Published : 03 Dec 2019 11:22 AM
Last Updated : 03 Dec 2019 11:22 AM
தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்
நடப்பாண்டு முதல் பிளஸ் 2 தமிழ், 2 தாள்களையும் ஒருங்கிணைத்த ஒரே தாளாகநடைமுறைக்கு வருகிறது. புதிய பாடத்திட்டம், புதிய வினாத்தாள் மாதிரி ஆகியவற்றுடன், சிந்தனையைத் தூண்டும் வினாக்கள், உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்கள், ப்ளூ பிரிண்ட் இல்லாதது என சவால்களும் சேர்ந்துள்ளன. அரசு வெளியிட்ட வினாத்தாள் மாதிரிக்கும், காலாண்டுத் தேர்வுக்கான வினாத்தாள் மாதிரிக்கும் ஒருசில வேறுபாடுகள் தென்படுகின்றன.
எனவே தற்போது நடைமுறையில் உள்ள வினாத்தாள் அடிப்படையில்ஆசிரிய வல்லுநர் வழங்கும் வழிகாட்டுதல்களை அறிந்துகொள்வோம். பிளஸ் 2 தமிழ் பாடத்தில் தலா8, உரைநடை, இலக்கணம், துணைப்பாடம் மற்றும் செய்யுள்களுடன், மொத்தம் 8 இயல்கள் உள்ளன.
இவற்றிலிருந்து 90 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வு நடை பெறும். மிச்சமுள்ள 10 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவரின் வருகைப் பதிவு, உள்நிலைத் தேர்வு, ஒப்படைவு, களப்பயணம், கல்வி இணைச் செயல்பாடு ஆகியவற்றின் மூலம் அகமதிப்பீடு தீர்மானிக்கப்படுகிறது.
வினாத்தாள் மாதிரி
14 ‘பலவுள் தெரிக’ வினாக்களுடன் ஒரு மதிப்பெண் பகுதி அமைந்துள்ளது. இதில் செய்யுள் மற்றும் உரைநடைக்கு 6 வினாக்களும், இலக்கணம் மற்றும் துணைப்பாடத்துக்கு 8 வினாக்களும் அடங்கும்.
இதைத் தொடர்ந்து 2 மதிப்பெண்களுக்கான குறுவினாக்களும், 4 மதிப்பெண்களுக்கான சிறுவினாக்களும் வருகின்றன. குறுவினா பகுதியில் செய்யுள், உரைநடையுடன் மொழித் திறன் வினாக்கள் இடம்பெறும். இலக்கணப் பகுதியின் எளிமையான வினாக்கள், மொழித் திறன் பகுதியில் கேட்கப்படுகின்றன. சிறுவினா பகுதியில் செய்யுள், உரை நடையுடன் மொழிப்பயிற்சி வினாக்கள் இடம்பெறும்.
அணி, திணை, துறை, தமிழாக்கம், பா நயம், பழமொழியை வாழ்க்கை நிகழ்வோடு தொடர்புபடுத்தி எழுதுதல் போன்றவை மொழிப்பயிற்சி வினாக்களில் அடங்கி இருக்கும். 6 மதிப்பெண்களுக்கான நெடுவினா பகுதியில், செய்யுள், உரைநடை, துணைப்பாடம் ஆகிய பகுதிகளில் இருந்து ’அல்லது’ வகையிலான 3 வினாக்கள் இடம்பெறும். நிறைவாக செய்யுள் மற்றும் குறள் தொடர்பான மனப்பாடப் பகுதி, 4+2 என 6 மதிப்பெண்களுக்கு இடம்பெறுகிறது.
தேர்ச்சி நிச்சயம்
# 8 இயல்களிலும் ’பலவுள் தெரிக’ வினாக்களை மட்டுமே படித்தால் 10 மதிப்பெண்களை உறுதி செய்யலாம்.
# 8 துணைப்பாடங்களையும் படித்தால் 6 மதிப்பெண்ணுக்கும், இலக்கிய நயம் பாராட்டல், தமிழாக்கம், அணி, திணை, துறை ஆகியவற்றை படித்தால் 12 மதிப்பெண்களுக்கும் தயாராகலாம்.
# பாடங்களில் இடம்பெற்றுள்ள மொழிப்பயிற்சி வினாக்களில் ’வல்லின எழுத்துக்களை இட்டும் நீக்கியும் எழுதுதல், பகுபத உறுப்பிலக்கணம், புணர்ச்சி, மரபு பிழை நீக்கி எழுதுதல், மயங்கொலி சொற்களை தொடரில் அமைத்து எழுதுதல், சொல்லை சேர்த்தும் பிரித்தும் எழுதுதல், உவமைகளை சொற்றொடரில் அமைத்து எழுதுதல், விடைக்கேற்ற வினா எழுதுதல், நிறுத்தற் குறியீடு, மரபு சொற்களை தொடரில் அமைத்து எழுதுதல், பொருத்தமான வேற்றுமை உருபுகளை சேர்த்து எழுதுதல், விடைக்கேற்ற வினா எழுதுதல்’ போன்ற எளிமையான பகுதிகளில் மெல்லக் கற்கும் மாணவர்களும் கூடுதல் மதிப்பெண்கள் பெறலாம்.
