Published : 18 Nov 2019 12:14 PM
Last Updated : 18 Nov 2019 12:14 PM
இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் பாயும் ஆறுகளில் மிகவும் முக்கியமானது தாப்தி. சிலர் இதை ‘தாபி' என்றும் அழைப்பதுண்டு. சூரியக் கடவுளின் துணைவி சாயா. இவர்களின் புதல்வியின் பெயர்தான் ‘தாபி' என்பது வட இந்தியர்களின் நம்பிக்கை. பொதுவாக, இந்திய ஆறுகள் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பாயும். ஆனால், தாப்தி, நர்மதா ஆகியவை கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாய்கின்றன. இரு நதிகளும் ஏறத்தாழ இணை கோடுகளாகச் செல்கின்றன. இந்தியத் திருநாட்டுக்கு, வடக்கு, தெற்கு என்று ‘அடையாளம்' தருகின்றன.
மூன்று தடங்கள்
இந்திய ஆறுகளின் வரைபடத்தைப் பார்த்தால் தெரியும். வடக்கில் நர்மதா, தெற்கில் கோதாவரி, இரண்டுக்கும் இடையே தாப்தி என்று மூன்று தடங்கள் தனித்துத் தெரியும். மத்திய பிரதேசம் மாநிலம், பேதுல் மாவட்டம், சாத்புரா மலைப் பகுதியில், முல்தாய் எனும் இடத்தில் தாப்தி உருவாகிறது.
இதன் காரணமாக, முல்தாய் முக்கிய புனிதத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆண்டுதோறும், பெருவாரியாக மக்கள் கூடும் ‘தபி ஜன்மோத்சவம்’ அதாவது, ‘தபி பிறப்பு விழா’, வெகு விமரிசையாக நடை
பெறுகிறது. தமிழ்நாட்டில் காவிரி போல, வழிபடக்கூடிய நதியாக தாபி திகழ்கிறது.
நெடுந்தூரம் ஓடும் நதி
கண்டேஷ் பீடபூமி வழியே பயணிக்கிற தாபி மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களைக் கடந்து, சுமார் 724 கி. மீ. தொலைவுக்கு ஓடி, ‘காம்பட்’ வளைகுடாப் பகுதியில், அரபிக் கடலில் கலக்கிறது. கீமா, பூர்ணா, பஞ்சாரா, போரி, வாகர், ஏனர் உள்ளிட்ட சுமார் 40 கிளை ஆறுகள். இந்த ஆற்று நீரில் வந்து சேர்கின்றன.
இதன் மொத்தநீர்ப்பிடிப்புப் பகுதி - 65,145 ச.கி. மீ. அகோலா, அமராவதி, வாஷிம், புல்தானா, தூலே, ஜல்கான், நாசிக் & நந்தர்பூர் மாவட்டங்கள் இப்பகுதியில் அடங்கும்.
இவ்வாற்றின் கடைமடைப் பகுதியில் சுமார் 50 கி.மீ நீளம், அலைகள் நிரம்பியதாக உள்ளது. ஜல்கான், தூலே, நாசிக், பர்கான்பூர், பேதுல், சூரத் ஆகிய முக்கிய நகரங்கள் இதன் நதிக் கரையில் அமைந்துள்ளன.
இயற்கையை காக்கும் மக்கள்
முன்னெல்லாம் ‘மெக்கா’ புனித யாத்திரை செல்லும் இஸ்லாமிய அன்பர்கள், தாப்தி நதியோரம் சூரத் நகரில் தங்கி விட்டுச் செல்கிற வழக்கம் இருந்தது. தாபி நதியை ஒட்டி, ‘தோடியா’ (Dhodia) மற்றும் ‘பில்ஸ்’ (Bhils) பூர்வ குடிகள் வாழ்கின்றனர். இவர்கள் இயற்கையை பாதுகாத்து வருகின்றனர்.
இந்த நதியைச் சார்ந்து இருக்கிற வனப் பகுதி, புலி, சிங்கம், பாம்பு, கரடிகள் உள்ளிட்ட விலங்குகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாகத் திகழ்கிறது. நெடுங்காலமாக, பன்னாட்டு வணிகத்தின் நுழைவு வாயிலாக தாப்தி இருந்து வருகிறது.(தொடர்வோம்) கட்டுரையாளர்: ‘நாட்டுக்கொரு பாட்டு’, ‘பொருள்தனை போற்று’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT