Published : 09 Oct 2019 08:29 AM
Last Updated : 09 Oct 2019 08:29 AM

ஆசிரியருக்கு அன்புடன் 01:  ஆம்! அவர்கள் குழந்தைகள்!

அமைதியான வகுப்பறையே நல்ல ஆசிரியரின் அடையாளம் என்று சொல்லப்படுகிறது. வகுப்பறையைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதே உலகமெங்கும் ஆசிரியர்களின் தேடலாக இருக்கிறது. லண்டன் மாநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள பள்ளி அது. ஓர் இளைஞர் உள்ளே நுழைகிறார். ஆசிரியர் அறைக்குச் செல்லும் வழியில் இருந்த வகுப்பறையின் கதவைத் திறக்கிறார்.காகித ராக்கெட்டுகள் பறந்து கொண்டிருக்கின்றன.

ஆசிரியர் அறை அல்ல!

சில மாணவ மாணவியர் மேசைகளின் மீது அமர்ந்து சத்தமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கூச்சலும் கும்மாளமுமாக இருக்கிறது. ஒரு மாணவன், “இது ஆசிரியர் அறை அல்ல!” என்று சொல்லிச் சிரிக்கிறான். அந்த இளைஞர் ஆசிரியர் அறைக்குச் செல்கிறார். அவரை வரவேற்கும் ஆசிரியரின் பேச்சில் இங்கு வேலை பார்ப்பது கடினம் என்பதும் கறுப்பர் என்ற கிண்டலும் வெளிப்படுகிறது. உதவித் தலைமையாசிரியரும் சக ஆசிரியைகளும் அவரை வரவேற்கின்றனர். பொறியாளர் வேலை கிடைக்கும் வரை ஆசிரியர் வேலைக்கு வந்த அந்த இளைஞரின் பெயர் தாக்கரே.

உடைந்து போனவர்கள்

ஏறத்தாழ 15 வயதுடைய மாணவ மாணவியர் நிரம்பிய வகுப்பறை. ஆளுக்கொரு அலட்சியத் தோற்றத்தில் வகுப்பறைக்குள் இருக்கிறார்கள். தாக்கரேக்கு கடும் கோபம் வருகிறது. பாடவேளை முடியும்வரை அவர் என்ன சொன்னாலும் அலட்சியமும் கேலியும் தொடர்கின்றன. மாணவர்களில் சிலர் வாசிக்கவே சிரமப்படுவதை அறிகிறார் தாக்கரே. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது உதவித் தலைமையாசிரியர் வருகிறார்.

நிலையை உணர்ந்து, “இவர்கள் வாழும் சூழல் கொடுமையானது. வீட்டில் அவர்கள் மீது வீசப்படும் கடுமையான வார்த்தைகளால் ஏற்கெனவே உடைந்துபோய் இருப்பார்கள். அதுபோல் வகுப்பறையிலும் நடந்துவிடாமல் கவனமாக இருங்கள். உங்களை ஏதும் செய்யும் முன் அவர்களைச் சரி செய்யுங்கள்” என்று தாக்கரேவிடம் கூறுகிறார்.

பெருத்த அவமானம்!

அடுத்த நாள் காலை. தாக்கரே பள்ளிக்குள் நுழையும்போது மாடியிலிருந்து விழுந்த தண்ணீர் பாக்கெட் தலையில் விழாமல் நூலிழையில் தப்பிக்கிறார். கோபம் கொப்பளிக்க வகுப்பறைக்குள் நுழைகிறார். துர்நாற்றம். சானிடரி நாப்கின் எரிக்கும் பெட்டி வகுப்பறைக்குள் புகைந்து கொண்டிருக்கிறது. தாக்கரேவுக்குக் கோபம் வெடிக்கிறது.

மாணவர்கள் அனைவரையும் வகுப்பறைக்கு வெளியே அனுப்பிவிட்டு மாணவிகளைக் கடுமையான வார்த்தைகளால் திட்டுகிறார். “இப்படிப்பட்டக் கேவலமான செயல்களை உங்கள் வீடுகளில் செய்யுங்கள். என் வகுப்பறையில் வேண்டாம்!” என்று கோபமாகச் சொல்லியபடியே வெளியேறுகிறார்.

