Published : 27 Nov 2019 10:59 AM
Last Updated : 27 Nov 2019 10:59 AM
எஸ்.எஸ்.லெனின்
ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகள் மட்டுமன்றி, வேறு சில படிப்புகளும் வழங்கப்படுகின்றன. அவற்றில் முதன்மையானது வடிவமைப்புக்கான இளநிலை பட்டப் படிப்பு. B.Des., (Bachelor of Design) என்ற இந்த படிப்பை மேற்கொள்ள UCEED (Undergraduate Common Entrance Examination for Design) என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
எங்கு படிக்கலாம்?
தேசிய அளவிலான UCEED நுழைவுத் தேர்வைத் தொடர்ந்து இருமுறை மட்டுமே எழுதலாம். ஒரு தேர்வின் மதிப்பெண் அந்த வருடத்துக்கு மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஐஐடி மும்பை, ஐஐடி குவகாத்தி, ஐஐடி ஹைதராபாத், ஐஐஐடி-டிஎம் ஜபல்பூர் (IIITDM) ஆகிய வளாகங்களில் சேர்ந்து படிக்கலாம்.
சர்வதேச தரத்திலான வடிவமைப்பாளர் படிப்பை இந்தியாவிலேயே படிக்க UCEED நுழைவுத் தேர்வு வாய்ப்பளிக்கிறது. இந்த 3 ஐஐடி நிறுவனங்கள் மட்டுமன்றி, வடிவமைப்பாளர் உயர்கல்வி வழங்கும் இந்தியாவின் 16 முன்னணி கல்வி நிறுவனங்களும் UCEED மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கையை தீர்மானிக்கின்றன.
யாரெல்லாம் எழுதலாம்?
2019-ல் பிளஸ் 2 தேர்ச்சி அடைந்தவர்கள் மற்றும் 2020-ல் பிளஸ் 2 தேர்வு எழுதவிருப்பவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். பிளஸ் 2-வில் எந்தப் பிரிவில் பயின்றவர்களும் நுழைவுத் தேர்வு எழுதலாம். அவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 24. இதில், எஸ்.சி., எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்கு வயது வரம்பில் 5 வருட தளர்வு உண்டு. மகளிர், எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ1,500. மற்றவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 3,000 ஆகும். விண்ணப்ப நடைமுறைகள் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கி நவம்பர் மத்தியில் நிறைவுறும்.
ரூ.500 தாமத கட்டணத்துடன் விண்ணப்பிக்க, மேலும் ஒரு வார அவகாசம் வழங்கப்படும். தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து ஆன்லைன் கலந்தாய்வில் 3 சுற்றுகளில் சேர்க்கை முடிவாகும். விண்ணப்ப பதிவு, விண்ணப்பித்தல், கட்டணம் செலுத்துதல், ஆவணங்கள் தரவேற்றம் ஆகிய அனைத்தும் ஆன்லைன் மூலமே நடைபெறும்.
தேர்வு நடைமுறைகள்
UCEED நுழைவுத் தேர்வு, 3 மணி நேரத்துக்கான ஆன்லைன் தேர்வாக ஆங்கிலத்தில் அமைந்திருக்கும். 3 பிரிவுகளிலான இந்த தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 300. நுழைவுத் தேர்வில் வரைகலைக்கு தனியாக தேர்வு கிடையாது என்ற போதும், பொதுவான வரைகலை மற்றும் மனித உருவ வரைகலை தொடர்பான அடிப்படை வினாக்கள் இடம்பெறும்.
எனவே இயல்பாகவே படம் வரைவதில் ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வுக்கு முயலலாம். இதற்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பாடத்திட்டத்துடன், பொது அறிவு, மொழியறிவு, தற்போதைய நாட்டு நடப்பு ஆகியவற்றிலும் தயாராக வேண்டும்.
விண்ணப்பிக்கும் மாணவர்கள், இணைய தளத்திலேயே மாதிரி தேர்வெழுதி தங்களது தகுதியை உறுதிசெய்து கொள்ளவும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட இந்தியாவின் 24 நகரங்களில் நுழைவுத் தேர்வு எழுதலாம்.
படம் வரைவதில் ஆர்வமுள்ள கீழ் வகுப்பு மாணவர்களும், இந்த ஐஐடி வடிவமைப்பு உயர் கல்வியை இலக்காகக் கொண்டு இப்போதிலிருந்தே தயாராகலாம். கூடுதல் தகவல், நுழைவுத் தேர்வுக்கான பாடங்கள், விண்ணப்ப நடைமுறைகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க, கூடுதல் தகவலுக்கு: uceed.iitb.ac.in/2020/index.html
தேர்வு நடைபெறும் நாள் : 2020 ஜனவரி 18
தேர்வு முடிவுகள் : 2020 மார்ச் 13
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT