Published : 04 Nov 2019 11:16 AM
Last Updated : 04 Nov 2019 11:16 AM

ஐம்பொறி ஆட்சி கொள் 3: எளிமையை அணிவோம்

முனைவர் என்.மாதவன்

ஒரு செல்வந்தர் வீட்டில் விருந்து நடைபெறுகிறது. அவர் வீட்டுப் பணியாளர்கள் விழாவுக்கு வந்திருப்பவர்களை வரவேற்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அதே விருந்துக்குச் சாதாரண வேட்டியோடும், செருப்போடும் ஒருவர் வருகிறார்.

இவரை பார்த்தால் விருந்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டவராக தெரியவில்லை. காவலாளிகள் அவருக்கு அனுமதி வழங்க மறுக்கின்றனர். அழைப்பு விடுத்துத்தான் அவர்வந்திருந்தார். அதை எடுத்துச்சொல்லியும் எடுபடவில்லை. அவரும் அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார்.

அதுவே சாப்பிடட்டும்!

சிறிது நேரத்தில் கோட்டும் சூட்டும்அணிந்துகொண்டு ஆடம்பரமாக அவரே வருகிறார். எந்த காவலர்கள் அவரை இதற்கு முன்னர் உள்ளே அனுமதிக்க மறுத்தனரோ அவர்களே இரு கரம் கூப்பி வணங்கி உள்ளே அழைத்து சென்று இருக்கையில் அமரச் செய்கின்றனர். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் விருந்துண்ண செல்கின்றனர். அந்த நபர் தற்போதுசாதாரண உடைக்கு மாறிவிடுகிறார். தான் அணிந்து வந்த கோட்டையும் சூட்டையும் விருந்துண்ணும் நாற்காலியில் வைத்து அதனருகில் சென்று, “சாப்பிடுங்க சாப்பிடுங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்.

விழாவுக்கு வந்திருந்த பலருக்கும் இவரை நன்கு தெரியும். ஆதலால் விழா நடத்தும் செல்வந்தரிடம் சென்று நடந்ததைக் கூறுகின்றனர். அவரும்ஓடோடி வருகிறார். “என்ன நடந்தது,ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள்?” என்று கேட்கிறார். அப்போது நடந்த விஷயங்களை விவரித்து, “இந்தகோட்டும் சூட்டும்தானே என்னை உள்ளே வர அனுமதித்தது எனவே உணவையும் அதுவே சாப்பிடட்டும்” என்கிறார்.

நடந்தவற்றுக்கு மன்னிப்பு கோரியதோடு அந்த காவலாளிகளையும் அழைத்து மன்னிப்புக் கேட்கச்சொல்கிறார் விழாவை நடத்தும் செல்வந்தர். விருந்தின் பங்கேற்பாளர்கள் அனைவரும் உண்மையை உணர்கின்றனர்.

வங்காள மேதை

இவ்வளவு எளிமையாக எளிமையின் அருமையைப் புரியவைத்தவர் வேறு யாருமல்ல. திருவாளர் ஈஷ்வர்சந்திர வித்யாசாகர் (1820- 1891)என்ற வங்காளத்தில் வாழ்ந்த அறிஞர்,சிந்தனையாளர், கல்வியாளர், பன்மொழிப்புலவர். கணவனை இழந்தவர்கள் மறுமணத்திற்காக பாடுபட்டவர். வங்காள மொழி சீர்திருத்தத்திற்கு மிகவும் தொண்டாற்றியவர்.

வாழ நினைத்தால்...

எளிமை என்றால் என்ன? என்றகேள்விக்கு, கிலோ என்ன விலை என்று கேட்குமளவுக்கு இன்று நம்முடையவாழ்க்கை முறை மாறிவருகிறது. ‘எளிமையை கைக்கொள்ளாத ஒவ்வொரு நிமிடமும் வறுமையை நோக்கி வேகமாக முன்னேறுகிறோம்’ என்ற ஒரு
சொற்றொடர் உண்டு. தேவை இல்லாததை சேர்க்க சேர்க்க தேவையானவற்றை இழக்க நேரிடும் என்பதும் அன்றாடம் காதில் விழும் வாசகம்.

நமது வாழ்க்கையை நாம் வாழ நாம் சிரமப்படத் தேவை இல்லை. அதேநேரம் அடுத்தவர் வாழ்க்கையை நாம் வாழ நினைத்தால்தான் வாழ்க்கை முறையில் தொல்லைகள் அதிகரிக்கும். ஆடை அணிகலன்கள்தான் என்றில்லை, நடை, உடை, பாவனை என்ற அனைத்திலும் எளிமையைக் கை கொள்வது கூடுதல் தகுதியாகும்.

ஆனால், நடைமுறையில் ஒருதிருமண வீட்டிற்குச் செல்லும் ஒவ்வொருவரும் அந்த விழாவின் நாயகன்,நாயகியரான மணமக்களுக்குப் போட்டியாக ஒப்பனை செய்துகொள்வது வாடிக்கையாகிவருகிறது. திரைப்படத்தின் கதாநாயகர்களே முன்மாதிரி
யாகத் திகழும் இளையோருக்கோ கேட்கவே வேண்டாம். கடன் வாங்கியாவது ஆடம்பரத்தை கைக்கொள்ளவே விரும்புகின்றனர்.

இயல்பே அழகு!

வட்ட மேசை மாநாட்டிற்குச் சென்ற காந்தியடிகளை நினைவு கூருங்கள். அந்த நாட்டின் தட்பவெப்ப நிலையை நினைத்துக்கூட அவர் தனது உடையைமாற்றிக்கொள்ளவில்லை. தனது இயல்பான உடையிலேயே சென்றார்.

சராசரியான குடும்பங்களிலிருந்து பள்ளிக்கு வரும் நமக்கு நமது குடும்பச்சூழல் நன்றாகத் தெரியும். நம்முடன் இருப்பவர்களுக்கும் நன்றாகத் தெரியும்தானே. இயல்பாக இருப்பதற்கு நாம் எந்தவிதமான கூடுதல் தயாரிப்பிலும் இறங்கத் தேவை இல்லை. ஒப்பனைகளுக்குத்தான் கூடுதல் தயாரிப்புகள் தேவை. சரிஒவ்வொருவருக்காகவும் நாம் நடிக்கதொடங்குகிறோம் என்றே வைத்துக்
கொள்வோம். அந்த நடிப்பையும்ஒப்பனையையும் எத்தனை நாட்களுக்கு பராமரித்துவிட இயலும்?

- கட்டுரையாளர் பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x