Published : 06 Dec 2019 10:25 AM
Last Updated : 06 Dec 2019 10:25 AM
கவிதா நல்லதம்பி
மதி படித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது மலர் அவளுடன் பேசத் தொடங்கினாள்...
மலர்: அக்கா படிச்சு முடிச்சிட்டயா, இன்டர்நெட் சென்டர் வரைக்கும் போக வேண்டியிருக்கு. என்னோட வா. சில பிரின்ட் அவுட்ஸ் எடுக்கணும்.
மதி: மலர் நீ பேசினதுல எத்தனை ஆங்கிலச் சொற்கள் இருக்குன்னு பார்த்தயா?
மலர்: எனக்கு உன்னைப் போன்று தூயதமிழில் பேச வராது சகோதரியே.
மதி: என்ன மலர், கிண்டல் செய்றயா. நான் இப்பதான் கலைச்சொற்கள்னு ஒரு பகுதியைப் படிச்சிக்கிட்டிருந்தேன். அதுல நீ பயன்படுத்துன எல்லாச் சொற்களுக்கும் அழகான தமிழ்ச் சொற்கள் தந்திருக்காங்க.
மலர்: ஆனா புதுசுபுதுசா நம்ம கிட்ட வந்த பொருட்கள் பேர ஆங்கிலத்துல தானே சொல்லியாகணும்?
மதி: ஏன் மலர்? Television வந்தப்ப அதைத் தொலைக்காட்சின்னு தமிழ்ல சொல்லத் தொடங்கினோம்ல. Computer கணினியாக, Internet இணையமாக நம்மகிட்ட வழக்கத்துல இருக்கே. இப்ப Selfieயை சுயமி, Whatsappயைப் புலனம், Hotspotஐப் பகிரலைன்னு சொல்லத் தொடங்கி இருக்கோம். குறைஞ்சது இந்தச் சொற்களைச் சொன்னா எதைச் சொல்றாங்கன்னாவது புரியுதில்ல. அதே போல இன்னும் புதிதாக வருகிற சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களை உருவாக்க முடியும்தானே!
மலர்: ஆமாக்கா. ஆனா நாம இந்தச் சொற்களையெல்லாம் பயன்படுத்தறதே இல்லையே.
மதி: நீ சொல்றது சரிதான். நாம முதல்ல நண்பர்களிடமாவது பயன்படுத்தத் தொடங்கணும். தமிழ்ல மட்டுமில்ல, உலகத்தில இருக்கிற எல்லா மொழிகள்லயும் பிற மொழிச்சொற்கள் இருக்கத்தான் செய்து. ஆங்கிலத்தில இருக்கிற பெரும்பான்மைச் சொற்களுக்கு மூலம் லத்தீன் மொழின்னு எங்க ஆசிரியர் சொன்னதுகூட இப்ப நினைவுக்கு வருது. ஆனா தமிழ் மொழி இதுல இருந்து வேறுபட்டது.
மலர்: என்ன வேறுபாடு, தமிழ் மொழிக்கும் மற்ற மொழிகளுக்கும்?
மதி: சில மொழிகள்ல சொற்களுக்குப் பஞ்சம் இருக்கு. ஆனா நம்ம மொழியில அது இல்லை. எந்தத் துறை சார்ந்து புதிய சொற்கள் வேணும்னாலும் அதற்கான வேர்ச்சொற்கள் நம்மகிட்டயே இருக்கு. நாம காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ற மாதிரி வேர்ச் சொற்களை அடிப்படையா வெச்சு புதிய சொற்களை உருவாக்கலாம். அடுமனைன்னு ஒரு சொல்ல எடுத்துப்போம். அதுக்கு வேர்ச்சொல் என்ன தெரியுமா?
மலர்: அக்கா, நீ இப்பப் பயன்படுத்துற நிறையச் சொற்கள் எனக்கு ரொம்பவே புதுசா இருக்கு. கடினமாவும் இருக்கு
மதி: கடினம் ஒண்ணும் இல்ல. புதுசும் இல்ல மலர். நம்ம ஆங்கிலத்துல Root word-னு சொல்றோம் இல்லையா. அதைத்தான் வேர்ச் சொல்னு சொல்றோம்.
மலர்: எனக்குத் தெரியலக்கா. அடுக்குன்னா தெரியும். அம்மா, யாராவது தேவையில்லாத பொய்களைப் பேசினா இது அடுக்குமான்னு கேப்பாங்க. வேற எதுவும் தெரியலையே.
மதி: நீ சொல்றது சரிதான். ஆனா வேர்ச்சொல்லத்தானே நான் கேட்குறேன்.
மலர்: நீயே சொல்லிடுக்கா.
மதி: அடுதல் என்கிற சொல்லுக்குச் சமைத்தல்னு பொருளாம். கலிங்கத்துப் பரணியில போர் முடிந்த பிறகு பேய்கள் எல்லாம் சேர்ந்து இறந்துபோன வீரர்களின் உடல்களை எடுத்துக் கூழ் சமைத்துக் காளி தெய்வத்திற்குப் படைத்துத் தாமும் சாப்பிட்டதாக எழுதப்பட்டிருக்கு.
மலர்: ஓ.. அப்ப அடுதல்னா சமைத்தல். 'அடு'ங்கிற சொல்தான் வேர்ச்சொல் இல்லையா?
மதி: நீ சரியாச் சொல்ற மலர். இப்பத் தெரியுதா, நம்ம மொழியில எல்லாத் துறை தொடர்பான சொற்களுக்கும் அடிப்படை இருக்கு. வேறு மொழியில இருந்து நாம சொற்களைக் கடன்வாங்க வேண்டிய தேவையில்லை. அதனால தான் தமிழைத் தனித்தியங்கும் மொழின்னு சொல்றாங்க.
(மேலும் தித்திக்கும்)
கட்டுரையாளர்: தமிழ்த் துறை பேராசிரியை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT