Published : 15 Oct 2019 11:59 AM
Last Updated : 15 Oct 2019 11:59 AM
அருண் சரண்யா
வெள்ளை நிறப் பின்னணியில் வெவ்வேறு வண்ணங்களில் ஐந்து வட்டங்கள் கொண்ட ஒலிம்பிக் கொடியின் அர்த்தம் என்ன? அது எப்போது வடிவமைக்கப்பட்டது?
ஐந்து வட்டங்களும் ஐந்து கண்டங்களைக் குறிக்கின்றன. இந்த கொடி 1920-ல் ஆண்ட்வெர்ப் நகரில் (பெல்ஜியம்) நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
(ஒலிம்பிக்ஸில் ஹாக்கி அறிமுகமானதும் அங்குதான்). 1913-ல் பியரி டெ கூபர்டின் (Pierre De Coubertin) என்பவர் இதை வடிவமைத்தார். கொடியின் பின்னணி வெள்ளையாக இருக்கும். எந்தவித பார்டரும் கிடையாது. நீலம், மஞ்சள், கறுப்பு, சிகப்பு மற்றும் பச்சை வண்ண வட்டங்கள் கொடியின் நடுவே வரையப்பட்டிருக்கும். இவற்றில் மேல் வரிசையில் நீலம், கறுப்பு, சிகப்பு வட்டங்களும் கீழ் வரிசையில் மஞ்சள், பச்சை வட்டங்களும் காட்சியளிக்கும். இந்தக் கொடியை உருவாக்கிய பியரி டெ கூபர்டினுக்கும் ஒலிம்பிக்ஸுக்கும் என்ன தொடர்பு?அவரைத்தான் நவீன ஒலிம்பிக் விளையாட்டின் தந்தை என்கிறார்கள்.
எதனால் அப்படிக் குறிப்பிடுகிறார்கள்?
பியரி டெ கூபர்டின் பிரெஞ்சுக்காரர். 1863-ம் ஆண்டு ஜனவரி 1 அன்று பிறந்தார். செல்வந்தர். 1870-ல் நடைபெற்ற போரில் ஜெர்மானியர்கள் ஃபிரான்ஸை ஆக்கிரமித்தபோது அவருக்கு ஏழு வயதுதான். தன் நாடு தோற்றுப் போனதற்குக் காரணம் ராணுவத்தினரின் திறமையின்மை அல்ல என்று உறுதியாக நம்பினார். ஜெர்மானிய, பிரிட்டிஷ், அமெரிக்கக் குழந்தைகளை ஃபிரெஞ்சுக் குழந்தைகளோடு பலவிதங்களில் ஒப்பிட்டுப் பார்த்த அவர், போதிய உடற்பயிற்சி - முக்கியமாக விளையாட்டு தொடர்பானவை - மட்டுமே முழுமையாக ஊக்கம் மிக்க மனிதனை உருவாக்கும் என்று தீர்மானித்தார்.
ஒலிம்பிக்கை உயிர்ப்பித்தவர்
ஒரு விளையாட்டு அமைப்பை 1890-ல் தொடங்கினார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் விளையாட்டுகளை மீண்டும் புதுப்பிக்கத் தீர்மானித்தார். அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கிரேக்கர்களால் உருவாக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டுக்கு உயிரூட்டினார்.
அவரது கருத்து பரவலாக வரவேற்கப்பட்டது. விளையாட்டில் திறமை மிக்கவர்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது ஒரு காரணம் என்றால், ஓரளவாவது உலக அரங்கில் இதன் மூலம் அமைதி திரும்பாதா என்ற ஏக்கமும் மற்றொரு காரணம். இரண்டு வருடங்கள் கழித்து ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 79 பிரதிநிதிகளை அழைத்து அவர்களிடம் தன் விருப்பத்தை பியரி டெ கூபர்டின் தெரிவித்தார். அனைவரும் ஒத்துக்கொண்டதுடன், விளையாட்டுகளை நடத்த ஒரு சர்வதேச குழுவையும் அமைக்க வேண்டும் என்று கூறினார்.
அதுதான் இன்னும் தொடரும் சர்வதேச
ஒலிம்பிக் குழு (IOC)
லட்சிய வாசகம் என்ன?
ஒலிம்பிக் விளையாட்டின் லட்சிய வாசகம் (motto), ‘சிடியஸ், அல்டியஸ், ஃபோர்டியஸ்'
(citius, altius, fortius). அதாவது ‘வேகமாக, உயரமாக, உறுதியாக'.
உறுதிமொழி யாருக்கு?
ஒலிம்பிக் விளையாட்டின் தொடக்கத்தில் ‘ஒலிம்பிக் விதிகளுக்குக் கட்டுப்படுவதாக' உறுதிமொழி எடுத்துக் கொள்வது யார்? ஒவ்வொரு விளையாட்டு வீரரும்தான். அது மட்டுமல்ல, ஒலிம்பிக்ஸ் நடக்கும் நாட்டைச் சேர்ந்த ஒரு அதிகாரியும் இந்த உறுதி மொழியை, பிற அதிகாரிகளின் சார்பில், எடுத்துக் கொள்வார்.
(ஆட்டம் தொடரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT