Published : 28 Nov 2019 12:12 PM
Last Updated : 28 Nov 2019 12:12 PM
ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
மரத்தில் காய்த்துத் தொங்கும் பழங்களை, சிறு கல்லைக் கவணில் வைத்து ரப்பர் பட்டையை இழுத்து எறிந்து பறித்ததுண்டா? உண்டி வில்லில் (கவண்) கல்லெறியும் நுட்பம் விமானத் துறையில் பயன்படுத்தப்படுகிறது. எப்படி?
ஆளில்லா விமானங்கள் ஹெல்காப்டர் போல சுழல் இறக்கைகளோடு அல்லது பயணிகள் விமானம் போல நிலையான இறக்கைகளோடு இருக்கும். நிலையான
இறக்கைகள் கொண்ட ஆளில்லா விமானங்கள் ராணுவத்தில் பாதுகாப்பு பணிகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வகை விமானங்களை இயக்க ஓடுபாதை தேவை. ஓடுபாதை இல்லாத இடங்களில் இது போன்ற விமானங்களை இயக்க கவண் போன்ற தொழில்நுட்ப அமைப்பு பயன்படுகிறது.
விமானம் ஏவு கருவி
கவணில் கல்லைப் போல, அம்பில் வில்லைப் போல, விமானத்தையும் ஏவ கருவிகள் உள்ளன. மருத்துவர் ஊசிப்போட பயன்படுத்தும் மருந்தேற்று குழலை (Syringe) பார்த்திருப்பீர்கள். அதைப் பயன்படுத்தி சில அறிவியல் சோதனைகளை வகுப்பறையில் செய்திருப்பீர்கள்.
மருந்தேற்று குழல்களைப் பயன்டுத்தி மண் அள்ளும் இயந்திரம் செய்யும் மாணவர்கள் உண்டு. பாஸ்கல் விதிப்படி அது இயங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியும். இதே கோட்பாட்டில் பிஸ்டன்-உருளை தொகுதியில் அதிக அழுத்தத்தில் எண்ணெய்யைச் செலுத்தி பிஸ்டனை வேகமாக நகர்த்தலாம். நீண்ட பிஸ்டன் கொண்ட அமைப்புதான் விமானத்தை ஏவும் கருவி.
பிஸ்டனின் நுனியில் ஆளில்லா விமானத்தை பொருத்தி வேகமாக விமானத்தை ஏவலாம். விமானம் வழிவிலகாதிருக்க, ரயில் தண்டவாளம் போன்ற அமைப்பை சரிவாக அமைத்து விமானத்தை ஏவுவார்கள்.
போர்க்கப்பலில் விமானம்
போர்க்கப்பலில் சிறிய ஓடுபாதையில் விமானத்தை ஏவுவதற்கு பனிச்சறுக்கு நுட்பம் உதவுகிறது என்று பார்த்தோம். கவண் நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது. இங்கு எண்ணெய்க்குப் பதில் நீராவி பயன்படுத்தப்படுவதும் உண்டு. நீராவி பிஸ்டனை அதிவேகத்தில் இயக்கும். போர் விமானத்தின் முன் சக்கரத்தில் பிஸ்டனின் நுனி பொருத்தப்படும்.
போர்க்கப்பலின் ஓடுபாதைக்குக் கீழே, நீண்ட பிஸ்டன்-உருளை அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கும். பிஸ்டனின் நுனி ஓடுபாதையில் உள்ள திறந்த காடி (Slot) வழியாக விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த காடி ஓடுபாதை நீளத்திற்கு திறந்திருக்கும். இந்த காடி வழியாகவே பிஸ்டன் படுவேகமாக நகர்ந்து விமானத்தை உந்தித்தள்ளும்.
நுண்புழை ஏற்றம்
வேர்களில் இருந்து மரத்தின் நுனிவரை நீர் செல்வதற்குக் காரணம் நுண்புழை ஏற்றம் (Capillary Action) என்பதை படித்திருப்பீர்கள். இந்த கோட்பாடு விமான உற்பத்தியில் முக்கியத்துவம் பெற்றது என்பது தெரியுமா? வாருங்கள் மாணவர்களே! தொடர்ந்து பேசுவோம்.
(தொடரும்)
கட்டுரையாளர், ஹெலிகாப்டர் பற்றி முதல் தமிழ் நூலான ‘எந்திரத்தும்பிகள்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT