Published : 29 Oct 2019 10:23 AM
Last Updated : 29 Oct 2019 10:23 AM
தேவிகாபுரம் சிவா
எடிசன் முதல் ஏவிஎம் வரை, மிஸ்டர் பீன் முதல் சோட்டா பீம் வரை நிகழ்த்திய- நிகழ்த்தப்படும் ஒளிநிழல் அற்புதங்களுக்கெல்லாம் தாய் ஃபெனாக்கிஸ்டஸ்கோப் (Phenakistoscope) கருவிதான். இந்தக் கருவியை உருவாக்கியவர் ஜோசப் பிளேட்டவ். ‘திரைப்படத்தின் தந்தை’ என இவர் அறிவியலுலகில் கொண்டாடப்படுகிறார்.
ஓவியரின் மகன்
ஜோசப் அந்துவன் ஃபெர்டினண்ட் பிளேட்டவ், பெல்ஜியம் நாட்டின் பிரஸ்சல்ஸ் நகரத்தில் 1883, அக்டோபர்14 அன்று பிறந்தார். ஜோசப்பின் தந்தை ஓவியர். தன் மகன் தன்னைப்போலவே ஒரு சித்திரக்காரனாக வரவேண்டும் என்று அவர் விரும்பினார். அதனால், தொடக்க கல்விக்குப் பிறகு, ஜோசப்பை நுண்கலைப் பள்ளிஒன்றில் சேர்த்துவிட்டார்.
ஒரு மேதை உருவாகிறார்
நுண்கலைப் பள்ளியில் படித்தாலும் அவரது இயல்பான ஆர்வம் அறிவியல் மீதுதான் இருந்தது. இயற்பியல் நூல்களை ஆர்வத்தோடு வாசித்தார். ஆய்வுக்கூடப் பொருட்களை தானே உருவாக்கினார். நுண்கலைப் படிப்பைப் படித்து முடித்த பிறகு பிரஸ்சல்ஸ் நகரில் இருந்தஅறிவியல் கல்லூரியில் சேர்ந்தார்.
அங்கு அடால்ஃப் குவாட்லெ என்ற அற்புதமான கணித ஆசிரியர் மூலமாகத் தன் ஆற்றலை உணர்ந்தார். அங்கு பட்டம் பெற்ற பிறகு குவாட்லெயின் வார்த்தையைத் தட்ட முடியாமல் அடுத்து சட்டத்துறையில் பட்டப்படிப்பை முடித்தார். இனியும் தாமதிக்கக்கூடாது, தான் விரும்பியதைப் படிக்க வேண்டும் என்றஉறுதியுடன், அதே பல்கலைக்கழகத்தில் இயற்பியலையும் கணிதத்தையும் படித்து முடித்தார். இந்தக் கட்டத்தில், குடும்பச் சூழல் காரணமாக ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக வேலையில் சேர்ந்தார்.
புரட்டிப் போட்ட ஆய்வுக்கட்டுரை
ஆசிரியராக பணியாற்றிக்கொண்டேஆராய்ச்சியையும் தொடர்ந்தார். மனிதனின் விழித்திரையில் ஒளியால் ஏற்படும் விளைவுகள் குறித்தஆய்வுக்கட்டுரையை லீச் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தார். 27 பக்கங்களை மட்டுமே கொண்டஅந்த ஆய்வுக்கட்டுரை பேராசிரியர்களை வியப்பில் ஆழ்த்தியது. 1829-ல் இதற்காக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு புகழின் உச்சியை அடைந்தார்.
விழித்திரை மீதான ஒளிவிளைவு குறித்த ஆய்விற்காக பிளேட்டவ் சூரியனை வெறும் கண்களால் பர்த்தார். 25 வினாடிகள் அவர் நிகழ்த்திய அந்த அபாயகரமான செயல் அவர் கண்களைப் பறித்தது. அறிவியலுக்காக கண்களை இழந்தாலும் அதன் மீதான காதலை அவர் இழக்கவில்லை. ஆய்வுப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார்.
ஃபெனாக்கிஸ்டஸ்கோப்
ஜோசப் பிளேட்டவ்வின் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது அவர்உருவாக்கிய ஃபெனாக்கிஸ்டஸ்கோப் கருவி. இந்தக் கருவியில் இரண்டு வட்டுகள் கிடைமட்டமாக ஒன்றுக்கு ஒன்று எதிர்திசையில் சுழலும்படி அமைத்திருந்தார். ஒன்றில் ஒரு காட்போர்டு அட்டை செங்குத்தாகப் பொருத்தி அதில் கண்ணால் பார்ப்பதற்கான துளை ஒன்றை ஏற்படுத்தினார். இன்னொரு வட்டில் நடனக் காட்சி ஒன்றின் பல்வேறு நிலைகளை ஒரு அட்டையில் தொடர்ச்சியாக நிரல்படுத்தி, செங்குத்தாகப் பொருத்தினார். இப்போது இரண்டு வட்டுகளும்சீரான வேகத்தில் எதிர் எதிர்த்திசையில் சுழல நடனக் காட்சி அசையும் படக்காட்சியாகத் தோன்றியது. இன்றைய திரைப்படங்களுக்கும் அனிமேஷன் படங்களுக்கும் விதை போடப்பட்ட கணம் அதுவே.
பிளேட்டவ் விதிகள்
நீர்மங்கள் ஏன் எப்போதும் முடிந்தவரைச் சிறு பரப்பில் சுருங்கிக்கொள்கின்றன என்பதை ஆராய்ந்தார்.
சோப்புக் குமிழ்கள், எண்ணெய், நீர்ஆகியவற்றில் அவர் இந்த ஆராய்ச்சியை செய்தார். பரப்பு இழுவிசை எனும்பண்பை நீர்மங்கள் கொண்டிருக்கின்றன என்பதை இந்த ஆய்வு உணர்த்தியது. பிளேட்டவ் விதிகள் (plateausLaws) என இது அழைக்கப்படுகிறது ஒன்றாகக் கலந்தாலும் எண்ணெய்யும்தண்ணீரும் ஏன் பிரிந்து இருக்கின்றன? பிள்ளையார் எப்படி பால்குடிக்கிறார்? இந்தக் கேள்விகளுக்குக்கெல்லாம் விடை, பரப்பு இழுவிசையில்தான் உள்ளது.
“ஜோசப் பிளேட்டவ், பெல்ஜியம் நாட்டின் அறிவியலுக்குச் சாகா வரத்தைப் பெற்றுத்தந்தவர்” என்று விஞ்ஞானி மைக்கேல் ஃபாரடே போற்றினார்.
- கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: devikapuramsiva@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT