Published : 04 Feb 2025 06:19 AM
Last Updated : 04 Feb 2025 06:19 AM

பாடம் புகட்டும் மாணவர்கள்! | வகுப்பறை புதிது 5

குழந்தைகளை வழிக்குக் கொண்டு வரும் ஆசிரியர்களைவிட எவ்வளவு முரட்டுத்தனமான ஆசிரியராக இருந்தாலும் அவரை வழிக்குக் கொண்டுவரும் மாணவர்களே இன்று அதிகம் என என்னால் நிரூபிக்க முடியும் - எழுத்தாளர் டேவிட் வில்லியம்ஸ். வாசிக்கும் குழந்தைகள் இத்தனை பேர் இருக்கிறார்களா என அசந்து போகும் அளவுக்குச் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘தி ஹிந்து’ இலக்கிய விழாவில் அப்படி ஒரு கூட்டம்.

அங்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த பிரபல ஆங்கில சிறார் எழுத்தாளர் டேவிட் வில்லியம்ஸ் தனது புத்தகங்களில் பிடித்தமானதைத் தேர்வு செய்யச் சொன்ன பொழுது பெரும்பாலான குழந்தைகள் தேர்ந்தெடுத்தது, “உலகின் மோசமான ஆசிரியர்கள்”. ஏற்கெனவே வாசித்ததுதான் என்றாலும் அன்றைக்குத் திரும்ப எடுத்து அதை வாசித்தபோது அற்புதங்களை உணர்ந்தேன்.

உலகிலேயே மோசமான ஆசிரியர் என்பவர் இப்படித்தான் இருப்பார் என்பதற்கான 10 மோசமான முன்னுதாரணங்களை நாம் அதிலிருந்து பெற முடியும். நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் 2008-ல் குழந்தைகளுக்கான எழுத்தாளராக உருவெடுத்தவர் டேவிட் வில்லியம்ஸ். யார் இந்த இம்ச ஆசிரியர்கள்? அவர்களுக்கு மாணவர்கள் புகட்டும் பாடம் என்ன?

புத்தகங்களைத் திருடுவது எப்படி? - பள்ளிக்கு விளையாட்டுப் பொருள்களை எடுத்து வரக் கூடாது என்றும் விளையாட்டு பாடவேளையே கிடையாது என்றும் தடை விதிக்கும் திருவாளர் பெண்ட் முதல் மோசமான ஆசிரியர். தப்பித்தவறி பந்து ஒன்று வகுப்பறைக்குள் வந்துவிட்டால் அதனை வீசிய மாணவரையும் பந்தையும் சேர்த்து அலமாரியில் வைத்துப் பூட்டுகின்ற கொடூர ஆசிரியர்.

எத்தகைய பொருளையும் பயன்படுத்தாமலேயே விளையாட முடிந்த 170 விளையாட்டுகளைக் கண்டுபிடித்து அவரோடு மாணவர்கள் ஆடும் பகடி அற்புதமானது. கோல் அவுட் சிக்சர் என்றெல்லாம் வகுப்பறையில் இருந்து வரும் சப்தம் மாணவர்களின் வெற்றியை அறிவித்துக் கொண்டே இருக்கிறது.

தன்னுடைய பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியரைக் காதலிக்கும் இரண்டாவது மோசமான ஆசிரியர் திருவாளர் டுவீ. ஏழாம் வகுப்பு மாணவர்களுக்குக் காதல் கவிதை எழுதும் வீட்டுப்பாடம் கொடுத்து அந்தக் கவிதைகளை எல்லாம் சம்பந்தப்பட்ட ஆசிரியைக்குக் கொடுக்கும் மோசமான ஒருவரை மிகக் கேவலமான கவிதைகள் மூலமே மாணவர்கள் திருத்துகிறார்கள். மூன்றாவது மோசமான ஆசிரியர் நூலகர் மிஸ் ஸ்பீக்.

பெரும்பாலும் அந்த நூலகத்தில் பிரம்மாண்ட பூட்டு தொங்குகிறது. மாணவர்கள் நூலகத்திற்கு வர வேண்டும். ஆனால், எந்தப் புத்தகத்தையும் தொடக்கூடாது, வாசிக்க எடுக்கக் கூடாது, வரிசையை மாற்றக் கூடாது போன்ற அறிவிப்புகள் புத்தகங்களைவிடக் கூடுதலாக அந்த அறை முழுவதும் இருக்கின்றன.

“நூலகத்தில் இருக்கும் புத்தகங்களைத் திருடுவது எப்படி?” என்கிற தலைப்பில் மாணவர்கள் மூன்று பக்க அறிக்கை தயாரித்து தங்களுக்குள் பகிர்கிறார். விரைவில் அந்த ஆசிரியை ஒன்று மாறுவார் அல்லது மாற்றப்படுவார் என்பதில் இன்னும் என்ன சந்தேகம்?

ஆசீர்வதிக்கப்படும் ஆசிரியர்: அடுத்து வரும் அறிவியல் ஆசிரியர் டாக்டர் ரீட் வகுப்பில் போடும் ஒரே சட்டம், யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது. யாராவது எழுந்து ஏதாவது ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டால் பள்ளி முடிந்த பிறகு, “நான் இனி ஒருபோதும் கேள்வி கேட்கமாட்டேன்” என்று 1000 முறை எழுத வேண்டும்.

இந்தக் கொடூர ஆசிரியரை மாணவர்கள் எப்படிச் சமாளித்தார்கள்? ஒரு நாள் ஆய்வகத்துக்கு அவர்களை அழைத்துச் செல்லும் ஆசிரியர் அசந்து போகிறார். அங்கே அட்டையில் எழுதித் தொங்க விடப்பட்டுள்ளன, 300 கேள்விகள். திரும்பிய பக்கமெல்லாம் நிற்கும் உட்காரும் நகரும் இடமெல்லாம் கேள்விகள்.

இப்படிப்பட்ட முரட்டு ஆசிரியர்களுக்கு மாணவர்கள் தங்களுக்கே உரியப் பாணியில் பாடம் புகட்டுகிறார்கள் என்பதைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்தப் புத்தகம். குழந்தைமையைக்காத்து, அறிவை போற்றி, சுவாரசிய தேடல்களில் ஈடுபடுத்தும் மனிதநேய ஆசிரியரைத்தான் குழந்தைகள் வழியாகக் கடவுள் ஆசீர்வதிக்கிறார் என்பது டேவிட் வில்லியம்ஸின் கடைசி வரி.

- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x