலைகளை ஆண்கள் பகிர்ந்து செய்ய வேண்டியது ரொம்ப அவசியம்னு சொன்னார்.
தனராஜ்: சரியா சொல்லியிருக்கார்.
சுதாகர்: தாத்தா, நம்ம வீட்ல அம்மா வேலைக்குப் போறாங்க. அதனால நாம எல்லோரும் அவங்களுக்கு உதவி செய்றோம். வேலைக்குப் போகாம வீட்ல சும்மா இருக்க பெண்களுக்கும் வீட்டு வேலைல ஆண்கள் உதவி செய்யணுமா என்ன?
தனராஜ்: உன் கேள்வியே தப்புப்பா. ஆபீஸீக்குப் போய் சம்பளம் வாங்கினா தான் அது வேலையா? வீட்ல இருக்கப் பெண்கள் சும்மா இருக்குறதா உனக்கு யார் சொன்னா? சரி, வீட்ல இருக்க பெண்கள் என்னென்ன வேலை பாக்குறாங்க சொல்லு.
சுதாகர்: ம்... சமையல் செய்றது. துணி தோய்க்குறது, பாத்திரம் கழுவுறது, வீட்டை சுத்தம் செய்யுறது, குழந்தைகளைப் பாத்துக்குறது, கடைக்குப் போறது... அம்மாடி எவ்ளோ வேலைகள் இருக்கு!
தனராஜ்: இந்த வேலைகளை ஆள் வைச்சு செய்யுறதா இருந்தா எவ்ளோ சம்பளம் குடுக்கணும் கணக்குப் போடு பாக்கலாம்.
ராணி: சமையலுக்கு 5000, துணி தோச்சு மடிச்சு வைக்க, அயர்ன் பண்ண 2000, வீடு பெருக்கித் தொடைக்க 1000, பாத்திரம் கழுவ 1000, குழந்தைகளைப் பாத்துக்குற 2000, டீயூஷன் எடுக்க 2000, வீட்டை சுத்தம் செய்ய 500, கடைக்குப் போக 500 ஆகமொத்தம் 14000 ரூபாய்.
தனராஜ்: இது வேலை செய்றவங்களுக்கான சம்பளம். ஆனா ஒரு அம்மா தன் குடும்பத்துக்காக எல்லா வேலையையும் அலுப்பில்லாம அன்போட செய்யுறாங்களே அந்த அன்புக்கு என்ன விலை போடுவ?
சுதாகர்: அதுக்கு விலையே கிடையாது தாத்தா. நான் கேட்டது தப்புனு இப்ப புரியுது.
தனராஜ்: பெண்களுக்கும் ஆசைகள், உரிமைகள், தேவைகள் உண்டு; அதை அவங்க பெற நான் உதவி செய்யணும், உதவி செய்ய முடியலைனாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கணும்னு ஒவ்வொரு ஆணும் நினைத்து செயல்பட்டாலே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறைஞ்சு இந்தியா முன்னேற ஆரம்பிச்சிடும்.
(தொடரும்)
கட்டுரையாளர்: ஆசிரியை, எழுத்தாளர், நிறைவகம்,
டான் போஸ்கோ உளவியல் மையம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT