Published : 09 Jan 2020 12:54 PM
Last Updated : 09 Jan 2020 12:54 PM
ஆர். ரம்யா முரளி
உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முழங்கால் வலியால் அவதிப்படுபவர்கள் அதிகம். இதற்குத் தீர்வு முட்டியும் தலையும் தொடும் ஜானுசிரசாசனத்தை முறையாகச் செய்வதே. ஜானு – கால்முட்டி, சிரஸ்- தலை. முழங்காலை வலுப்படுத்தும் ஆசனத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆரம்ப நிலையில் இரண்டு கால்களையும் நீட்டியவாறு அமர்ந்துகொள்ள வேண்டும். கைகள் பக்கவாட்டில், உள்ளங்கைகள் தரையில் பதியுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு காலை நீட்டி வைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு காலை மடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஜானுசிரசாசனம் செய்வது எப்படி?
இப்போது நீட்டி வைத்திருக்கும் காலும், மடக்கி வைத்திருக்கும் காலும் 90 டிகிரி கோணத்தில் இருக்கும். இடுப்பு மற்றும் உடல் முழுவதும் நேராக இருக்க வேண்டும். நீட்டி இருக்கும் காலும் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தாடை கீழ் நோக்கி இருக்க வேண்டும். இதுதான் ஆரம்ப நிலை.
இப்போது மூச்சை நன்றாக இழுத்துக் கொண்டே இரண்டு கைகளையும் நன்றாக மேலே தூக்கி, மெதுவாக மூச்சை விட்டுக் கொண்டே குனிந்து, இரண்டு கைகளால், நீட்டியுள்ள கால் பாதத்தின் வளைவினை பிடிக்க வேண்டும்.
நெற்றி நீட்டியுள்ள காலின் முட்டியினை தொட வேண்டும். இந்த நிலையில் சிறிது நேரம் இருந்து விட்டு, மூச்சை இழுத்தவாறு மேலே எழ வேண்டும். மேலே வரும் நிலையிலும் தாடை கீழ் நோக்கித்தான் இருக்க வேண்டும். மூச்சை விட்டபடி கைகளை கீழே இறக்க வேண்டும்.
இடது பக்கம் செய்து முடித்தவுடன், வலது பக்கமும் இதே போல் செய்ய வேண்டும். இதே போல் ஆசனத்தை 6 முறை செய்யலாம். பொதுவாக சில ஆசனங்களைத் தெளிவாக புரிந்துகொள்வதற்கு அதனை திரும்ப திரும்பச்செய்வதுண்டு. ஜானுசிரசாசனத்தை, வலது, இடது பக்கங்கள் என்று தொடர்ந்தும் செய்யலாம் அல்லது மேலே குறிப்பிடப்பட்ட நிலையில் சிறிது நேரம் இருந்தபடி செய்யலாம்.
பலன்கள்
கால் மற்றும் முழங்கால் தசைகள் வலுப்பெறும். குனியும் போது, முழங்கால் தரையில் அழுத்தப்படும். இதனால், முழங்காலை சுற்றியுள்ள தசைகளில் அழுத்தம் ஏற்படும். சுற்றியுள்ள தசைகள் வலுப் பெறுவதால், முழங்கால் மூட்டு வலுப்பெறும். குனிந்து பாதத்தைத் தொடுவதால், இடுப்பிற்கு நெகிழ்வுத் தன்மை கிடைக்கும்.
தண்டுவடமும் நீட்சியடையும். தாடையை கீழ் நோக்கி அழுத்துவதால், அங்குள்ள தைராயிடு சுரப்பிகள் சீராக இயக்கப்படும். மொத்தத்தில் ஜானுசிரசாசனம் தொடர்ந்து செய்து வந்தால் கை விரல் முதற்கொண்டு, கால் விரல் நுனிவரை அனைத்து அவயங்களுக்கும் பலன் கிடைக்கும்.
மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் கதை, கவிதை, ஓவியம், ஒளிப்படம், நகைச்சுவைத் துணுக்குகள் வரவேற்கப்படுகின்றன. உடன் மாணவரின் புகைப்படம், பள்ளி முதல்வர்/ தலைமையாசிரியர் கையெழுத்திட்ட சான்றிதழை அனுப்புங்கள். மின்னஞ்சல்: vetricreations@hindutamil.co.in அஞ்சல் மூலம் கடிதம் அனுப்ப: ஆசிரியர் இலாகா, இந்து தமிழ் திசை, வெற்றிக் கொடி, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 2. |
(யோகம் தொடரும்)
கட்டுரையாளர்: யோகா நிபுணர்.
எழுத்தாக்கம்: ப.கோமதி சுரேஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT