Published : 07 Jan 2020 11:49 AM
Last Updated : 07 Jan 2020 11:49 AM
தேவிகாபுரம் சிவா
கி .மு.260-ம் ஆண்டு ஒரு நாள். இத்தாலி அருகில் உள்ள சிசிலி தீவில் சைரக்கியூஸ் எனும் கடற்கரை பட்டினம். அங்குள்ள கப்பல் கட்டும் துறையில் ‘சைரக்யூசியா’ என்ற சொகுசு கப்பல் ஒன்று நிற்கிறது. 4,064டன் எடை கொண்டது. நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம், பயணிகளுக்கு கழிவறை என எல்லா வசதிகளுடனும் அது கட்டிமுடிக்கப்பட்டு நிற்கிறது. அதை கடலில் செலுத்தவேண்டும். அதில்தான் பிரச்சினை.
ராட்சத வடக்கயிறுகளைக்கட்டி ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அதை இழுத்து கடலில்விட முயன்றனர். ஊகூம். ஒரு அடி கூட நகரவில்லை. சைரக்கியூஸ் நகர மன்னன் ஹைரான், “ஆர்க்கிமிடிஸ் எங்கே உடனே அழைத்து வாருங்கள்” என்றார்.ஆர்க்கிமிடிஸ் வந்தார். ஒற்றை ஆளாக கப்பிகள், கயிறுகள், கழிகள் ஆகியவற்றைக் கொண்டு கப்பலுடன் பிணைத்து ஒரு ஏற்பாட்டை செய்தார். விசையை செலுத்தும் அமைப்பை இயக்கினார். என்ன வியப்பு! கப்பல் கடலில் இறங்கிவிட்டது!.
மன்னர் ஹைரான் மகிழ்ச்சியால் துள்ளினார். மக்கள் ஆரவாரம் விண்ணைத் தொட்டது. “ஆர்க்கிமிடிஸ்! எப்படி இது சாத்தியமாயிற்று?” என கண்கள் விரிய கேட்டார் ஹைரான். “அரசே! எனக்கு நிற்பதற்கு ஒரு இடம் கொடுங்கள் நான் இந்த பூமியையே புரட்டிக் காட்டுகிறேன்” என்றார் ஆர்க்கிமிடிஸ். ஆம், தன் அறிவாற்றலால் அக்கால அறிவியலை ஈராயிரம் ஆண்டுகள் முன்னோக்கி செலுத்திய நெம்புகோல் ஆர்க்கிமிடிஸ்.
இளமையும் கல்வியும்
இத்தாலியின் அருகில் உள்ள சிசிலித் தீவில் சைரக்கியூஸ் நகரில் கி.மு. 287-ல் ஆர்க்கிமிடிஸ் பிறந்தார். இவரது தந்தை ஒரு வானியல் அறிஞர். அலெக்சாண்டரா பல்கலைக்
கழகத்தில் சிறிது காலம் படித்துவிட்டு சைரக்கியூஸ் நகருக்கே ஆர்க்கிமிடிஸ் திரும்பிவிட்டார். மன்னர் 2-ம் ஹைரானின் அறிவியல் ஆலோசகராகவும் மன்னரின் மகனுக்கு ஆசிரியராகவும் பணியாற்றினார்.
போர்க்கருவிப் பொறியியலாளர்
மன்னன் ஹைரானுக்காக ஆர்க்கிமிடிஸ் பல படைக்கலங்களை உருவாக்கினார். சைரக்கியூசை முற்றுகையிட்ட எதிரி நாட்டுக் கப்பல்கள் மீது பிரம்மாண்ட ஆடிகளைக் கொண்டு சூரிய ஒளியை குவித்துத் தீப்பற்றச் செய்து அழித்தார். நெம்புகோல் முறையில் கிரேன்களை உருவாக்கி எதிரியின் போர் படகுகளை அந்தரத்தில் தூக்கி எறிந்து மூழ்கடித்தார். பாறாங்கற்களை எறியும் எந்திரங்கள் மூலம் எதிரிகளின் கப்பல்களை உடைத்துப்போட்டார். ஆர்க்கிமிடிசின் இத்தகு புதிய உத்திகளால் வலிமையான ரோம் படையால் சின்னஞ்சிறு சிசிலி தீவுக்குள் நெடுங்காலமாக நுழைய முடியவில்லை.
