Published : 08 Jan 2020 12:42 PM
Last Updated : 08 Jan 2020 12:42 PM

ஆசிரியருக்கு அன்புடன்! - 11: கலவர வகுப்பறை வேண்டாமே!

ரெ.சிவா

புதிய கல்வியாண்டு. பள்ளி ஆரம்பமாகிறது. பிரெஞ்சு மொழியாசிரியர் தனது வகுப்பறையின் வாசலில் நிற்கிறார். மணி ஒலித்ததும் மாணவ மாணவியர் வரத்தொடங்குகின்றனர். 14 -15 வயதுள்ள அவர்கள் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் மெதுவாக இருக்கைகளில் உட்காருகிறார்கள். அவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

“இன்று முதல் நாள். அனைவரும் அவரவர் பெயரை ஒரு தாளில் எழுதி முக்கோணமாக மடித்து மேசை மீது வையுங்கள்” என்று ஆசிரியர் கூறுகிறார். “ஏன் எழுத வேண்டும், நீங்கதானே போன வருஷம் எங்களுக்கு வகுப்பு எடுத்தீங்க! அப்புறம் எதுக்கு இப்போ பேர் சொல்லணும்?” என்று கேட்கிறாள் மாணவி எமரேல்டா. “நிறைய பேர் புதிதாக வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லோருடைய பெயரும் தெரிய வேண்டு மல்லவா!” என்று பதிலளிக்கிறார் ஆசிரியர்.

“அப்படியானால் முதலில் நீங்கள் உங்களுடைய பெயரை எழுதி இருக்க வேண்டுமே?” என்கிறாள் மாணவி கொம்பா. “என் பெயர் மரீன்” என்று ஆசிரியர் சொல்லியபடியே கரும்பலகையில் எழுதுகிறார். “மரீன் என்றால் கடலா?” என்று ஒரு மாணவன் கேலி செய்ய அனைவரும் சிரிக்கின்றனர். ஆசிரியரும் சிரிக்கிறார்.

மனச்சோர்வும் கோபமும்!

அடுத்த நாளில் இருந்து பாடம் நடத்தத் தொடங்குகிறார் ஆசிரியர் மரீன். அவருடன் மாணவர்கள் வாதம் செய்தபடியே இருக்கிறார்கள். இடைவேளை நேரம் ஆசிரியர் அறைக்குக் கோபமாக வந்து அமர்கிறார் ஓர் ஆசிரியர். “மூன்று மாதங்களாக நானும் என்னென்னவோ சொல்லிப் பார்த்து விட்டேன் மாணவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. படிப்பு குறித்து கவலையும் இல்லை.

தலைமையாசிரியரிடம் சொல்லிவிட்டு இந்த வேலையை விட்டுப் போகப் போகிறேன். ஆர்வம் இல்லாத ஒரு கூட்டத்திற்கு நான் ஏன் பாடம் நடத்த வேண்டும்?” என்று கோபமாக பேசிக்கொண்டே இருக்கிறார். அவரை ஓர் ஆசிரியர் சமாதானப்படுத்துகிறார்.

மாணவர்களின் கல்வி, நடத்தை குறித்த அனைத்துப் பாட ஆசிரியர்கள் கூட்டம். ஆசிரியர்களுடன் இரு மாணவிகள் மாணவப் பிரதிநிதிகளாக அழைக்கப்படுகிறார்கள். ஆசிரியர்கள் பேசும்போது அவர்கள் தங்களுக்குள் பேசி, சிரித்துக்கொண்டு இருப்பது வகுப்பாசிரியரான மரீனுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. மறுநாள் வகுப்பில், ‘நடத்தை தவறிய பெண்கள்’ என்று அர்த்தம் வரும் ஒரு வார்த்தையைச் சொல்லி அதுபோல இரு மாணவிகளும் நடந்து கொண்டதாக திட்டி விடுகிறார் மரீன். மாணவிகள் கோபம் கொள்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக மாணவன் சுலைமான் தகாத வார்த்தைகளால் ஆசிரியர் மரீனிடம் பேசுகிறான். ஆசிரியர் எச்சரிக்கிறார். அவன் கோபத்துடன் அனைவரையும் திட்டிவிட்டு வகுப்பை விட்டு வெளியேற முயல்கிறான். ஆசிரியர் தடுக்கிறார். அவன் வேகமாக வெளியேறும் போது அவனது பை கொம்பாவின் முகத்தில் மோதுகிறது.

அவளது புருவத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டுகிறது. சுலைமான் மாணவியைத் தாக்கிவிட்டு வகுப்பை விட்டு வெளியேறியதாக மரீன் பள்ளி முதல்வரிடம் எழுதிக்கொடுக்கிறார். கைமீறி போகும் சூழல் ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக மாணவிகள் எழுதிக் கொடுக்கின்றனர்.

அது தெரிந்ததும் மரீன் சென்று மாணவிகளிடம் பேசுகிறார். “நான் சொன்ன வார்த்தையின் பொருள் வேறு. நீங்கள் தவறான அர்த்தத்தை எடுத்துக் கொண்டீர்கள்” என்று சொல்லுகிறார்.

“சுலைமான் பாவம். அவனதுபடிப்பே கெட்டு விடும்” என்று மாணவிகள் கூறுகிறார்கள். ஆசிரியருக்கும் மாணவிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது. “நீங்க என்ன அர்த்தத்தில் வேண்டுமானாலும் சொல்லலாம். நாங்கள் எடுத்துக்கொண்ட அர்த்தம், நீங்க சொன்ன வார்த்தை தவறானது என்பதே” என்று மாணவிகள் திடமாகக் கூறுகின்றனர்.

வளரிளம் பருவத்தினரின் நடத்தை மாற்றத்தை எவ்வாறு சரி செய்வது என்பதே உலகமெங்கும் உள்ள ஆசிரியர்களின் கேள்வி. அதற்கான விடை தேட முயன்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தின் பக்கமே ஆசிரியர்கள் செல்கிறார்கள் என்பதை இயல்பான விதத்தில் ஒரு வகுப்பறையைக் கண்முன்னே காட்டுகிறது ‘The Class’ என்ற பிரெஞ்சுப் படம். தனது வகுப்பறை அனுபவங்கள் குறித்து எழுதிய நூலைத் திரைப்படமாக இயக்கி அப்படத்தில் அவரது பாத்திரத்தில் அவரே நடித்திருப்பவர் பெகாடே. மாணவர்கள் தகாத வார்த்தைகளைப் பேசினாலும் ஆசிரியர்கள் தங்களது வார்த்தைகளில் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என்பதை இப்படம் அழுத்தமாகக் கூறுகிறது.

கட்டுரையாளர்:
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x