Published : 22 Oct 2019 08:57 AM
Last Updated : 22 Oct 2019 08:57 AM

சுலபத்தவணையில் சிங்காசனம் 2: போர் விமானியாக பறக்கலாம் வாங்க!

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

தேசத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் நம் அனைவராலும் கொண்டாடப்படுகிறார். நீங்களும் அபிநந்தனைப் போல போர் விமானியாக வேண்டுமா? ஆகலாம்.

2018-ல், ஃபளைட் லெப்டினெண்ட் அவனி சதுர்வேதி தன்னந்தனியாக மிக்-21 போர் விமானத்தை இயக்கி, இந்தியாவின் முதல் பெண் போர் விமானி எனப் பெயரெடுத்தார். அவரைப்போல மாணவிகளும் போர் விமானி ஆகலாம்.

எப்படி போர் விமானியாவது?

போர் விமானியாக நான்கு வழிகள் உண்டு. பிளஸ் 2 முடித்தவுடன் அல்லது பட்டப்படிப்பு முடித்தவுடன் போர் விமானி ஆகலாம்.
பிளஸ் 2-வில் இயற்பியல், கணித பாடங்களை படித்தவர்கள் தேசிய பாதுகாப்பு கல்வி நிலையத்தில் (National Defence Academy-NDA) சேர்ந்து பயிற்சி பெற்று விமானி ஆகலாம். மத்திய பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission-UPSC) என்.டி.ஏ. நுழைவுத் தேர்வை நடத்துகிறது. (விவரங்களுக்கு - upsc.gov.in/examinations). ஜனவரி மற்றும் ஜூன்மாதங்களில் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். இந்த தேர்வு மாணவர்களுக்கு மட்டும்தான். மாணவிகள்? தொடர்ந்து படியுங்கள்!

பட்டப் படிப்புக்கு பிறகு விமானி

பிளஸ் 2-வில் இயற்பியல், கணிதபாடங்களை படித்து பின்பு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்தவர்களும் பொறியியல் பட்டப் படிப்பை முடித்தவர்களும், யூ.பி.எஸ்.சி நடத்தும் ‘கூட்டு பாதுகாப்பு பணிகள் தேர்வை’ (Combine Defence Services Exami
nation) எழுதி விமானிப் பணியில் சேரலாம். ஆகஸ்டு மற்றும் நவம்பர் மாதங்களில் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். இந்த தேர்வும் மாணவர்களுக்கு மட்டுமே.

ஹெலிகாப்டர் விமானி?

போர் விமானம் மட்டுமின்றி, ராணுவ ஹெலிகாப்டர், ராணுவ போக்குவரத்து விமானம் ஆகியவற்றை இயக்கும் விமானி ஆவதற்கும் மேலே குறிப்பிட்ட நான்கு தேர்வுகளையே எழுத வேண்டும். ஆண்டுக்கு இரண்டு முறை இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்பதையும் கவனிக்கவும்.

விஞ்ஞானி டாக்டர்.அப்துல் கலாம் நம் எல்லோருடைய உள்ளங்களிலும் இடம்பிடித்திருப்பவர். அவரைப் போல விஞ்ஞானியாவது எப்படி? அதற்கு என்ன படிக்க வேண்டும்?

(தொடர்ந்து பேசுவோம்)

- கட்டுரையாளர், ‘ஏவுகணையும் கொசுக்கடியும்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.

மாணவிகள் விமானியாவது எப்படி?

மாணவர்களோடு மாணவிகளும் விமானியாக இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, தேசிய மாணவர் படையில் (என்சிசி) – விமானப் படைப்பிரிவில் முதுநிலை பகுதி-சி சான்றிதழ் பெற்றவர்களுக்காக சிறப்பு நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வை இந்திய விமானப்படை நடத்துகிறது.

அடுத்த வழி, விமானப்படை பொது நுழைவுத் தேர்வு (Air force Common Admission Test- AFCAT). இந்த தேர்வையும் இந்திய விமானப்படைதான் நடத்துகிறது. இந்த இரண்டு தேர்வுகளையும் எழுத பிளஸ் 2-வில் இயற்பியல், கணித பாடங்களோடு ஏதேனும் ஒரு பட்டம் அல்லது பொறியியல்பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும்.

( பார்க்க https://afcat.cdac.in/AFCAT/ )

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x