Published : 25 Oct 2019 09:52 AM
Last Updated : 25 Oct 2019 09:52 AM

அறம் செய்யப் பழகு 2- எது கல்வி?

பிரியசகி

மனிதத் தன்மையை மீட்கும் கல்விமுறை என்பது ஆசிரியர்கள் செல்வாக்கு செலுத்துவதாக அல்லாமல், ஒரு அறிவுச் செய்தியை மனனமாக ஏற்காது, ஆசிரியரும் மாணவரும் கூட்டாக இணைந்து, அதை விமர்சன பூர்வமாய் உள்வாங்கி மறு உருவாக்கம் செய்ய முன் வருவதாகும்.

- பாவ்லோ ஃப்ரையிரே

கற்றல் குறைபாடுள்ள சக மாணவருடன் பரிவிரக்கத்துடன் நடந்து கொள்வது பற்றி தனராஜ் குடும்பத்தினர் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜா: அப்பா, கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை மற்றவர்கள் புரிந்து கொள்ளணும்னு சொல்றீங்க. ஆனா சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கே அந்தத் தெளிவு இருக்குமான்னு தெரியலை. போன மாசம் கீர்த்தி ஸ்கூலுக்குப் போனபோது ஒரு பொண்ணோட அம்மாகிட்ட டீச்சர் ரொம்ப கோபமா, ‘‘இப்படி எல்லா பாடத்திலயும் மோசமா மார்க் வாங்கினா இந்த வருஷம் உங்கப் பொண்ணு பெயிலாகிடுவா. எட்டாவது வரைக்கும் ஆல்பாஸ் ஆன மாதிரி கிடையாது; இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம்”னு திட்டினாங்க. அந்தம்மா, ‘‘எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும் அந்த நேரம் சொல்றா, எக்ஸாம்ல எழுதாம விட்டுட்டு வந்துடுறா மேடம்; என்னப் பண்றதுனே தெரியலை”ன்னு பரிதாபமா சொல்லிக்கிட்டிருந்தாங்க. ஒரு வேளை எட்டாவது வரைக்கும் ஆல்பாஸ் பண்ணாம, சரியா வாசிக்கத் தெரியாதவங்கள ஃபெயில் பண்ணா, பயந்து படிச்சிருவாங்களோ?

தனராஜ்: அடிச்சு, திட்டி, பயமுறுத்தியெல்லாம் ஒரு குழந்தையப் படிக்க வைக்க முடியாதுப்பா. படிப்பதற்கு ஏற்ற சூழலும், சரியான பயிற்சி முறைகளும்ரொம்ப முக்கியம். எட்டாவது வரைக்கும் இடைநிற்றல் இல்லாம எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கு வந்து படிக்கணும்ன்ற நோக்கத்துலதான் தொடர்மதிப்பீட்டு கல்வி முறையை அறிமுகப்படுத்தினாங்க. தன் மாணவர்கள் அடைய வேண்டிய கற்றல் திறன்களை அடைய வைக்க வேண்டியது ஆசிரியர்களோட கடமை. அவர்களோடு ஒத்துழைக்க வேண்டியது பெற்றோரின் கடமை. எப்படியும் பாஸ்தானேன்ற சில பெற்றோரின் அலட்சிய மனப்பான்மையும், நான் சொல்லிக் கொடுக்
கும் முறையில இந்தக் குழந்தைக்கு கத்துக்க முடியலைனா, எப்படிக் கத்துக் கொடுத்தா கத்துக்கும் என்று பலவித முறைகளை முயற்சித்துப் பார்க்கும் அர்ப்பணிப்பு குணம் இல்லாத சில ஆசிரியர்களும்தான் இந்த நிலைக்குக் காரணம்.

ராணி: ஒரு பயிற்சி வகுப்பில் கருத்தாளர் ஒருத்தர் ‘தாரே ஜமீன்பர்’ என்ற இந்தி படத்தை காமிச்சு ‘டிஸ்லெக்சியா’ பத்தி விளக்கினார். தனக்கு எல்லாம் தெரியுமென்ற எண்ணம் இருக்கும் ஆசிரியர்கள் சிலர் பயிற்சியாளர் பேசும்போது, எனக்குத் தெரியாததை நீ என்ன பெருசா சொல்லிடப் போறே என்ற மனோபாவத்தோட இருந்தாங்க. அவங்க மாதிரி ஆசிரியர்கள்தான் இந்த குழந்தைகளை கஷ்டப்படுத்துறாங்க.

தன்ராஜ்: காலிப் பாத்திரத்தில்தான் எதையாவது நிரப்ப முடியும். ஏற்கெனவே நிரம்பி வழியும் பாத்திரத்தில் மேற்கொண்டு ஊற்ற முடியாது இல்லையா! மற்றவர்கள் பேசுவதில் உள்ள நல்லவற்றை ஏற்றுக்கொள்பவர்கள் காலிப் பாத்திரம் போல. ஆசிரியர்கள் காலிப்பாத்திரங்களா இருந்தாதான் காலத்திற்கேற்ப தன்னை மேம்படுத்திக்கிட்டு தன்னை நம்பி வரும் மாணவர்களையும் மேம்படுத்த முடியும்.

சுதாகர்: தாத்தா, நான் பெருசானதும் நண்பன் படத்துல வர்ற ஸ்கூல் மாதிரி பசங்கள அடிக்காம, திட்டாம, சுதந்திரமா சிந்திக்கவிடுற ஒரு ஸ்கூல் நடத்தப் போறேன். அந்த ஸ்கூல்ல பசங்களுக்கு என்ன பிடிக்குதோ, எதுல திறமை இருக்கோ அந்தப் பாடம் படிச்சா போதும். எக்ஸாம், மார்க், பாஸ், பெயில்னு எந்த டென்ஷனும் இருக்காது. அங்க பசங்க டீச்சர்ஸ்கிட்ட பயமில்லாம பேசுவாங்க, விவாதிப்பாங்க, தன்னோட எண்ணங்களை தைரியமா வெளிப்படுத்துவாங்க.

தன்ராஜ்: சந்தோஷம்ப்பா, சொல்லப்போனா அதுதான் ஒரு நல்ல பள்ளிக்கூடம். அடுத்த தலைமுறை குழந்தைகளுக்காவது அந்த மாதிரி நல்ல கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கட்டும்.

(தொடர்ந்து பழகுவோம்)

கட்டுரையாளர், எழுத்தாளர்,

டான் போஸ்கோ உளவியல் நிறுவனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x