Published : 20 Aug 2024 06:36 AM
Last Updated : 20 Aug 2024 06:36 AM
செவ்வாய் கோளில் கடந்த 2018-ல் நாசாவின் மார்ஸ் இன்சைட் லேண்டர் எனும் கலம் தரையிறங்கியது. இந்த கலம் நில அதிர்வு உணர்வீ கருவி கொண்டு செவ்வாயில் ஏற்படும் நிலநடுக்கங்களை ஆய்வு செய்தது. நிலநடுக்கத்தினால் ஏற்படும் அதிர்வுகளை அளவீடு செய்து தரைக்கு கீழே 10 முதல் 20 கி.மீ. அடியில் திரவ நிலையில் நீர் உள்ளதைக் கண்டுபிடித்துள்ளது. செவ்வாயின் வட தென் துருவத்தில் திட வடிவ கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் திட வடிவ நீர் கலந்த பனி மூடிய பகுதிகள் உண்டு.
அதேபோல் செவ்வாயின் வளிமண்டலத்தில் ஓரளவு நீராவி உள்ளது. ஆனால், பூமியில் உள்ளதுபோல கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் இல்லை. ஒருகாலத்தில் செவ்வாய் கோளின் மீதும் கடல், ஆறு போன்ற நீர் நிலைகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன.
வறண்ட ஆற்றுப்படுகையில் அலை வடிவில் மணல் குவியல் காணப்படுவதுபோல் செவ்வாயின் பள்ளங்களிலும் உள்ளன. கடல் அலை அடிக்கும் பகுதியில் மணல் பரவிய கடற்கரை இருக்கும். அந்த மணலில் அலை போன்ற வடிவங்களை காணலாம். இதேபோல செவ்வாயிலும் மணல் பரப்பு உள்ளது; அதிலும் அலை அடித்த தடயங்கள் காணப்படுகின்றன.
புரியாத புதிர்: 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமி போன்றே திரவ வடிவில் நீர்நிலைகள் கொண்ட கோளாக இருந்த செவ்வாய் எப்படி உலர்ந்து போனது, அந்த நீர் எங்கே சென்றது என்பது பெரும் புதிராக இருந்தது. கடல் போன்ற பகுதியில் குவிந்து இருந்த நீர் நிலத்துக்கு அடியில் பாறைகள் இடையே விரிசல் போன்ற இண்டு இடுக்குகளில் புகுந்து நிலத்தடி நீராக உள்ளது என இந்த ஆய்வு நமக்குத் தெரிவிக்கிறது.
தேங்காய், பானை வாங்கும்போது தட்டிப் பார்த்து வாங்குகிறோம். பானையில் விரிசல் இருந்தால் தட்டும்போது வித்தியாசமான ஒலி எழும்பும். அதேபோல தேங்காயில் இளநீர் செறிவாக இருந்தால் ஒருவிதமாகவும் தேங்காய் அழுகிப் போய்விட்டால் வேறுவிதமாகவும் ஒலிக்கும். அதுபோல நில அதிர்வின்போது நீர் செறிவான தரைப்பகுதி தனித்துவமாக அதிரும்.
அந்த அதிர்வுகளை இனம் கண்டு தான் பூமியில் நிலத்தடி நீர் எங்குள்ளது என்பதை காண்கிறோம். இதே தொழில் நுட்பத்தை மார்ஸ் இன்சைட் லேண்டர் பயன்படுத்தியது. செவ்வாய் கோளின் பூமத்திய ரேகை பகுதியில் எலிசியம் பிளானிட்டி எனும் சமவெளி பகுதியில்தான் மார்ஸ் இன்சைட் லேண்டர் தரையிறங்கி ஆய்வு செய்தது.
இந்த பகுதியில் 2018 முதல் நிகழ்ந்த 1,319 நிலநடுக்கங்களைப் பதிவு செய்து ஆய்வு செய்தனர். இவற்றை பகுத்து பார்த்த போது செவ்வாய் கோளின் மேற்புற தரைப்பகுதியில் நீர் இல்லை என தெரியவந்துள்ளது. ஆனால், 10 கிலோமீட்டர் முதல் 20 கிலோமீட்டர் ஆழம் உள்ள பகுதியில் மண்-பாறை இடுக்குகளில் திரவ வடிவில் நீர் இருப்பது உறுதிப்பட்டுள்ளது.
இந்த நீரை கிணறு தோண்டி அல்லது ஆழ்துளை போட்டு எடுப்பது மிகவும் கடினம். எனவே செவ்வாயில் குடியிருப்பு ஏற்பட்டாலும் இந்த நீரை பயன்படுத்துவது எளிதல்ல என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி; தொடர்புக்கு: tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT