Published : 03 Dec 2024 06:26 AM
Last Updated : 03 Dec 2024 06:26 AM
பூமியின் அளவுக்கு நிகரான KMT-2020-BLG-0414b எனும் கோள் பற்றி கடந்த வாரம் பேசத் தொடங்கினோம். ஜுபிட்டர் எனும் வியாழன் கோளை பை என்று கற்பனை செய்துகொண்டால் அதில் 1,300 பூமியை போட்டு விடலாம்.
சூரியன் அளவுள்ள பையில் பத்து லட்சம் பூமியை போடலாம். அவ்வளவு பூமி சிறியது. குண்டுமணி போன்ற காதணியின் திருகு கீழே விழுந்து தேடிய அனுபவம் உண்டா? பறந்து விரிந்த விண்வெளியில் பூமி போன்ற சிறுகோளை கண்டுபிடிப்பது எப்படி? 700 ஒளியாண்டு தொலைவில் உள்ள, சூரியனைப்போல ஆயிரம் மடங்கு பெரிய திருவாதிரை விண்மீன் தொலைநோக்கியில் கூட வெறும் புள்ளியாகத்தான் தெரியும்.
அப்படி இருக்கையில் 4,000 ஒளியாண்டு தொலைவில் உள்ள KMT-2020-BLG-0414L விண்மீனைச் சுற்றி பூமியைப் போன்ற அளவு உடைய திடக்கோள் உள்ளதை மைக்ரோலென்சிங் எனும் நவீன உத்தியைக் கொண்டு இனம் கண்டு ஆராய்ச்சியாளர்கள் சாதனைப் புரிந்துள்ளனர்.
மைக்ரோலென்சிங் என்றால் என்ன? - இரவில் வெகு தொலைவில் வாகன விளக்கின் ஒளி மங்கலாக நமக்குப் புலப்படுகிறது எனக்கொள்வோம். தற்செயலாக நமக்கும் வாகனத்துக்கும் இடையே கையில் லென்சை விரித்துப் பிடித்தபடி ஒருவர் நடந்து வருகிறார். வாகனம்-விளக்கு-லென்ஸ் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது லென்ஸ் வழியே வரும் ஒளிக்கற்றை குவிந்து சற்றென்று வாகனத்தின் ஒளி பிரகாசம் அடையும். இதுவே மைக்ரோலென்சிங்கின் அடிப்படையாகும்.
லென்ஸ், ஒளிக்கற்றைகளை வளைத்துக் குவிப்பது போல, நிறையும் ஒளிக் கதிர்களை வளைக்கும் என ஐன்ஸ்டீன் சார்பியல் தத்துவம் கூறுகிறது. எனவே ஒளியை உமிழும் மிக மங்கலான விண்மீனுக்கும் நமக்கும் இடையே போதிய நிறை கொண்ட ஒரு கோள் வரும்போது ஈர்ப்பில் மைக்ரோலென்சிங் வினை நிகழ்ந்து சட்டென்று அந்த விண்மீன் பல ஆயிரம் மடங்கு பிரகாசம் அடையும்.
மைக்ரோலென்சிங் தொலைநோக்கி வளையம் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்பது போல மிகப் பெரிய பிரபஞ்சத்தில் எங்கே இதுபோன்ற எதிர்பாரா நிகழ்வு ஏற்படும் என்று முன்கூட்டியே தெரியாது. எனவே தான் எப்போதும் வானத்தைக் கண்காணிக்கும்படியான ஏற்பாடு ஒன்றை நிறுவியுள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள SAAO தொலைநோக்கி, சிலியில் அமைந்துள்ள CTIO தொலைநோக்கி ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள SSO தொலைநோக்கி ஆகிய மூன்றும் இணைந்ததுதான் கொரியா மைக்ரோலென்சிங் தொலைநோக்கி வளையம்.
வானத்தின் தென் பகுதியில் எங்காவது இயல்புக்கு மாறாகப் பிரகாசம் தெரிந்தால் அதனை உடனே ஆய்வு செய்யும். அப்படித்தான் 2020-ல் ஒருநாள் 25,000 ஒளி ஆண்டு தொலைவில் மிகவும் மங்கலான ஒரு விண்மீன் திடீர் என பிரகாசம் அடைந்தது. இயல்பை விட ஆயிரம் மடங்கு பிரகாசம் அடைந்த இந்த நிகழ்வை ஆய்வாளர்கள் பகுத்து ஆய்வு செய்தனர்.
பூமி போன்ற கோள்: அவ்வாறு ஆய்வு செய்தபோது KMT-2020-BLG-0414 b எனும் பூமிக்கு நிகரான நிறை கொண்ட கோள் ஒன்று பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவைப் போல 1.26 மடங்கு தொலைவில் 2.8 ஆண்டுக்கு ஒரு முறை KMT-2020-BLG-0414L விண்மீனைச் சுற்றி வருவதை இனம் கண்டார்கள். அதே போல KMT-2020-BLG-0414L c எனும் வியாழன் கோளை போல 15.4 மடங்கு நிறை கொண்ட இரண்டாவது கோளும் சுற்றிவருவதைக் கண்டுபிடித்தார்கள்.
எதிர்காலத்தில் 600 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனும் வெள்ளைக்குள்ள விண்மீனாக மாறிவிடும். அப்போது பூமிக்கு என்னவாகும் என்பதை இந்தக் கோளினை ஆய்வு செய்து இனம் காணலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி; tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT