Published : 05 Nov 2024 06:06 AM
Last Updated : 05 Nov 2024 06:06 AM
மெல்ல சூடேறும் பால் திடீரென பொங்குவதுபோல மனிதர்களுக்கும் இளமை மாறி திடீரென 44 வயதிலும் பின்னர் மறுபடி 60 வயதிலும் மூப்பு ஏற்படுகிறது எனச் சமீப ஆய்வு சுட்டுகிறது. ஸ்டான்போர்ட் பல்கலையின் மரபியல் மற்றும் தனித்துவ மருத்துவ மைய இயக்குநர் மைகேல் ஸ்னைடர்த் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வு இது.
சில இயற்கை நிகழ்வுகள் சீராக படிப்படியாக நிகழும். மேலிருந்து கீழே விழும் கல் அதே சீர் முடுக்கில்தான் விழும். அதுவே நீர் முதலில் குளிர்ச்சி அடையும், பின்னர் மேலும் குளுமை அடையும். பூஜ்ஜியம் டிகிரி வெப்பநிலைக்கு வரும்போது சட்டென்று பனிக்கட்டியாக மாறும். அளவு மாற்றம் குறிப்பிட்ட கட்டத்தில் சற்றென்று குண மாற்றமாக மாறுவதை முகநிலை மாற்றம் என்கிறோம். மூப்பு அடைதலும் ஒருவகையில் முகநிலை மாற்றமே.
ஆணென்ன? பெண்ணென்ன? - இந்த ஆய்வுக்காக 25 முதல் 75 வயதுக்கு இடைப்பட்ட 108 பேரிடமிருந்து ரத்தம், மலம், தோல், மூக்கு வாய் சவ்வு மாதிரிகளை ஏழு ஆண்டுகள் விடாமல் மாதாமாதம் சேகரித்தனர். ஆர்என்ஏ, புரதங்கள், வளர்சிதைப் பொருட்கள், பாக்டீரியா வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் முதலிய 1 லட்சத்து 35 ஆயிரம் மூலக்கூறுகளை நுணுக்கமாக ஆய்வு செய்தனர்.
பெரும்பாலான மூலக்கூறுகள் மற்றும் நுண்ணுயிரிகளின் எண்தொகையில் கொத்து கொத்தாக 44 வயதிலும் பின்னர் மறுபடி 60 வயதிலும் மாற்றம் ஏற்படுவதை கண்டறிந்தனர். இந்த மாற்றங்கள் பெண்களில் மாதவிடாய் முடிவுக்கு வரும் முன் ஏற்படும் மாற்றம் மட்டுமே என முதலில் கருதினார்கள். ஆனால், ஆண்களிடமும் இதுபோன்ற மாற்றம் 44 வயதில் புலப்பட்டது. எனவே இந்த மாற்றங்கள் ஆண்- பெண் இரு பாலருக்கும் பொது எனக் கண்டறிந்தனர்.
இளமை இதோ! - மூப்பு மாற்றத்தின் முதல் அலையில் இதய நோய்களுடன் தொடர்புடைய மூலக்கூறுகளில் மாற்றம் தென்பட்டது. இரண்டாம் அலையில் நோயெதிர்ப்பு கட்டுப்பாடு, கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றம், சிறுநீரகச் செயல்பாடு முதலியவற்றுடன் தொடர்புடைய மூலக்கூறுகளின் எண்தொகையில் மாறுபாடு புலப்பட்டது.
தோல், தசை மூப்புடன் தொடர்புடைய மூலக்கூறுகளில் இரண்டு புள்ளிகளிலும் மாற்றம் தென்பட்டது. 40 வயது அடைந்தவர்களின் செல் இயக்கத்தில் மது, கொழுப்பு முதலிய மூலக்கூறுகளைப் பிரித்து உட்கொள்ளும் திறன் குறைந்து போகிறது எனக் கண்டறிந்தனர். இந்த வயதில்தான் கொழுப்பு, கூடுதல் உணவு ஆகியவற்றை ஜீரணம் செய்வதில் சிக்கல் ஏற்படத் தொடங்குகிறது.
இதற்கிடையில், 60 வயது மூப்பு அடைந்தவர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தோடு தொடர்புடைய சைட்டோகைன்கள் போன்ற பல்வேறு நோயெதிர்ப்பு அமைப்பு மூலக்கூறுகளின் அளவு குறைந்து பலவீனம் அடைகிறது. எனவே 60 வயதை கடந்தால் சிறுநீரக பிரச்சினைகள், இதய நோய், வகை 2 நீரிழிவு, அல்சைமர் முதலிய பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு கூடுகிறது.
இந்த ஆய்வில் தென்பட்ட சில மாற்றங்கள் நமது வாழ்முறைத் தூண்டுதலால் ஏற்பட்டதாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக நடுத்தர வயதில் பொதுவாகப் பலருக்கும் குடும்ப சுமை அதிகரிக்கும்; வேலை இடத்தில் அழுத்தம் கூடுதலாகும். இதன் தொடர்ச்சியாக வளர்சிதை இயக்கத்தில் மாற்றம் ஏற்படக்கூடும். அதுவே வாழ்க்கை அழுத்தம் அதிகமாக இல்லாத சமூகங்களில் 40 வயதில் மூப்பு அறிகுறிகள் இல்லாமல் போகலாம். ஆகவே சிறுவயதிலிருந்தே எதிர்காலத்தைச் சீராக திட்டமிட்டு, நல்ல வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் 6 முதல் 60வரை இளமையை தக்க வைக்கலாம்.
- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி; தொடர்புக்கு: tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT