Published : 22 Nov 2019 10:04 AM
Last Updated : 22 Nov 2019 10:04 AM
ஆட்டிசம் உள்ள குழந்தைகள் ஏன் வித்தியாசமாக நடந்து கொள்கின்றனர் என்பது பற்றி கீர்த்தியின் ஆசிரியர் அன்புநாதன் விளக்கிக் கொண்டிருந்தார்.
ஆசிரியர்: அறிவியல், மருத்துவத் துறைகளில் மனிதன் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருந்தாலும் மனித மூளையைப் பற்றிய பல விஷயங்கள் இன்னும் புரியாத புதிராகவே இருக்கு.
‘ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்’ என்னும் குடைப் பெயரின் கீழ் பல பிரிவுகள் உண்டு. இதில் ஆட்டிசம் உள்ளவர்கள் பிறர் கண்ணைப் பார்த்து பேசமாட்டாங்க. தான் நினைப்பதை வார்த்தையாலோ, சைகைகளாலோ வெளிப்படுத்தத் தெரியாது. மற்றவர்களோடு சேர்ந்து பழக, விளையாட மாட்டாங்க. ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப செய்வது, ஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப செய்யறதுன்னு இருப்பாங்க. ‘ஆஸ்பெர்ஜர் சின்ட்ரோம்’ உள்ளவங்க மத்தவங்களோட கலந்து பழக மாட்டாங்களே தவிர புத்திசாலிகளா இருப்பாங்க. இளம் சுற்றுச்சூழல் போராளி கிரேட்டா தன்பர்கிற்குகூட ஆஸ்பெர்ஜர் சின்ட்ரோம் இருக்கு என்றால் பார்த்துக்கோங்க. 'ரெட் ஸின்ட்ரோம்' என்பது பெண் குழந்தைகளுக்கு மட்டுமே வரும். குழந்தைப் பருவ ஒத்திசைவின்மைக் குறைபாடு உள்ள குழந்தைகள் இரண்டு, மூன்று வயசுவரை கூட நல்லா இருப்பாங்க. திடீர்னு பேசுறது, மத்தவங்களோட பழகுறதெல்லாம் குறைஞ்சு தன்னோட தனி உலகத்துக்குள்ளயே வாழுவாங்க.
சித்ரா: இந்த குழந்தைகளும், அவங்க பெற்றோரும் ரொம்ப பாவம் சார்.
ஆசிரியர்: இப்படி பரிதாபப்பட்டு அவங்களைப் பிரிச்சு வைக்குறதைக் காட்டிலும் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டு அவங்களோட இயல்புபடி வாழ விட்டாலே போதும்.
கீர்த்தி: சார்! ஆட்டிசம் உள்ளவங்களுக்கு அறிவுத் திறனில் குறைபாடு கிடையாதுன்னா மூளை நல்லா வேலை செய்யுதுன்னு தானே அர்த்தம். அப்புறம் ஏன் அவங்க கத்துறது, ஓடுறதுன்னு வித்தியாசமா நடந்துக்குறாங்க?ஆசிரியர்: பொதுவா கண், காது,தோல், மூக்கு, நாக்கு இவை மட்டுமல்லாமல் காதின் உட்புறத்திலும், தசைகள், மூட்டுகளில் உள்ள உணர்வாங்கிகள் மூலமாகவும் நம் உடலின் சமநிலையையும், உடலை உணரும் திறனையும் கட்டுப்படுத்த முடியும். ஆட்டிசம் உள்ளவர்கள் இந்த ஏழு வகை உணர்ச்சிகளுக்கும் தேவைக்கு அதிகமாகவோ, குறைவாகவோ செயல்படுவார்கள் (Hypo / Hyper sensitive). சிலருக்கு சின்ன வெடி சத்தம் கூட ரொம்ப அதிகமா தெரிவதால அதிர்ச்சியடைந்து காதை மூடிக்கிட்டு கத்தி கலாட்டா பண்ணுவாங்க. வேறுசிலர் சத்தத்தை கேட்க விரும்பி எதையாவது தட்டிக்கிட்டே இருப்பாங்க. சிலருக்கு லேசா தொட்டாலே வலிக்கும், வேற சிலருக்கோ அடிபட்டு ரத்தம் வந்தக்கூட வலியே தெரியாது.
வெஸ்டிபுலார்னு சொல்லக்கூடிய காதின் உட்புற நரம்பு மையத்தில் உள்ள குறையுணர்ச்சியால (hypo) குதிப்பது, சுற்றுவது, ஊஞ்சலாடுவது போன்றவை உடலுக்கு சமநிலையைக் கொடுப்பதால அதையே தொடர்ந்து செய்ய விரும்புவாங்க. தேவை பூர்த்தியானதும் தானே நிறுத்திடுவாங்க. இதே உணர்வு அதிகமாஇருப்பவங்க (hyper sensitive) குதிப்பது,ராட்டினத்தில் சுத்துவது ஓடி விளையாடுவதுனு எல்லாத்துக்கும் பயப்படுவாங்க.
ராஜேஷ்: டேனியல் தம்பி ஊஞ்சல்லேர்ந்து இறங்காம தானே ஆடனும்னு நினைச்சதோ, அந்தப் பொண்ணு அவனைத் தொட்டது பிடிக்காம அவளைத் தள்ளிவிட்டதோ இதனாலதானா சார்?ஆசிரியர்: ஆமாம், நாம பசிச்சா சாப்பிடுறது, தாகமெடுத்தா தண்ணி குடுக்குற மாதிரிதான் இவங்களுக்கு குதிக்குறது, ஓடுறது, ஊஞ்சல்ல விளையாடுறது. இதைப் புரிஞ்சுக்காம நாமதான் அவங்களைத் தப்பா நினைச்சுக்கிட்டு கிண்டல் பண்றோம்.
ஜூலி: எங்க பக்கத்து வீட்ல இதே மாதிரிஒரு பையன் இருக்கான் சார். தீபாவளி அன்னைக்கு பட்டாசு சத்தம் கேட்கும் போதெல்லாம் அலறி அழுதுகிட்டே இருந்தான். அதுக்கு காரணம் இப்பதான் புரியுது சார்.
ஆசிரியர்: பட்டாசு வெடிக்க வேண்டாம்னு பலரும் சுற்றுப்புற மாசு, குழந்தைத்தொழிலாளர், இப்படி பல காரணங்களைச் சொல்வாங்க. இந்தியாவில் இருபதுலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு ஆட்டிசம் இருப்பதா சொல்றாங்க. நம்மோட சின்ன சந்தோஷத்துக்காக இத்தனைக் குழந்தைகளை கஷ்டப்படுத்தணுமா? யோசிச்சுப் பாருங்க. நாம செய்யக்கூடிய எந்த ஒரு செயலும் நமக்கோ மத்தவங்களுக்கோ மகிழ்ச்சி தரக்கூடியதா மட்டுமே இருக்கணும்.(தொடரும்)கட்டுரையாளர்: எழுத்தாளர், நிறைவகம், டான் போஸ்கோ உளவியல் நிறுவனம்.
தொடரும்)
கட்டுரையாளர்:
எழுத்தாளர், நிறைவகம், டான் போஸ்கோ உளவியல் நிறுவனம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT