Published : 13 Nov 2019 10:35 AM
Last Updated : 13 Nov 2019 10:35 AM
வடிவமைப்பு தொடர்பான நுழைவுத் தேர்வுகளில் ஆடை மற்றும் ஆபரண வடிவமைப்பு, தோல் பொருள் வடிவமைப்பு ஆகியவற்றை பார்த்தோம். இவற்றுடன் செராமிக், மரப்பொருள், உள்ளலங்காரம், அனிமேஷன், கிராஃபிக்ஸ் போன்றவற்றிலும் வடிவமைப்பு தொடர்பான உயர்கல்வி படிப்புகள் தனியாக உள்ளன.
இந்தப் படிப்புகளை அகமதாபாத், காந்தி நகர், பெங்களூரு ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு செயல்படும் தேசிய வடிவமைப்பு நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த கல்வி நிறுவனத்திலும் இதன் வளாக கல்வி நிலையங்களிலும் சேர்ந்து பலவிதமான வடிவமைப்பு பட்டம் (Bachelor of Design) மற்றும் பட்டதாரி நிலையிலான பட்டயப் படிப்பு (Graduate Diploma Program in Design) ஆகியவற்றை படிக்கலாம்.
இதற்கு தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் NID-DAT (National Institute of Design – Design Aptitude Test) என்ற நுழைவுத் தேர்வை எழுதி உரிய கட்-ஆஃப் மதிப்பெண்களை பெற வேண்டும்.
தேவையான தகுதி
தேசிய அளவிலான இந்த நுழைவுத் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும். நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்து பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரருக்கான வயது உச்ச வரம்பு 30.06.2020 நாளன்று 20 ஆக இருக்க வேண்டும். இதில் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படுகிறது.
தேர்வு முறை
பிரிலிம், மெயின் என 2 நிலைகளில் தேர்வுகள் நடைபெறும். முதல் நிலையில் தேர்வானவர்கள் மட்டுமே அடுத்த நிலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். விண்ணப்ப நடைமுறைகள் உட்பட முழு விவரங்களும் அடங்கிய கையேட்டினை தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம்செய்து அறிந்துகொள்ளலாம்.
டிசம்பர் 20 அன்று தேர்வு எழுதுவதற்கான அனுமதி கடிதத்தைத் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இரண்டு நிலையிலான தேர்வுகளும், 100 மதிப்பெண்களுக்கான 3 மணி நேரத் தேர்வுகளாக அமைந்திருக்கும்.
நுழைவுத் தேர்வு: NID-DAT
தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் இணையதளம்: admissions.nid.edu/NIDA2020/default.aspx
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 18.11.2019 (தாமத கட்டணத்துடன் - 21.11.19)
தேர்வு நடைபெறும் நாள்: 29.12.2019
தேர்வு முடிவு: 19.03.2020
இதன் முடிவை வைத்து மெயின் தேர்வை எழுத வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.2000. (எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1000)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT