Published : 10 Dec 2019 10:12 AM
Last Updated : 10 Dec 2019 10:12 AM
வித விதமான நறுமணங்களை நுகர்வது புத்துணர்ச்சியைத் தரும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், நுகர்ந்து பார்த்தால் மாதச்சம்பளம் கிடைக்கும் என்று தெரியுமா?
ஆம், உங்களுக்கு வாசனைத் திரவியங்கள் மீது தனிப்பிரியம் இருந்தால் நறுமண நிபுணராகலாம். நறுமண நிபுணராக என்ன செய்ய வேண்டும்? அது தொடர்பான படிப்புகள் என்ன? எங்கே வேலை கிடைக்கும்?நறுமண நிபுணருக்கு நறுமணங்களை பகுத்தறியும் திறமையோடு, புதிய நறுமணங்களை உருவாக்கும் தனித்துவமும் தேவை. வாசனை திரவியங்களை ஒன்றோடொன்று கலந்து புதிய கலவையில் வாசனையை உருவாக்கும் நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். வாசனைகள் மனிதர்களை எப்படி பாதிக்கின்றன என்கிற நுண்ணறிவு தேவை. பொருட்களை நுகர்ந்து அவற்றை தரம் பிரிக்கும் திறமை வேண்டும். கூடவே அவற்றால் வாசனை பொருட்கள் ஏற்படுத்துகிற மாசு, மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவை பற்றிய புரிதலும் இது தொடர்பான சட்டங்களைப் பற்றிய தெளிவும் தேவை.
வாசனை படிப்புகள்
வேதியியல் தொடர்பான அறிவியல் பட்டப்படிப்புகளை படித்தவர்கள் நறுமணத் துறைகளில் காலூன்றலாம். வாசனை தொடர்பான சிறப்புப் படிப்புகளும் இந்தியாவில் உள்ளன. உத்தர பிரதேசத்தின் கன்னொவ்ஜ் நகரில் உள்ள சிறிய-நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம், நறுமணம் மற்றும் சுவை தொடர்பான பல சான்றிதழ் படிப்புகளை நடத்தி வருகிறது. பிளஸ் 2 முடித்தவர்களும், பட்டதாரிகளும் இதில் சேர்ந்து படிக்கலாம்.
மும்பையில் உள்ள வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நறுமணம் மற்றும் சுவை தொழில்நுட்பத்தில் முதுநிலை பொறியியல் படிப்பு கற்பிக்கப்படுகிறது. வேதி பொறியியல், உயிரி தொழில்நுட்பம், மருந்தியல், உயிரி வேதியியல் படித்தவர்கள் இந்த படிப்பில் சேரலாம். தனியார் கல்வி நிறுவனங்களிலும் நறுமணம் தொடர்பான படிப்புகள் உண்டு. சுவை தொடர்பான கல்வியும் வாசனை படிப்புகளோடு வழங்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு
வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், சோப்பு உள்ளிட்ட குளியல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், சுத்தம் செய்யும் பொருட்களை உருவாக்கும் நிறுவனங்கள், துரித உணவு-பதப்படுத்தப்பட்ட உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் நறுமண நிபுணர்களுக்கு வேலை வாய்ப்புகள் உண்டு. ஊதுபத்தி உள்ளிட்ட பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், தேநீர் மற்றும் காபி தொழிற்சாலைகளுக்கும் நறுமண நிபுணர் தேவை.
சுவை தொடர்புடைய வேலைவாய்ப்புகள், பிஸ்கட்-சாக்லெட் உள்ளிட்ட உணவுப் பண்டங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் உண்டு. உணவு உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியில் பல தொழில் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு இறங்கும் தற்காலச் சூழலில் நறுமண-சுவை வல்லுநர்களுக்கு வாசனை வாய்ப்புகள் இனி அதிகமாகும்.
(தொடரும்)
கட்டுரையாளர், இயக்குனர்-தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT