Published : 12 Nov 2024 06:14 AM
Last Updated : 12 Nov 2024 06:14 AM
ஆப்பிரிக்க யானை பிறக்கும்போதே அதன் தும்பிக்கையில் 87 சுருக்கங்கள் இருக்குமாம். அதுவே முதிர்ச்சி அடையும்போது அதன் எண்ணிக்கை 109 ஆக அதிகரிக்குமாம். மூப்பு அடையும்போது மனிதன் உட்பட பல விலங்குகளின் தோல் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும். ஆனால், யானை தும்பிக்கையின் சுருக்கம் மூப்பைக் குறிப்பதல்ல அதன் வலிமையின் அடையாளம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஜெர்மனி ஸ்டட்கார்ட்டைச் சேர்ந்த ஆய்வாளர் ஆண்ட்ரூ கே. ஷூல்ஸ் தலைமையில் ஒரு குழு நடத்திய ஆய்வு இது. மனிதர்களை போலவே பொருட்களை எடுக்கும்போது சில யானைகள் வலது பக்கமாக வளைத்து எடுக்கும், சில இடது பக்கமாக வளைத்து எடுக்கும். இடதா, வலதா என்பதை தும்பிக்கையில் உள்ள சுருக்கங்கள், மடிப்புகள் மற்றும் மீசைமுடி அளவு கொண்டு அறியலாம் என கண்டுபிடித்துள்ளனர்.
அப்பளம் தூக்கும் தும்பிக்கை: யானை தன் தும்பிக்கையால் மரத்தை வளைத்துப் பிடித்துத் தூக்க முடியும். அதே சமயம் தும்பிக்கையின் நுனியில் உள்ள விரல் போன்ற அமைப்பின் உதவியோடு எலுமிச்சை போன்ற சிறிய பொருட்களை கூட எடுக்க முடியும். ஏன் அப்பளத்தை கூட உடையாமல் நொறுங்காமல் எடுக்க முடியும். வாழைப்பழத்தோல் உரித்தல் போன்ற துல்லியமான பணிகளைச் செய்யவும் பொருட்களைப் பிடித்து உறிஞ்சி லாவகமாக எடுக்கவும் அவற்றின் தும்பிக்கை நெளிந்து வளையவேண்டும்.
யானையின் தடிமனான மேல்தோல் விரைப்பாக அமைந்து வளைந்து நெளிவதைத் தடுக்கும். அதுவே அதன் தும்பிக்கையின் கீழ்ப்பகுதியை விட மேல் புறம் ரப்பர் போல கூடுதல் இழு தன்மை கொண்டதாக இருக்கிறது. மனித உடலில் 600 – 700 தசைகள் மட்டுமே உள்ளன. யானையின் தும்பிக்கையில் 46,000 தசைகள் உள்ளன. இந்த தசை இயக்கத்தின் காரணமாகவே தன் தும்பிக்கையின் குறிப்பிட்ட பகுதியை யானையால் இங்கும் அங்கும் வளைத்து நீட்ட முடிகிறது.
கருவிலே சுருக்கம்: கைரேகைகள் எப்படி கருவுரும்போதே உருவெடுக்கின்றதோ அதேபோல யானை கருவுற்று இருக்கும்போதே சுருக்கங்களும் மடிப்புகளும் உருவாக தொடங்குகின்றன. 20 நாட்களுக்கு ஒருமுறை என கருவில் உள்ளபோதே சுருக்கங்களின் எண் தொகை இரட்டிப்பாகும். முதிர்ந்த ஆப்பிரிக்க யானைகளை விட 1.5 மடங்கு அதிக சுருக்கங்களையும் மடிப்பு வரைகளையும் ஆசிய யானை தும்பிக்கை கொண்டிருக்கும்.
உலோக துண்டு ஒன்றை பலமுறை ஒரே இடத்தில் வளைத்துத் திருப்பினால் அந்த பகுதியில் சுருக்கம் போன்ற வடிவங்கள் உருவாகும். இதேபோல குறிப்பிட்ட திசையில் திருப்பி பொருட்களை பற்றிக் கவரும் யானையின் தும்பிக்கையிலும் சுருக்கங்கள் ஏற்படும்.
இயல்பாக வலது புறமாக தன் தும்பிக்கையை வளைக்கும் வலது தும்பிக்கை பழக்கமுள்ள யானைக்கு அதன் தும்பிக்கை நுனியின் இடது பகுதியில் குட்டி குட்டி மீசைமுடி இருக்கும். வலது புறத்தில் நீளமான மீசை முடி இருக்கும். மேலும் வலது புறத்தில் உள்ள மடிப்பு வரைகளின் எண்தொகை இடது புறத்தில் உள்ள சுருக்கங்களைவிட பத்து மடங்கு கூடுதலாக இருக்கும்.
- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி; தொடர்புக்கு: tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT