Published : 14 Nov 2019 10:02 AM
Last Updated : 14 Nov 2019 10:02 AM

டிஜிட்டல் கில்லாடி ஆகலாம் 5- சிலிக்கான் மூளையின் வெளி உலக தொடர்பு

பாலாஜி

மனித உடலில் உள்ள கண், காது, வாய் உள்ளிட்ட உறுப்புகள் அனைத்தும் சீராக இருந்தாலும் சில நேரம் செயலிழந்துவிடுவதுண்டு. அப்போது மருத்துவர்கள் முழுமையாக பரிசோதித்து விட்டு உறுப்புக்கள் எல்லாம் ஒழுங்காக இருக்கின்றன ஆனால் மூளையில்தான் எதோ பிரச்சினை என்பார்கள்.

மூளைக்குள் செயல்படுத்தும் பகுதி, ஞாபகப் பகுதி ஆகியவை இருந்தாலும் வெளி உலகுடன் தொடர்பு கொள்வதற்கு என்று சில பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகள் நரம்பு மூலமாக கை, கால், காது, வாய் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்கின்றன. மூளையில் உள்ள இந்த சிறு சிறு செயலிகள் வெளியுலகத் தொடர்புகளுக்கு பயன்படுகின்றன.

அதே போல் சிலிக்கான் மூளையாகிய மைக்ரோகன்ட்ரோலரிலும் சில சிறிய செயலிகள் உள்ளன. இந்த செயலிகளுக்கு கன்ட்ரோலர்கள் என்றுபெயர். இந்த கண்ட்ரோலர்கள் மைக்ரோகன்ட்ரோலரின் செயல்பாட்டு பகுதி வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ள பயன்படுகின்றன.

எப்படி மூளையிலுள்ள செயல்படும் பகுதியால் நேரடியாக கை கால்களை கட்டுப்படுத்த இயலாதோ அதே போல்மைக்ரோபிராஸசரால் நேரடியாக LED,மோட்டார் போன்ற சாதனங்களை கட்டுப்படுத்த முடியாது. மைக்ரோபிராஸசர் கன்ட்ரோலர்கள் மூலமாக LED, சுவிட்சுபோன்ற சாதனங்களை கட்டுப்படுத்துகிறது.

எப்படி நமது வீட்டில் உள்ள சுவிட்சுபல்வேறு சாதனைகளை கட்டுப்படுத்துகிறதோ அதே போல கண்ட்ரோலரில் உள்ள வெளியீடு பின்களின் உதவியால் எந்த ஒரு மின் சாதனத்தையும் கட்டுப்படுத்த முடியும். அதே போல் மின்சாரத்தின் அளவையும் உள்ளீடு பின் மூலமாக படிக்க முடியும்.

ஒரு நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு தொடர்பு கொள்ளும் பகுதிகளை போர்ட் என்று அழைப்பார்கள். அதாவது டிரான்ஸ்போர்ட், ஏர்போர்ட், sea port (துறைமுகம்) என்று அழைக்கிறோம். அதே போல் மைக்ரோகண்ட்ரோலர் வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளும் பின்களை ‘போர்ட்’ (PORT) என்று அழைக்கிறோம். வெளியீடு பின்களை ‘OUTPUT PORT’ என்றும், உள்ளீடு பின்களை ‘INPUT PORT’ என்றும் அழைக்கிறோம். பொதுவாக வெளியீடு போர்ட்டில் 8 பின்களும், உள்ளீடு போர்ட்டில் 8 பின்களும் இருக்கும்.

புதிய வகை மைக்ரோகன்ட்ரோலர்களில் உள்ள போர்ட்டில் 32 பின்கள் உள்ளன. ஒரு மைக்ரோகன்ட்ரோலரில் எவ்வளவு போர்ட்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். பாதி போர்ட் (4 பின்கள்) முதல் 10 போர்ட்கள் வரை என பல்வேறு வகைகள் உள்ளன. மைக்ரோகன்ட்ரோலர்களில் போர்ட்டை P0,P1.. அல்லது PORT0, PORT1,… அல்லது PA,PB… அல்லது PORTA, PORTB என்று பல விதங்களில் அழைக்கிறார்கள்.

8 பின்களில் ஒவ்வொரு பின்னிற்கும் ஒரு மதிப்பு உள்ளது. 8 பின்கள் என்பது 0 முதல் 7 வரை ஆகும். ஒவ்வொரு பின்னிற்கும் அதன் எண்ணைப் பொறுத்து அதன் மதிப்பு இருக்கும். பின் 0 – 1, பின் 1 – 2, பின் 2 – 4,பின் 3 – 8, பின் 4 – 16, பின் 5 – 32,பின் 6 – 64, பின் 7 – 128, ‘P0 = 36’என்று எழுதினால் அதை மைக்ரோபிராஸசர், “போர்ட் 0-ல் 36-ஐ எழுது” என்று புரிந்துகொள்ளும். ஆனால், போர்ட் 0 பின்களுக்கு 1, 2, 4, 8, 16, 32, 64, 128 என்று எண்கள் உள்ளதால், 36 என்ற எண்ணை 32 4 என்று புரிந்து கொண்டு 32 மதிப்புள்ள பின்னிலும், 4 மதிப்புள்ள பின்னிலும் 5V– ம், மற்ற பின்கள் எல்லாவற்றிலும் 0V–ம் கொடுக்கும்.

இந்த பின்களை வைத்து எந்த மின்சாதனத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

அதே போல் உள்ளீட்டுப் போர்ட்டில் இந்த 8 பின்களிலும் சுவிட்சை இணைந்துஎன்ன சுவிட்சை அழுத்தினாலும் அந்தப் பின்னுக்கு உரிய மதிப்பை மைக்ரோகன்ட்ரோலர் உள்ளீடு போர்ட் P1 மூலமாக படிக்கும். எப்படி இவற்றை உபயோகிப்பது என்று அடுத்த வாரம் பார்க்கலாம்.

(தொடரும்)

கட்டுரையாளர்: பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x