மக்கள் விஞ்ஞானி
ஆர்க்கிமிடிஸ், தன் கணிதக் கோட்பாடுகள், அறிவியல் கோட்பாடுகள், எந்திரவியல் அறிவு ஆகியவற்றால் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உபகரணங்களை உருவாக்கித் தந்தார். தாழ்வான பகுதிகளிலிருந்து நீரைமேலே முகர்வதற்கு நீர்ப் பம்ப்பான ‘ஆர்க்கிமிடிஸ் திருகு’-ஐ வடிவமைத்தார். அது இன்றும் கூட பல பகுதிகளில் பயன்பாட்டில் உள்ளது. நீர், காற்று ஆகிய பாய்மரங்களில் பொருள்களின் எடை குறித்த ஆர்க்கிமிடிசின் கோட்பாட்டைக் கொண்டுதான் நீர்மூழ்கிக் கப்பல் முதல் நீராவிக் கப்பல் வரை நீரில் மிதக்கின்றன. ஹைட்ரஜன் பலூன் முதல் ஆகாய விமானம் வரை வானில் பறக்கின்றன.
‘பை’ ()-ன் மதிப்பை தந்தவர்
சாதாரண வாழ்வில் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சனைகளுக்கான தீர்வைத் தேடி, எக்காலத்திற்கும் பொருந்தும் கோட்பாடுகளை ஆர்க்கிமிடிஸ் கண்டடைந்தார். வட்டத்தின் பரப்பளவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்-ன் மதிப்பு 22/7 எனக் கண்டுபிடித்தார். மின்னணு கணக்கீட்டுக் கருவி கண்டு பிடிக்கும் வரை ஆர்க்கிமிடிஸ் தந்த =22/7 தான் கணக்குகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
அறிவியல் துறைகள்
வடிவ கணிதம், எண் கணிதம், தொகை நுண் கணிதம், வானியல், இயற்பியல், எந்திர பொறியியல், நீர்நிலையில், புதுப்புனைவுகள், போர்த்தளவாடப் பொறியியல் என அறிவியல் துறைகள் பலவற்றில் ஆர்க்கிமிடிஸ் முன்னோடியாக விளங்கினார். வட்டம், கோளம், கூம்பு, எறிவு, பரவளையம் என வளைந்த வடிவங்களை அளவீடு செய்வதற்கு அவர் உருவாக்கிய கணிதக் கோட்பாடுகளும், சூத்திரங்களும்தான் இன்றைய புதுப்புனைவுகளின் ஆதாரங்களாக விளங்குகின்றன.
இறுதி மூச்சு
ஆர்க்கிமிடிஸ் உருவாக்கிய நவீன போர்க் கருவிகள் மூலம் ரோமின் கப்பற்படையை ஆண்டுக்கணக்கில் தடுத்து நிறுத்திய சைரக்கியூஸ் படை இறுதியில் ரோமின் தளபதி மார்சிலஸ் தலைமையிலான படையிடம் தோற்றது. தன்னை திக்குமுக்காடச் செய்த ஆர்க்கிமிடிசை பார்த்து மரியாதை செய்ய மார்சிலஸ் விரும்பினார். ஆர்க்கிமிடிசை அழைத்து வர ஆணையிட்டார்.
வெளியுலகின் பரபரப்பை, தன் நாடு வீழ்த்தப்பட்டதை எல்லாம் கடந்து தன் வீட்டில் தீவிர கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் ஆர்க்கிமிடிஸ். தன்னை அழைத்துச்செல்ல திடுதிப்பென உள்ளே நுழைந்த ரோம வீரனைப் பார்த்து “போ வெளியே” எனக் கத்தினார். அடுத்த கணம் வெற்றிச் செருக்கில் இருந்த ரோம வீரன் ஆர்க்கிமிடிசை வெட்டிக் கொன்றான். அறிவியல் சாம்ராஜ்ய சாதனைச் சரித்திரம் சரிந்து வீழ்ந்தது.
கோளத்தின் கனஅளவையும் புறப்பரப்பளவையும் கண்டுபிடித்ததே தன் சாதனைகளில் சிறந்த சாதனை என ஆர்க்கிமிடிஸ் பெருமிதம் கொண்டார். அதனால் தன் கல்லறையில் இதைக் குறிக்கும் வகையில் உருளைக்குள் கோளம் கொண்ட படத்தைப் பொறிக்க சொல்லி இருந்தார். அதன்படியே பொறிக்கப்பட்டது. அந்த கல்லறை காலவெள்ளத்தில் அழிந்துவிட்டது. ஆர்க்கிமிடிஸ் வாழ்கிறார் அவரது அறிவியல் சாதனைகளால்.
கட்டுரையாளர்: எழுத்தாளர்
(நிறைவடைந்தது)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT