Published : 14 Nov 2019 09:58 AM
Last Updated : 14 Nov 2019 09:58 AM

அட்டகாசமான அறிவியல் 6- மிதக்கும் கப்பலில் எப்படி விமானம் தரையிறங்குகிறது?

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

பிரம்மாண்டமான விமானந்தாங்கி கப்பல் என்பது ஒரு மிதக்கும் விமான தளம். ஏறக்குறைய 75 போர் விமானங்களை நிறுத்துமளவுக்கு பெரிய விமானந்தாங்கி கப்பல்கள் உள்ளன.

இந்திய கடற்படையில் உள்ள விக்ரமாதித்யா கப்பலில் முப்பதுக்கும் அதிகமான போர் விமானங்களை நிறுத்தலாம். தரையில்அமைந்திருக்கும் விமான தளத்தை போல நீளமான ஓடுபாதை கப்பலில் சாத்தியமில்லை. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் போர் விமானத்தை எப்படி விமானந்தாங்கி கப்பலில் தரையிறக்குகிறார்கள்? அதிலுள்ள அறிவியல் என்ன?விமான எஞ்சின் தருகிற உந்து விசை (Thrust) விமானத்தை முன்னோக்கித் தள்ளும். காற்றினால் ஏற்படும் எதிர்விசை (Drag) விமானத்தை பின்னோக்கி இழுக்கும். விமானத்தை நிறுத்த எதிர்விசையை அதிகரிக்க வேண்டும். அதே நேரம் உந்து விசையையும் குறைக்க வேண்டும். எடை, வேகம் இரண்டின் பெருக்குத் தொகைதான் உந்தம் (Momentum) என அறிவியல் பாடத்தில் படித்திருப்பீர்கள். விமானத்தின் எடையும் அதன் வேகமும் தரும் உந்தம் உடனடியாகக் குறையாது. படிப்படியாக குறைக்க நீளமான ஓடுபாதை தேவை.

மிதக்கும் ஓடுபாதைஒரு போர் விமானம் தரையிறங்க ஏறக் குறைய 1.5 கி.மீ. நீளமுள்ள ஓடுபாதை தேவை. ஓடுபாதை நீளம் குறைவாக அமைந்த மலைப் பகுதிகளில் போர் விமானத்தின் வால் பகுதியில் பாராசூட்டை பயன்படுத்தி போர்விமானத்தின் வேகத்தை விமானி குறைத்து அதை நிறுத்துவார் எனபார்த்தோம். வாலில் பாராசூட்டைபயன்படுத்துவதன் மூலம் ஏறக்குறைய பாதி தூரத்தில் (0.75 கி.மீ.) விமானத்தை நிறுத்தலாம். ஆனால், விமானந்தாங்கி கப்பலில் இருக்கும் ஓடுபாதையின் நீளம் எவ்வளவு தெரியுமா? ஏறக்குறைய 0.3 கி.மீ. இதில் எப்படி விமானத்தை நிறுத்துவது? விமானம் கடலில் விழுந்து விடாதா?மிகக் குறுகிய தூரத்திலேயே விமானத்தை நிறுத்த காற்றின் எதிர்விசைமட்டும் போதாது. அதைவிட அதிகஎதிர்விசைதேவை. எப்படி எதிர்விசையைஉருவாக்குவது? ஒரு மாணவியின்சடைபின்னலை இன்னொரு மாணவி பிடித்து இழுத்துவிளையாடும் வால்தனங்கள் பள்ளியில் நடப்பதுண்டு அல்லவா? இதே விளையாட்டுதான் போர் விமானத்தை கப்பலில்தரையிறக்க பயன்படுத்தப்படுகிறது.

வால் கொக்கி நுட்பம்விமானத்தில் வால் பகுதியில் ஒரு உலோககொக்கி பொருத்தப்படும். கப்பலில் ஓடுபாதையின் குறுக்கே உலோகக் கயிறு கட்டப்படும். போர் விமானம் ஒடுபாதையை தொட்டவுடன் விமானி கொக்கியை விடுவிப்பார். விடுவிக்கப்பட்ட கொக்கி தரையில் உரசிக் கொண்டே செல்லும். அப்படி செல்லும்போது ஓடுபாதையின் குறுக்கில் உள்ள உலோகக் கயிற்றில் கொக்கிசிக்கும். இதனால் முன் செல்லும் விமானத்தை உலோகக்கயிறு இழுத்துப்பிடிக்கும். உலோகக் கயிறு விமானத்தின் இயக்கஆற்றலை (Kinetic Energy) உள்வாங்கிக்கொள்வதால், வேகம் குறைக்கப்பட்டு விமானம் நிறுத்தப்படும். இது ஒடுக்கப்பட்ட தரையிறக்கம் (ArrestedLanding) எனப்படுகிறது. இந்த நுட்பத்தின் மூலம் விமானத்தை கப்பலின் சிறிய ஓடுபாதையில் நிறுத்த முடியும்.

அது சரி. கொக்கி உலோகக்கம்பியில் சிக்கவில்லை என்றால் என்ன செய்வது?(தொடரும்)கட்டுரையாளர், போர்விமானங்களை பற்றி முதல் தமிழ் நூலான ‘போர்ப்பறவைகள்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x