Published : 15 Nov 2019 01:37 PM
Last Updated : 15 Nov 2019 01:37 PM
கவிதா நல்லதம்பி
தங்கை வெண்பாவை அழைத்துக்கொண்டு, அம்மா கொடுத்தனுப்பிய இனிப்புகளுடன் பாட்டி வீட்டிற்குப் புறப்பட்டாள் நற்பின்னை.
வழியில், கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை வாய்விட்டு வாசித்தவாறு, வந்தாள் வெண்பா.
வெண்பா: கும்பாபிஷேகம்னு நீ சொன்னதும், முன்னொரு நாள் உங்கிட்டச் சொன்ன வடமொழிச் சொற்கள் பற்றி நினைவு வருது. அதை வடசொல்னு சொல்வாங்களாம்.அந்தச் சொல்லை வாசிக்கும்போது, ‘ஷ’ங்கற எழுத்து நம்ம தமிழ் எழுத்தா இல்லையேன்னு தோணுச்சு.
நற்பின்னை: நீ சொல்றது சரிதான். ஷ, ஸ, ஜ, க்ஷ, ஹ போன்ற எழுத்துகளும், அவற்றோட உச்சரிப்பும்தான் இந்தச் சொல் தமிழ்ச் சொல் இல்ல, வடசொல்னு நமக்குக் காட்டுது. இந்த எழுத்துகளை கிரந்த எழுத்துகள்னு சொல்வாங்க. இந்த எழுத்துகள் இல்லாம, தமிழ் எழுத்துகளால் ஆன வடசொற்களும் இருக்கு. இந்தச் சொற்களைக்கூட இரண்டு பிரிவாப் பார்க்கலாம்.
வெண்பா: அதுலயும் இரண்டு வகையா?
நற்பின்னை: ஆமாம் வெண்பா. தற்சமம், தற்பவம்னு இரண்டாப் பிரிக்கிறாங்க. நம்முடைய தமிழ் எழுத்துகளால் ஆன வட சொற்களைத் தற்சமம்னு சொல்றாங்க. இந்தச் சொற்கள்ல வடமொழிக்கு உரிய சிறப்பு எழுத்துகள் எதுவும் வராது. எடுத்துக்காட்டா அனுபவம், கமலம், காரணம் போன்ற சொற்களச் சொல்லலாம்.
வட மொழிக்குரிய சிறப்பு எழுத்துகள் இடம்பெறும் சொற்களை நம்மோட தமிழ்த் தன்மைக்கு ஏற்ற மாதிரி தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதுவதைத் தற்பவம்னு சொல்றாங்க. எடுத்துக்காட்டா, பங்கஜம்னு சொல்றதத் தமிழ்ப்படுத்தி பங்கயம், வருஷத்தை வருடம், ஹரியை அரின்னு எழுதறதைச் சொல்லலாம்.
கும்பாபிஷேகம் வட சொல்தான் வெண்பா. அபிஷேகம், ஆராதனை, ஆரத்தி, அனுகூலம், புஷ்பம், அலங்காரம், அதிர்ஷ்டம், ஆனந்தம், ஏகாந்தம், பரிட்சை இப்படி நிறையச் சொற்கள் நம்ம பயன்பாட்டுல இருக்கு.
வெண்பா: ஆமாம் இதுக்கெல்லாம் தமிழ்ல சொற்களே இல்லையாக்கா?.
நற்பின்னை: ஏன் இல்ல, இருக்கு வெண்பா. கும்பாபிஷேகம்னா குடமுழுக்கு.
அபிஷேகத்துக்கு திருமுழுக்கு, ஆராதனைன்னா வழிபாடு, அனுகூலம்னா நன்மை, புஷ்பம்னா மலர், அலங்காரம்னா ஒப்பனை, அதிர்ஷ்டம்னா நற்பேறு, ஆனந்தம்னா மகிழ்ச்சி, ஏகாந்தம்னா தனிமை, பரீட்சைன்னா தேர்வு என இந்தச் சொற்களுக்கு இணையான சொற்கள் தமிழ்ல வழங்கப்படுது.
வெண்பா: இந்தச் சொற்களுக்குத் தமிழ்லயே சொற்கள் இருக்குன்னா, ஏங்க்கா வேற சொற்களப் பயன்படுத்தணும்?
நற்பின்னை: நம்ம நாட்டுல ஒவ்வொரு காலகட்டத்துலயும் வேறுவேறு மொழி பேசுகிற மக்கள் வந்து தங்கியிருக்காங்க. சிலர் நம்மீது படையெடுத்து வந்தாங்க, சிலர் வணிகம் செய்யறதுக்காக, இன்னும் சிலர் இடம்பெயர்ந்தோராக வந்தாங்க.
இப்படிப் பல மொழி பேசுகிற மக்களும், வேறுவேறு பண்பாட்டைக் கொண்ட மக்களும் நம்மிடையே வாழ்கிற சூழல் உருவானது இல்லையா. அதுதான் நம்ம மொழியில அவங்களோட சொற்கள் கலக்கவும், நம்மோட சொற்கள் அவங்க மொழியில கலக்கவும் காரணமாச்சு. இதை மொழிக் கலப்புன்னு சொல்வாங்க.
வெண்பா: அப்ப நாம தமிழ்னு நினைச்சுப் பயன்படுத்துற நிறைய சொற்கள் தமிழ்ச் சொற்கள் இல்ல அப்படித்தானே.
நற்பின்னை: இந்த மொழிக்கலப்பை எதிர்த்து ஒரு மொழி இயக்கமே நடந்ததாம்.
வெண்பா: என்னக்கா சொல்ற, மொழி இயக்கமா? யாரு அதை நடத்தினாங்க?
நற்பின்னை: தனித்தமிழ் இயக்கம்னு அதுக்குப் பேரு. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்,
மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர் போன்ற அறிஞர்கள்தான் அந்த இயக்கத்தை வழிநடத்தினாங்க.
தனித்தமிழில் எழுதுறது, தனித்தமிழ்ப் பெயரை வைக்கிறது, பிற மொழிச் சொற்கலப்பின்றிப் பேசுறது போன்றவை அவங்களால முன்னெடுக்கப்பட்ட தலையான பணிகளா இருந்துச்சு. சரி வெண்பா, மழை வர்றது போலிருக்கு. விரைவா நட.. தனித்தமிழ் இயக்கம் பற்றி விரிவாப் பேசுவோம்.
(மேலும் தித்திக்கும்)
கட்டுரையாளர், தமிழ்த் துறை பேராசிரியை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT