Published : 05 Nov 2019 09:47 AM
Last Updated : 05 Nov 2019 09:47 AM
தேவிகாபுரம் சிவா
இணையதளங்களில் காணும் WWW என்பது World Wide Web என்பதன் சுருக்கம். இதை வையவிரிவலை எனத் தமிழில் குறிப்பிடுகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள கணினிகளை இணையம் மூலம் இணைக்கும் ஒரு தொழில்நுட்பம்தான் www. கண்ணுக்குத் தெரியாத இந்த பிரம்மாண்டமான மாயவலைத் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர், திம் பெர்னர்ஸ் - லீ. இந்த அற்புதம் நிகழ்த்தப்பட்ட ஆண்டு 1989. அந்தவகையில் இந்தக் கண்டுபிடிப்பின் முப்பதாவது ஆண்டு இது.
லீயின் இளமைப் பருவம்
இங்கிலாந்தில் லண்டன் நகரில் 1955, ஜூன் 8 அன்று திம் பெர்னர்ஸ்-லீ பிறந்தார். இவரது தாய் மேரி லீ வுட், தந்தை கான்வே பெர்னர்ஸ்- லீ, இருவருமே கணினி நிபுணர்கள். எனவே சிறுவயதிலேயே கணினித் துறையால் லீ ஈர்க்கப்பட்டார். கல்லூரியில் படிக்கும்போது,தொலைக்காட்சி பெட்டியைப் பழுதுபார்க்கும் கடை ஒன்றில் இருந்து பழுதுபட்ட டிவி ஒன்றை பெற்று அதைக் கணினியாக மாற்றினார்.
WWW கண்டுபிடிப்பு
அறிவியலில் முதுகலைப் படிப்பை முடித்தபின், பல நிறுவனங்களில் கணினி விஞ்ஞானி, கணினி பொறியாளர் போன்ற பொறுப்புகளில் பணியாற்றினார். செர்ன் (CERN) நிறுவனத்துக்காக ஒப்பந்த மென்பொருள் விஞ்ஞானியாக 1980-களின் இறுதியில் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டார். அந்நிறுவனத்தில் பணியாற்றிய நூற்றுக்கணக்கானவர்களின் ஆய்வுத்தகவல்கள் கணினிகளில் தனித்தனியே சேமிக்கப்பட்டிருந்தன. அவை அனைத்திலும் உள்ள தகவல்களை தொகுப்பதும் பகுப்பதும் லீக்குப் பெரும் சவாலாக இருந்தது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கதீவிர ஆராய்ச்சியில் இறங்கினார். ஏற்கனவே 1980-ல் தான் கண்டுபிடித்திருந்த ‘Enquire' மென்பொருளின் துணையோடு பிரச்சினைக்கான தீர்வைக் கண்டடைந்தார். 1989, மார்ச் 12 அன்று புத்து
லகின் மகத்தான கண்டுபிடிப்பான world wide web-www பற்றிய முன்மொழிவை செர்ன் நிறுவனத்திடம் முன்வைத்தார்.
அந்த முன்மொழிவை வாங்கி பரிசீலித்த செர்ன் நிறுவனத் தலைமை நிர்வாகி, “தெளிவாக இல்லை. ஆனால், ஆர்வ
மூட்ட கூடியதாக உள்ளது” என்று சொன்னார்.
மூன்று முக்கிய கூறுகள்
லீ தன் முன்மொழிவில் WWW-வின் மூன்று முக்கிய கூறுகளை எடுத்துரைத்திருந்தார். ஒன்று HTML. இது இணையதளம் உருவாக்கத் தேவையான கணினி மொழி. இரண்டாவது HTTP. இது ஒருகணினியில் இருந்து இன்னொரு கணினிக்குத் தகவல்களை அல்லது கோப்புகளை மாற்றுவதற்கான ஏற்பாடு. மூன்றாவது URL. இது வலைப்பக்கத்தின் இணைய முகவரி.
உலகை மாற்றிய தொழில்நுட்பம்
தன் கண்டுபிடிப்பின் உதவியோடு செர்ன் நிறுவனத்துக்காக ஒரு இணையதளத்தை 1990-ல் லீ உருவாக்கினார். உலகின் முதல் இணையதளம் அதுதான்.
அந்த இணையதளம் வெறும் உரையாக (text) மட்டுமே வடிவமைக்கப்பட்டிருந்தது. இன்று நாம் அனைத்துத் தொழில்நுட்பங்களையும் இணைய வழிஇணையதளங்கள் மூலம் பெற்றுக்கொள்கிறோம். அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, மருத்துவம், பொழுது போக்கு என ஒவ்வொரு துறைக்கும் எண்ணற்ற இணையதளங்கள் செயல்படுகின்றன. அனைத்திற்கும் திம் பெர்னர்ஸ் லீயின் www கண்டுபிடிப்புதான் அடிப்படை.
‘Weaving the web: The Original Design And Ultimate Destiny of the World Wide’ ‘A Framework for Web Science’ ஆகியவை லீ எழுதியிருக்கும் முக்கியமான புத்தகங்கள். டைம்ஸ் இதழ் வெளியிட்ட இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நூறு நபர்களில் லீயும் ஒருவராய் இடம்பிடித்துள்ளார்.
இணையத் துறைப் போராளி
இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் பல்கலைக்கழகத்தில் லீ, பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். வணிக நோக்கம் இன்றி பொதுமை நோக்கில் உலக மக்கள் அனைவருக்கும் இணைய வசதி தரப்பட வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் நினைத்திருந்தால், தன் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெற்று மைக்ரோசாஃப்ட், கூகுள் நிறுவனங்களை விட அதிகம் சம்பாதித்திருக்க முடியும். ஆனால், தன் கண்டுபிடிப்பை இலவசமாகவே உலகுக்கு அளித்த பெருந்தகை லீ. இன்று தன் கண்டுபிடிப்பின் வழி வளர்ந்த இணையதள தொழில்நுட்பத்தின் மீது அரசாங்கங்களும், பெருநிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்துவது, இணையத்தில் உள்ள தனிநபர்களின் தகவல்கள் திருடப்படுவது, அரசாங்கங்களின் கண்காணிப்புக்குள்ளாவது போன்றவற்றை லீ கடுமையாக எதிர்க்கிறார்.
- கட்டுரையாளர் எழுத்தாளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT