Published : 10 Oct 2019 11:34 AM
Last Updated : 10 Oct 2019 11:34 AM
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோயற்ற வாழ்க்கை என்பது இன்றைய சூழலில் அதிசயமாகி வருகிறது. குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர்வரை நோய்களின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்ப செயல் என்ற வள்ளுவப் பெருந்தகையின் வழியில் மாணவப் பருவத்திலேயே நோயற்று வாழும் வழியை யோகக்கலை மூலம் அறிந்துகொள்வோம்.
முன்னோர்கள் நமக்குத் தந்த மாபெரும் பொக்கிஷம் யோகக்கலை. யோக தத்துவத்தை நெறிப்படுத்திய பதஞ்சலி முனிவர், “யோகம் செய்வதற்கும் யோகம் வேண்டும்” என்றார். யோகப் பயிற்சி செய்யும்போது சரியான முறையில் மூச்சை இழுத்து விடும்போதுதான் பலன் அதிகம். யோகாவைப் பற்றிய நம்முடைய பல கேள்விகளுக்கான விடையாக அமைய இருப்பதே இந்தத் தொடரின் நோக்கம். காலப்போக்கில் எவையெல்லாம் நவீனம் என்ற சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டனவோ அவற்றில் பல இன்று ஆரோக்கியத்துக்கான வழி என்று திரும்ப நம்மால் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
இன்று காசு கொடுத்து ஆரோக்கியத்திற்கு என்று எதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோமோ அவற்றைத்தான் நம்முடைய முந்தைய தலைமுறையினர் தங்களுடைய அன்றாட வாழ்வியல் முறையாக வகுத்து வைத்திருந்தனர். தங்களுடைய ஆரோக்கியத்தின் தடமாகப் பகுத்துக் கொண்டனர். எழுபதில் வாழ்ந்த அப்பச்சியும், அப்பத்தாவும் உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க எந்த ஜிம்முக்கு போனார்கள்? ஆனால், இன்று புரியாத பல நோய்கள் எந்நேரமும் யாரையும் பிடித்தாட்டும் என்று நிலை வந்திருக்கிறது.
ஆரோக்கிய குறைபாடுகள் ஏன்?
ஏன் இத்தனை ஆரோக்கிய குறைபாடுகள்? நம்முடைய முந்தைய தலைமுறையினர் பின்பற்றி வந்த வாழ்வியல் முறைகளை நாம் பின்பற்ற தவறியதே இதற்குக் காரணம். டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸில் அதிக விலை கொடுத்து பெருமையாக வாங்கி வரும் சிறுதானிய வகைகள் அனைத்தும் ஏதோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிய உணவு வகை அல்ல. அவை நம்முடைய பாட்டனும், முப்பாட்டனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவைதான்.
நம் முன்னோர்கள் நேரம் பார்த்துச் சாப்பிட்டவர்கள் அல்ல. காட்டு மேட்டில்வியர்வை பொங்க உழைத்து, வயிறாரகம்பும் கேப்பையுமாக தின்றவர்கள். அதனால்தான் பேரன் பேத்திகள் தாண்டிகொள்ளுப்பேரன் பேத்திகளுடன் விளையாட முடிந்தது.
படித்தது மனத்தில் பதியவேண்டுமா?
ஒரு நாளின் 24 மணி நேரத்தில் நமக்காக நம் ஆரோக்கியத்துக்காக செலவு செய்யும் நேரம் விலை மதிப்பில்லாதது. கிட்டத்தட்ட நம்முடைய எதிர்காலநலனுக்காக நாம் செய்யும் ஆரோக்கிய முதலீடு. எந்த சாக்குப்போக்கும் சொல்லாமல், செய்ய வேண்டும் என்று நினைத்தாலே போதும்.
இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு இருக்கும் பொதுவான பிரச்சினை நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, ஞாபக மறதி. ஒரு புறம் குழந்தைகள்வயதிற்கும் மீறிய வளர்ச்சியுடன் இருக்க,இன்னொரு புறம் புத்தக மூட்டையை நகர்த்தி வைக்கக்கூட திராணி இல்லாமல்இருக்கும் குழந்தைகளையும் பார்க்கத்தான் செய்கிறோம்.
எத்தனை படித்தாலும் மனத்தில் பதியவே இல்லை என்று ஒரு புறமும். நன்றாகத்தான் படித்தேன், இரவு படித்தது தலையணையோடு போய்விட்டது, காலையில் நினைவில் இல்லை என்று மறுபுறமும் புலம்பும் குழந்தைகள் நம்வீட்டிலேயே உண்டுதானே! ஓடி விளையாடு பாப்பா...என்று இந்தக் காலத்துக் குழந்தைகளிடம் பாரதியேகூடச் சொல்ல முடியாது. தங்களின்வாழ்க்கை,பெற்றோரின் கனவுகள், சமூக நிர்ப்பந்தங்கள் எனப் பல சுமைகளுடன் இக்காலக் குழந்தைகள் கால நேரம் இன்றி ஓடிக் கொண்டிருக்க அவர்களை உடல் ஆரோக்கியத்துடனும், மன வலிமையுடனும் வைத்திருக்க யோகப் பயிற்சியால் முடியும்.
அற்புதக் கலை
வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எத்தனையோ உடற்பயிற்சிகள் இருந்தாலும் யோகப் பயிற்சியானது மனத்தையும் உடலையும் செம்மைப்படுத்தும் அற்புதக் கலை. அடுத்த தலைமுறையை தேகப் பலத்துடன், புத்தி பலத்துடன் வளர்க்க யோகக்கலையை பற்றி தெரிந்துகொள்வோம்.
(யோகம் தொடரும்)கட்டுரையாளர்: யோகா நிபுணர்.
எழுத்தாக்கம்: ப.கோமதி சுரேஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT