Published : 07 Jan 2020 11:56 AM
Last Updated : 07 Jan 2020 11:56 AM

சுலபத்தவணையில் சிங்காசனம்-10: டிஜிட்டல் நாடோடிகள் தெரியுமா? 

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

கடற்கரைகள், மலைகள், அருவிகள் என மனதுக்கு பிடித்தமான இடங்களுக்கு சென்று அதே நேரம் வாழ்க்கை நடத்த வருமானத்திற்கும் வழியிருந்தால் எப்படி இருக்கும்? உண்மையில் இப்படி ஒரு வேலை வாய்ப்பு இருக்கிறதா? தங்களுக்கு பிடித்தமான இடங்களுக்கு, நாடுகளுக்கு பயணம் செய்து தற்காலிகமாகத் தங்கி இணைய வசதிகொண்ட மடிகணினியில் தங்கள் வேலைகளை செய்து வருமானம் பெறும் பணியாளர்களுக்கு டிஜிட்டல் நாடோடிகள் (Digital Nomads) என்று பெயர்.

கோடை-குளிர் காலங்கள்

இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடங்கள் மட்டுமின்றி, தங்கள் வசதிக்கேற்பவும் பயணம் செய்பவர்கள் இருக்கிறார்கள். ஒரு ஊரில் கோடைகாலம் தொங்கிவிட்டால், அங்கேயே அனலில் சிக்கி அவதிப்படாமல் மலை வாசஸ்தலங்களில் சில மாதங்கள் தங்கி வேலை செய்பவர்களும் உண்டு.

இப்படிப்பட்டவர்களுக்கு ’பனிப்பறவைகள்’ என்று பெயர். நேர்மாறாக உறைபனி கொட்டும் காலங்களில் மிதமான வெப்பநிலையுள்ள இடங்களுக்கு சென்று பணியை தொடர்பவர்களும் உண்டு. இவர்களுக்கு ’சூரியப்பறவைகள்’ என்று பெயர்.

பயணத்தில் பணி சாலைப் பயணம் செய்வதில் அலாதி ஆர்வம் கொண்டவர்கள் பயணத்தை தொடர்ந்த படியே அவ்வப்போது மடிகணினியில் வேலைகளை முடித்து வருமானம் பெறுவதும் உண்டு. படுக்கையறை, சமையலறை கொண்ட கேராவேன்களில் வேலையையும் பயணத்தையும் தொடரும் வழக்கம் மேலை நாடுகளில் உண்டு.

தாய்லாந்து, ஹாங்காங் பகுதிகளில் பிற நாடுகளிலிருந்து வரும் டிஜிட்டல் நாடோடிகளின் எண்ணிக்கை அதிகமாம். நாடு விட்டு நாடு, மாநிலம் விட்டு மாநிலம், ஒரு மாநிலத்திற்குள்ளேயே பயணம் என தொலைத்தொடர்பு பெருகிவிட்ட இக்கால கட்டத்தில் வருமானம் தரும் வேலையை விட்டு விடாமல் சுற்றி வருவதும் சாத்தியம்.

என்ன வேலைகள்?

எழுத்தாளர்கள், ஓவியர்கள், கணக்காளர்கள், வடிவமைப்பாளர்கள், மென்பொறியாளர்கள் என கணினியில் தங்கள் பணியை செய்து இணையத்தின் வாயிலாக தங்களது வாடிக்கையாளருக்கு அனுப்பமுடிந்த யாவரும் இந்த வகை வேலைமுறையை தேர்ந்தெடுக்கலாம். வீட்டிலிருந்து பணிசெய்யும் (Work from home) முறையை அனுமதிக்கும் மென்பொருள் நிறுவனங்கள் பல உண்டு. அப்படிப்பட்ட நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பயணத்தையும் கூடவே தொடரலாம்.

நிறுவனம் சாராமல் தனிப்பட்ட முறையில் இணையதளத்தை நிறுவி அல்லது சமூக வலைதளங்களில் தங்களது தொழில் திறன்களை விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை பெறுபவர்கள் இந்த வேலை முறையை பயன்படுத்தலாம். விரும்பிய சுதந்திரம், வருமானம், கனவுகளை நிறைவாக்க கிடைக்கும் வாய்ப்புகள் எனப் பல காரணிகளால் டிஜிட்டல் நாடோடிகளின் எண்ணிக்கை உலக அளவில் உயர்ந்து வருகிறது.

(தொடரும்)
கட்டுரையாளர், இயக்குனர்-தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x