ஆசிரியர் அறைக்குள் வேகமாக வரும் தாக்கரேவைப் பார்த்ததும் சக ஆசிரியை என்ன நடந்தது என்று கேட்கிறார்.
“என் வாழ்நாள் முழுவதும் நான் அடைந்த எல்லா அவமானங்களையும் சில நாட்களிலேயே இவர்கள் எனக்கு கொடுத்து விட்டனர். அந்தக் குழந்தைகள் சாத்தானோடு கலந்தவர்கள். எவ்வளவு பொறுமையாக முயற்சி செய்தேன் தெரியுமா?” என்று கோபத்தில் கத்திய தாக்கரே ஒரு கணம் திகைக்கிறார்.
“குழந்தைகள், ஆம். அவர்கள் குழந்தைகள்!” என்று சொல்லும்போது அவரது முகத்தில் தெளிவு நிறைகிறது.

நீங்கள் அழைத்துச் செல்வீர்களா?

வகுப்பறைக்கு விரைகிறார். மாணவ மாணவியர் அமைதியாக உட்கார்ந்திருக்கின்றனர். அவரது மேசை மேலிருந்த பாடப் புத்தகங்களை எடுத்துக் குப்பைக்கூடையில் போடுகிறார். அனைவரும் திகைக்கின்றனர். “இவை நமக்குத் தேவையில்லை. நீங்கள் எல்லோரும் சிறிது காலத்தில் பெரியவர்கள் ஆகப் போகின்றீர்கள். எப்படி ஒரு மதிப்புமிக்க வாலிபராக நடந்துகொள்வது என்பது குறித்தவற்றைப் பழகுவோம். ஏதேனும் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு கலந் துரையாடலாம்” என்று அறிவிக்கிறார். வகுப்பில் கலந்துரையாடல் தொடங்குகிறது.

எதிர்ப்பைக் காட்டுவது என்றால் என்ன என்று ஒரு மாணவர் கேட்கிறார். ‘‘கட்டுப்பாடுகளை எதிர்த்துக் கிளர்ந்தெழுவது. ஒரு வகையில் உங்களது சிகை அலங்காரம், உடை ஆகியவைகூட எதிர்ப்புதான். காலம் காலமாக முடியும் உடையும் இது போல் பலவகைகளில் மாறி வந்திருக்கின்றன. அருங்காட்சியகம் சென்றால் அதை நன்கு அறியலாம்’’ என்று தாக்கரே விளக்கமளிக்கிறார்.“நீங்கள் அழைத்துச் செல்வீர்களா?” என்று ஒருவர் கேட்க அந்த வகுப்பறை புதிய பாதைக்குள் எட்டு வைக்கத் தொடங்குகிறது.

கொஞ்சம் கொஞ்சமாகப் பல்வேறு சூழ்நிலைகளில் மாணவ மாணவியர் வாழ்வியலை, கல்வியைக் கற்கத் தொடங்குகின்றனர். தான் தேடிய பொறியாளர் வேலை கிடைத்தாலும் ஆசிரியர் வேலையிலேயே தொடர தாக்கரே முடிவு செய்வதுடன் படம் முடிவடைகிறது.

பிரைத்வெயிட் என்ற ஆசிரியரின் சுயசரிதை நாவலாக 1959-ல் வெளிவந்து 1967-ல் ‘To sir, with love' என்றத் திரைப்படமாக்கப்பட்டது. அறைகளுக்குள் கல்வி அடைபட்டபின் நூற்றாண்டுகளாக மாற்றம் ஏதுமின்றி அப்படியே இருக்கின்றன, வகுப்பறைகளும் பிரச்சினைகளும். வழக்கங்களைத் தாண்டி வகுப்பறையைக் கலகலப்பாகவும் உரையாடல்களின் களமாகவும் ஆக்கும் ஆசிரியர்களே குழந்தைகளிடம் தேடலை உருவாக்குபவர்களாக இருக்கிறார்கள்.

- ரெ.சிவா,

கட்டுரையாளர், எழுத்தாளர், பள்ளி ஆசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x