Published : 07 Oct 2019 06:32 PM
Last Updated : 07 Oct 2019 06:32 PM

திசைகாட்டி இளையோர்-1; பருவநிலை பாதுகாப்புப் போராளி – கிரெட்டா

"இங்கு பருவநிலை கடுமையாகப் பாதிப்படைந்துவிட்டது. பூமியில் நாம் வெளிவிட்ட கரிம வாயுவினால் பூமியைப் பாதுகாத்து வந்த ஓசோன் படலம் கிழிந்து தொங்குகிறது. ஊடகங்களும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத் தவறி விட்டன. இது பற்றி எந்தக் கவலையும்படாமல் உலகத் தலைவர்களே, நீங்கள் பணம் சம்பாதிப்பது பற்றி மட்டும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

என் எதிர்காலக் கனவுகளை, குழந்தைத் தன்மையை உங்கள் வெற்று வார்த்தைகளால் திருடிவிட்டீர்கள். நாங்கள் சாகத் தொடங்கியுள்ளோம்.உங்களை நாங்கள் மன்னிக்கவே மாட்டோம்!" என்று ஆவேசமாக ஐ.நா.சபையில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் வீர உரை ஆற்றிய 16 வயது இளம்பெண்தான் கிரெட்டா. சென்ற வருடம்வரை சாதாரணப் பள்ளி மாணவி அவர். இன்று உலகம் பேசும் தலைவியாகிவிட்டார்.

உலகைப் பற்றிய கவலை!

பள்ளியில் திரையிடப்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றிய ஆவணப்படங்கள் அவருக்குள்ளே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்கிறார். இதன் விளைவாகச் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து தன் பெற்றோரிடம் பேச ஆரம்பித்தார். தகவல்களைத் தீவிரமாகத் தேடத் தொடங்கினார்.

எட்டு வயதில் கிரெட்டாவுக்கு அஸ்பர்ஜர் என்னும் உளவியல் நோய் உருவாகியது. இதனால் அவரால் சரளமாகப் பேசவோ சகஜமாகப் பழகவோ முடியாது. ஆனால், அது பற்றிய கவலையை விட, உலகை மொத்தமாக அழிக்க உள்ள தட்ப வெட்ப சீர்கேட்டைத் தடுக்க, தான் என்ன செய்ய முடியும் என்பது பற்றிய கவலை அவரை ஆட்கொண்டது.

பருவநிலை சீர்கேட்டிற்கு முக்கியக் காரணம் மனிதர்கள் உருவாக்கும் கரிம வாயு வெளிப்பாடு, பசுமை இல்ல வாயுக்களின் வெளிப்பாடு. நாம் பயன்படுத்தும் வாகனங்களும், குளிர் சாதனங்களும் கார்பன் டை ஆக்சைடை அதிகமாகத் தினமும் வெளியிடுகின்றன. ஒரு நாளைக்கு 10 கோடி பேரல் எரிபொருள் எண்ணைப் பூமியில் எரிக்கப்படுவதால் மாசு உண்டாகிறது. இதன் விளைவாக வரும் தலைமுறை மெல்ல மெல்ல அழிவார்கள் என்பதையெல்லாம் புரிந்துகொண்டார் கிரெட்டா. எனவே தன் செயல்பாட்டை முதல்கட்டமாகத் தன் வீட்டில் இருந்தே தொடங்கினார்.

அம்மாவுக்கு அன்புக் கட்டளை

புகழ்மிக்க ஓப்பரா பாடகியான, தன் அம்மா மெலினா, வெளிநாடுகளுக்கு இனி விமானத்தில் பயணம் செல்லக் கூடாது என்று அன்பு கட்டளையிட்டார் கிரெட்டா. காரணம், விமானங்கள் வெளியிடும் புகை அதிக அளவில் ஓசோனைப் பாதிக்கின்றது என்பதாகும். மகள் பேச்சைக் கேட்டு அம்மாவும் விமானப் பயணத்தைத் தவிர்த்துவிட்டார். அதேபோன்று இறைச்சி உணவு தயாரிப்பு சூழலுக்குக் கேடு என்று கிரெட்டா கருதியதால், சைவ உணவுக்குக் குடும்பமே மாறியது. வீட்டில் மட்டுமின்றி, சக மாணவர்களிடமும் சுற்றுச்சூழல் மாசு பற்றியும் பெரியவர்களுடைய அலட்சியத்தால் பூமி சூடேறிவருவதையும் தொடர்ந்து விளக்கிவந்தார்.

வெள்ளிக்கிழமை தோறும் ஸ்வீடன் பாராளுமன்ற வாசலுக்குச் சென்று, காலை முதல் மாலைவரை வாசகங்கள் தாங்கிய பதாகையைத்தான் மட்டும் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். பின்னர் படிப்படியாகப் பலர் அவருக்கு ஆதரவாக அவருடன் அமர்ந்து கரிம வெளிப்பாட்டை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுக்கும்படி வலியுறுத்தத் தொடங்கினார்கள்.

கிரெட்டாவின் குரல் ஸ்வீடனில் மட்டுமல்ல, ஆஸ்திரேலியா, அமெரிக்கா பள்ளி மாணவர்களையும் தட்டி எழுப்பியது. ஆங்காங்கே மாணவர்கள் திரண்டு பருவநிலை பாதிப்புக்கு எதிராக அரசாங்கங்கள் செயல்படவேண்டும், திட்டங்கள் தீட்ட வேண்டும், கொள்கை முடிவுகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திப் போராடி வருகிறார்கள்.

சூரியசக்தி படகில்...

இப்படி உலகின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியதன் விளைவாக, செப்டம்பர் 2019-ல், ஐ.நா.சபை உலகத் தலைவர்கள் பங்குபெறும் பருவநிலை மாற்றச் செயல்பாட்டு மாநாட்டிற்குச் சிறப்புப் பேச்சாளராக கிரெட்டாவை வரவழைத்தது. இதில் பங்கேற்க ஸ்வீடனில் இருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் செல்லவில்லை கிரெட்டா. சூரியச் சக்தியால் இயங்கும் ஒரு படகின் மூலம் 3500 கடல் மைல்களைக் கடந்து 15 நாட்கள் பயணம் செய்து அமெரிக்கா சென்றடைந்தார். அவரது இந்தக் கடல் பயணம் பற்றிய தகவல்கள் அமெரிக்காவில் தீயாய் பரவிப் பள்ளி மாணவர்களைத் தட்டியெழுப்பியது. விளைவாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆங்காங்கே ஊர்வலம் செல்லத் தொடங்கினார்கள்.

அமைதிக்கான நோபல் பரிசுக்காகக்கூட அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர் பயணம் தீவிரமாகத் தொடர்கிறது இம்முறை தனியாக அல்ல லட்சக்கணக்கான மாணவர்களின் ஆதரவோடு!

இரா.முரளி- கட்டுரையாளர், பேராசிரியர்-சமூகச் செயற்பாட்டாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x