Published : 22 Oct 2019 09:01 AM
Last Updated : 22 Oct 2019 09:01 AM

அறிவோம் அறிவியல் மேதையை 3: கண்டுபிடிப்புகளின் பேரரசன் எடிசன்

தேவிகாபுரம் சிவா

"ஒரு அஞ்சல் அட்டையில் அவருடைய உருவப்படத்தை மட்டும் வரைந்து அஞ்சல் பெட்டியில் போட்டால் அது நியூஜெர்சியில் மென்லோ பார்க்கில் உள்ள அவருக்கு சென்று சேர்ந்துவிடும்"- இப்படி ஒரு வேடிக்கைப் பேச்சு அந்த காலத்தில் அமெரிக்காவில் இருந்ததாம்.

அந்த அளவுக்கு தான் வாழ்ந்தகாலத்திலேயே மக்களால் கொண்டாடப்பட்ட மகத்தான விஞ்ஞானியாக விளங்கியவர் எடிசன்.

முட்டாள் பையன்

தாமஸ் ஆல்வா எடிசன் 1847 பிப்ரவரி 11 அன்று சாமுவேல், நான்சிதம்பதியரின் மகனாக அமெரிக்காவில் மிலன் என்ற ஊரில் பிறந்
தார். ஐந்து வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஓரிரு மாதங்களிலேயே ‘முட்டாள் பையன்’ என முத்திரை குத்தி எடிசனை வெளியேற்றிவிட்டது பள்ளி. எடிசனின் அன்னையே ஆசிரியர் என்பதால் வீட்டிலேயே செல்ல மகனுக்கு கல்வி புகட்டினார். எடிசனும்
ஆர்வத்துடன் அம்மாவிடம் பயின்றார்.

பாடப் புத்தகங்களுக்கு வெளியேயும் நிறைய நூல்களை படிக்கத் தொடங்கினார். அவரது தந்தை, மகனின் அறிவு தாகத்தை மெச்சி
உள்ளுர் நூலகத்தில் உறுப்பினராகச்சேர்த்துவிட்டார். எடிசன், பெறும் உற்சாகத்தோடு அறிவியல், தொழில்நுட்பம், அகரமுதலி, இலக்கியம் என தேடித்தேடிப் படித்தார்.

இளம் விஞ்ஞானி

அறிவியல் நூல்களை படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவற்றில் உள்ள கருத்துக்களைச் சோதித்து அறிய விழைந்தார். தனது வீட்டின் கீழ்த்தளத்தில் தட்டு முட்டுப் பொருட்களுக்குஇடையில் சிறிய ஆய்வுக்கூடம் ஒன்றை அமைத்துக் கொண்டார். ஆராய்ச்சி செய்வதற்கு தேவைப்படும்வேதிப்பொருட்கள், கருவிகளை வாங்க பணம்? எடிசன் செயலில் இறங்கினார். ரயிலில் பத்திரிக்கைகள், இனிப்பு பண்டங்கள், காய்கறிகள் ஆகியவற்றை விற்றார்.

இளம் இதழாளர்

ரயிலில் பத்திரிக்கை விற்ற எடிசனுக்கு தானும் ஒரு பத்திரிக்கை தொடங்க வேண்டும் என ஆசை வந்தது. ‘வீக்லி ஹெரால்டு’ என்ற பத்திரிக்கையைத் தொடங்கினார். இளம் வயதில் எடிசனிடம் உருவான இந்த தொழில் முனைப்பு பிற்காலத்தில்
அமெரிக்காவின் முக்கிய தொழில் அதிபராக அவரை உயர்த்தியது. 14 நிறுவனங்களுக்கு முதலாளியாக உயர்ந்தார்.

முதல் கண்டுபிடிப்பு

அக்காலத்தில் தகவல் பரிமாற்றத்தின் முக்கிய தொழில்நுட்பமாகத் தந்தி என்றழைக்கபடும் டெலிகிராப் விளங்கியது. மோர்ஸ் என்பவர் இதைக் கண்டுபிடித்தார். சிறுவன் எடிசனுக்கு இந்த தந்தி தொழில் நுட்பம் பெரும் ஆர்வத்தை தந்தது.

ரயில் நிலைய தந்தி அதிகாரி மூலம் தந்தி முறையை கற்று அந்த தொழில் நுட்பத்தில் பல முன்னேற்றங்களைச் செய்தார். பங்குச்சந்தை குறியீட்டு எண்ணை அறிய உதவும் ‘ஸ்டாக் டிக்கர்' என்ற கருவியை கண்டு பிடித்தார். எடிசனின் முதல் கண்டுபிடிப்பு இதுதான். அதன் பிறகுஅமெரிக்காவில் நியு ஜெர்ஸி மாகாணத்தில் எடிசன் அமைத்திருந்த மென்லோ பார்க் ஆராய்ச்சிக்கூடம் படுசுறுசுறுப்பானது. 11 நாட்களுக்கு ஒரு சிறு கண்டுபிடிப்பு ஆறு மதத்திற்கு ஒரு பெரிய கண்டுபிடிப்பு என இலக்கு நிர்ணயித்து ஆராய்ச்சியில் ஓயாது ஈடுபட்ட எடிசன் ஏராளமான புதுக்கருவிகளையும், தொழில்நுட்பங்களையும் கண்டுபிடித்தார்.

இன்றைய தலைமுறையினரின் எல்லா மகிழ்ச்சிகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் அடிப்படையாக எடிசனின் கண்டுபிடிப்புகள் உள்ளன. மின்விளக்கு, மின்சாரம், நான் மடித்தந்தி, போனோகிராப் எனும் கிராமபோன் இசைத்தட்டு கருவி, மின்சார ரயில், திரைப்படம், சிமெண்ட் கான்கிரீட் என எடிசன் 1368 கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார். இது ஒரு உலக சாதனை.

நேற்மறைச் சிந்தனையாளர்

எடிசனும் ஆயிரக்கணக்கான தோல்விகளைச் சந்தித்தவர்தான். ஆனால், தோல்விகளை அவர் அணுகிய விதம் அசாத்தியமானது. சேம மின்கலம் தயாரிப்பு ஆராய்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்களைப் பயன்படுத்திப் பார்த்து எதுவும் சரியாக வராமல் இறுதியாக கார்பன்தான் பொருத்தமானது என்று கண்டுபிடித்தார். இந்த தொடர் தோல்விகள் பற்றி கேட்டபோது, "நான் சேம மின்கலம் தயாரிக்கப் பயன்படாத 1000 பொருள்களைக் கண்டுபிடித்துவிட்டேன்" என்றார். இதுதான் எடிசனின் வெற்றி ரகசியம்.
அன்பு மாணவர்களே! எடிசன் உங்களுக்காக விட்டுச்சென்றுள்ள வெற்றிச் சூத்திரம் இதுதான், 1% உள்ளுணர்வு + 99% உழைப்பு = 100% வெற்றி.

- கட்டுரையாளர், எழுத்தாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x