# சிறுவினா, குறுவினாக்களில் மிகவும் எளிமையானதை தொகுத்துப் படித்தாலே அப்பகுதியில் கேட்கப்படும் சரிபாதி வினாக்களுக்கு விடையளிக்க முடியும்.
அதிக மதிப்பெண்கள் பெற
உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்களில் நன்றாக படிக்கும் மாணவர்களும் மதிப்பெண் இழக்க நேரிடுகிறது. ஒரு மதிப்பெண் பகுதியில் 14 வினாக்களில் 4, இவ்வகையில் கேட்கப்பட வாய்ப்புள்ளது. உள் வினாக்களில் தயாராக, நூல் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு, கலைச்சொல் பொருள் தருக, மேற்கோள், பெட்டிச் செய்தி, துணைப்பாட ஆசிரியர் பெயர், பாடம் உணர்த்தும் கதைக்கரு ஆகியவற்றையும் படித்திருப்பது அவசியமாகிறது.
குறுவினா, சிறுவினா பகுதிகளில் 1 அல்லது 2 வினாக்கள் உள்ளிருந்து கேட்கப்படலாம். எழுத்துப் பிழை, கருத்துப் பிழை, ஒருமை-பன்மை பிழை, சந்திப் பிழை உள்ளிட்ட பிழைகளாலும் ஒரு சில மதிப்பெண்கள் இழக்க வாய்ப்பாகும். எனவே மாதிரித் தேர்வுகள் எழுதும் போதும், தேர்வின் நிறைவாக விடைத்தாளை சரிபார்க்கும் போதும் இத்தகையப் பிழைகள் நேராது விழிப்புடன் இருக்க வேண்டும். போதிய இடம் விட்டு, திருத்தமான கையெழுத்தில் தேர்வெழுதுவதன் மூலமும் முழு மதிப்பெண்களை உறுதி செய்யலாம்.
புதிய வினாத்தாள் வடிவமைப்பை நன்றாக புரிந்துகொள்வதன் மூலம் தேர்வை குழப்பமின்றி எழுதலாம். நெடுவினாவின் செய்யுள், உரைநடை மற்றும் துணைப்பாடம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 8 இயல்களிலும் உள்ள மொழிப்பயிற்சி வினாக்களை தொகுத்துப் படிக்கலாம்.
இப்போதிருந்தே தயாராகலாம்
ஜனவரி மாதம் விடுமுறையிலும், பிப்ரவரி மாதம் செய்முறைத் தேர்வுகளிலும் கழிந்துவிடும். இவற்றுக்கிடையே கிடைக்கும் சொற்ப நேரமும் திருப்புதலுக்கே சரியாகும். எனவே அரையாண்டுத் தேர்வை இலக்காக கொண்டு படிப்பதே நல்லது. அதற்கு இப்போதிருந்தே முழு மூச்சில் தயாராவது உதவும்.
எந்தப் பகுதியில் மதிப்பெண் குறைகிறது என்பதை கண்டறிந்து அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எதைப் படித்தாலும் உடனடியாக எழுதிப் பார்ப்பது நல்லது. வீட்டில் எழுதிப் பார்க்க வென தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். மாதிரி வினாத்தாள்களில் பயிற்சி, வகுப்புத் தேர்வுகளை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வது போன்றவை தேர்வு நோக்கில் வெகுவாக உதவும். துணைப்பாடங்களின் கதைகளை, பலவுள் தெரிக பகுதிகயை சக மாணவர்கள் மத்தியில் ஆளுக்கொன்றாய் சொல்லிப் பழகலாம்.
கவனம் தேவை
இரண்டரை மணி நேரமாக இருந்த தேர்வு நேரம், தற்போது 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 180 நிமிடங்களில் 90 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதுவது என்பது தாராள அவகாசமாகும். வினாத்தாளை முழுமையாக வாசித்து புரிந்துகொண்ட பின்னரே விடையளிக்கத் தொடங்க வேண்டும். நெடுவினா பகுதியில் முன்னுரை மற்றும் முடிவுரைக்கு இடையே, 4 உட்தலைப்புகளேனும் இட்டு எழுதினால் முழு மதிப்பெண் பெறலாம்.
- பாடக்குறிப்புகளை வழங்கியவர்:
வெ.ராமகிருஷ்ணன்,
முதுகலை தமிழாசிரியர், அரசு மாதிரிப் பள்ளி, அரியலூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT