Published : 14 Nov 2019 10:05 AM
Last Updated : 14 Nov 2019 10:05 AM
ஆர். ரம்யா முரளி
சுறுசுறுப்புக்கு எறும்புகளையும், தேனீக்களையும் உதாரணமாகச் சொல்வது வழக்கம். எல்லோருக்கும் அது போல் இருக்க ஆசைதான். ஆனால், மனம் நினைப்பதை உடல் செய்யக் கூடிய அளவுக்கு நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா? பல குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்ததுமே புத்தக பை ஒரு பக்கம், சாப்பாட்டு பை ஒரு பக்கமுமாகப் போட்டு விட்டு சோர்ந்து போய் உட்கார்ந்து விடுவார்கள். அப்படி இல்லாமல் நாள் முழுவதும் உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடனும் இருக்க திரிகோணாசம் செய்யலாம்.
திரிகோணாசம் செய்வது எப்படி ?
பயிற்சியின் ஆரம்ப நிலையாக, கால்களை விரிப்பின் மேல் அகலமாக விரித்து நிற்க வேண்டும். முதுகுத்தண்டை வளைக்காமல், நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். அடுத்து இரண்டு கைகளையும் தோளுக்கு நேராக பக்கவாட்டில் உயர்த்தி, உள்ளங்கைகளை தரையைப் பார்த்தவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது மூச்சை சாதாரண நிலையில் இழுத்து விட வேண்டும். பிறகு மூச்சை மெதுவாக விட்டவாறே இடது பக்கமாக இடுப்பை வளைத்தவாறு குனிந்து, இடது கையை, இடது காலின் கணுக்காலை ஒட்டினாற்போல் தரையில் வைக்க வேண்டும். வலது கையை வளைக்காமல், நேராக வைக்க வேண்டும். அடுத்து தலையைத் திருப்பி வலது கை விரல்களின் நுனியைப் பார்க்க வேண்டும்.
முடியுமானால் இந்த நிலையில் ஏழு முதல் பத்து எண்ணிக்கை வரை இருக்கலாம். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே நேராக நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் விரித்தபடி பழைய நிலைக்கு வர வேண்டும்.
பிறகு மூச்சை விட்டுக் கொண்டே வலது கைப்பக்கம் இடுப்பை வளைத்துக் குனிந்து, வலது கைவிரல் நுனிகள் வலது காலின் கணுக்காலுக்கு ஒட்டினாற்போல் தரையில் படும்படியான நிலையில் வைக்க வேண்டும். இந்த நிலையிலும் பத்து எண்ணிக்கை வரை இருக்கலாம். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே நிமிர்ந்து கைகளை விரித்து பழைய நிலைக்கு வர வேண்டும். இது போல் ஆறு தடவைகள் வரை செய்யலாம்.
திரிகோணாசனம் (2)
கால்கள் இரண்டையும் அகலமாக வைத்து நிற்கவும். பின்னர் இரண்டு கைகளையும், தோளுக்கு நேராக பக்கவாட்டில் உயர்த்தி, உள்ளங்கைகளை தரையை பார்த்தவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, மூச்சை மெதுவாக விட்டவாறே குனிந்து, வலது கையை மட்டும் கீழ் நோக்கிக் கொண்டுவந்து, இடது காலின் விரல்கள் மீது வலது கை விரல்கள் படுமாறு வைக்க வேண்டும்.
அதே நேரம், இடது கையை நன்றாக மேலே உயர்த்தி நீட்டவும். குனிந்த நிலையில், முகத்தை இடதுபக்கமாக மேல்நோக்கித் திருப்பி, இடது உள்ளங்கையை உற்றுப் பார்க்கவும்.
பின்னர், சுவாசத்தை உள்ளிழுத்தவாறு, வலது கையை மேலே உயர்த்தியபடி, உடலை நேராக வைத்து, இடது கையைகீழே இறக்க வேண்டும். இதே போல், கைகளை வலது மற்றும் இடது என மாற்றி மாற்றி பத்து முறை வரை செய்யலாம்.
பலன்கள்
திரிகோணாசனம் செய்யும் போது, முதுகெலும்பு நன்றாக திரும்பி வளைவதால், நுரையீரல்கள் பலம் பெறும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம் பாய்வதால், அனைத்து உறுப்புகளும் பலம் பெற்று இளமையான தோற்றம் கிடைக்கும். இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். மேலும் இடுப்பு பலம் பெறும். கைகளை மேல்நோக்கித் திருப்பிப் பார்ப்பதால், கண்களுக்கு ரத்த ஓட்டம் கிடைத்து, பார்வை கூர்மையாகும்.
(யோகம் தொடரும்)கட்டுரையாளர்: யோகா நிபுணர்.
எழுத்தாக்கம்: ப.கோமதி சுரேஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT