Published : 21 Nov 2019 11:00 AM
Last Updated : 21 Nov 2019 11:00 AM
விஞ்ஞானி வி.டில்லிபாபு
அதிவேக போர் விமானத்தைப் போர்க்கப்பலின் குட்டி ஓடுபாதையில் தரையிறக்க விமானத்தின் வாலில் கொக்கி அமைக்கப்பட்டிருக்கும்.
அது ஓடுபாதையில் அமைக்கப்பட்டுள்ள உலோகக் கம்பியில் சிக்கி வேகம் குறைந்து பிறகு நிற்கும் எனப் பார்த்தோம். கொக்கி உலோகக் கம்பியில் சிக்கவில்லை என்றால் என்ன செய்வது?
இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இன்ஜினின் வேகத்தை அதிகப்படுத்தி விமானத்தை மேலெழுப்பி பறக்க வேண்டும். பிறகு மறுபடியும் தரையிறங்க முயலலாம். விமானத்தை மேலெழுப்பும் சூழ்நிலையில்லாத போது, வலை வீசி விமானத்தை நிறுத்தலாம். வலை வீசுவதா, எப்படி?
வலைவீசி நிறுத்து
கால்பந்தாட்டத்தில் கோல் அடிக்கும் போது, அதிவேகமாக பறந்து வரும் பந்து கோல் வலையில் சிக்கிக் கொள்ளும். அதைத் தாண்டி பார்வையாளர்கள் பக்கம் வராது. அதைப் போலவே, ஓடுபாதையில் தடுப்பு வலை (Arresting Barrier /Net Barrier) அமைத்து விமானத்தைத் தடுத்து நிறுத்தி வேகத்தைக் குறைக்கலாம்.
வழக்கமாக தடுப்பு வலை ஓடுபாதையின் தரையில் கிடைமட்டத்தில் விமானம் பறப்பதற்கு பாதிப்பில்லாத வகையில் இருக்கும். விமானியிடம் இருந்து தகவல் வந்தவுடன் தடுப்பு வலையை கிடைமட்டத்தில் இருந்து செங்குத்தாகத் தானியங்கி முறையில் நிறுத்தி விமானத்தை நிறுத்துவார்கள்.
மேலெழும்புவதில் சிக்கல்
பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தில் மழைக்குப் பின் சில இடங்களில் நீர் தேங்கும். அப்படி தேங்கினால், எம்பி குதித்து தண்ணீரைத் தாண்டி விளையாடுவது ஒரு சுவாரசியமான விளையாட்டு. (நீருக்குள் குதிப்பது சிலருக்கு சுவாரசியம்!). அப்படி தாண்டும்போது சற்று பெரிய தண்ணீர் தேக்கமாகி இருந்தால், சிறிது தூரம் ஓடி வந்து நீளம் தாண்டுவதை போல தாண்டி இருப்பீர்கள்.
விமானமும் இப்படித்தான் குறிப்பிட்ட தூரம் வேகமெடுத்து ஓடிய பிறகே, விமானத்தின் எடையை விட உயர்த்து விசை அதி
கமாகி விமானம் மேலெழும்பும். ஆனால், விமானந்தாங்கி கப்பலின் சிறிய ஓடுபாதையில் எப்படி வேகமெடுப்பது? நீளம் குறைந்த ஓடுபாதையில் விமானத்தை மேலெழுப்ப சில நுட்பங்கள் உண்டு.
எதிர்க்காற்றில் விமானம் மேலெழும்பத் தேவையான உயர்த்து விசை எளிதில் கிடைக்கும். எனவே கப்பலை எதிர்க்காற்றின் திசையில் திருப்புவார்கள். பிறகு கப்பலின் வேகத்தை அதிகரிப்பார்கள். இதைச் செய்வதால் ஓடுபாதையில் காற்றோட்டம் அதிகரிக்கும். விமானம் மேலெழும்ப இது தோதான சூழல். ஆனால் போதாது.
பனிச்சறுக்கு நுட்பம்
சர்க்கஸ் சாகசங்களில் இரு சக்கர வாகனத்தில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்குப் பறந்து தாவுவது உங்களுக்கு தெரியும். வாகனம் மேலெழும்பிப் பறக்க ஒரு முனையில் மேல் நோக்கிய சரிவுப்பாதை (Ramp) அமைக்கப்பட்டு இருப்பதை பார்த்
திருப்பீர்கள். இந்த நுட்பம்தான் போர்க்கப்பலில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு மேல் நோக்கிய சரிவுப்பாதை ஓடுபாதையின் முடிவில் அமைக்கப்பட்டிருக்கும். அதிகபட்ச வேகத்தில் வரும் விமானம் இந்த மேல் நோக்கிய சரிவுப்பாதையினால் வானில் செலுத்தப்படும். இந்த சரிவுப்பாதைக்கு பனிச்சறுக்கு (Ski Jump) என்று பெயர். பனிச்சறுக்கு விளையாட்டில் வீரர்கள் இடை
யிடையே வானில் பறந்தபடி பள்ளங்களைத் தாண்டுவார்கள் அல்லவா அதனால்தான் இந்த பெயர்.
உண்டி வில்லில் (கவண்) கல்லெறியும் நுட்பமும் விமானத்தில் பயன்படுத்தப்படுகிறது. எப்படி?
(தொடரும்)
கட்டுரையாளர்: போர்விமானங்களை பற்றி முதல் தமிழ் நூலான ‘போர்ப்பறவைகள்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT