Published : 06 Aug 2024 06:00 AM
Last Updated : 06 Aug 2024 06:00 AM

புதுமை புகுத்து 28 - ‘டீப் ஃபேக்’ படங்களை அம்பலப்படுத்தும் வானியல் தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு கொண்டு வடிவமைக்கப்படும் ‘டீப் ஃபேக்' எனப்படும் ஆள்மாறாட்ட படங்கள் இன்று அதிகம் வலம் வருகின்றன. போலி செய்திகளைப் பரப்பவும், குறிப்பாகத் தேர்தல் சமயத்தில் எதிர் தரப்பு குறித்து அவதூறு பரப்பவும் ‘டீப் ஃபேக்' படங்கள் மற்றும் வீடியோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சமூகத்தில் போலி செய்திகள் பரவி மெய் எது, போலி எது என்பதை பிரித்து அறிய முடியாமல் போனால் காலப்போக்கில் சமூக அமைதி குலையும்.

எனவே செயற்கை நுண்ணறிவு கொண்டு தயாரிக்கப்பட்ட போலியை இனம் கண்டு ஒதுக்கத் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இத்தகைய ‘டீப் ஃபேக்' படங்களை வானியலில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கொண்டு இனம் காண முடியும் என விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். மிகத் தொலைவில் உள்ள பால்வெளி மண்டலங்களை (Galaxy) பிரித்தறியப் பயன்படுத்தும் தொழில்நுட்பம்தான் இங்கு நமக்கு உதவுகிறது.

அதாவது திரையில் காணும் உருவத்தின் கண் விழியில் பிரதிபலிக்கும் ஒளியை பகுத்து ஆய்வு செய்தால் படம் போலியா அல்லது உண்மையா என இனம் காண முடியும். இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தின் ஹல் பல்கலைக்கழகத்தில் தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் மாடலிங்கிற்கான சிறப்பு மையத்தின் இயக்குனர் கெவின் பிம்ப்லெட்.

ஒளியிலே தெரிவது உண்மையா? - கடந்த ஜூலை 15 அன்று நடைபெற்ற இங்கிலாந்து ராயல் வானியல் சங்கத்தின் தேசிய வானியல் மாநாட்டில் இதுகுறித்த ஆய்வு கட்டுரையை அடெஜுமோக் ஓவோலாபி எனும் ஆய்வு மாணவியோடு இணைந்து இவர் சமர்ப்பித்துள்ளார். உருண்டை, முட்டை, சுருள் போன்ற வடிவங்களிலும் ஒழுங்கற்ற வடிவங்களிலும் பால்வெளி குழுமங்கள் இருக்கும். சக்திவாய்ந்த தொலைநோக்கியில் கூடமிகத் தொலைவில் உள்ள பால்வெளி மங்கலாகத்தான் புலப்படும்.

இப்படி இருக்க பால்வெளி உமிழும் ஒளியின் குவிவு, சமச்சீரற்ற தன்மை, மெல்லிழைவான அமைவு (CAS -concentration, asymmetry, smoothness) ஆகியவற்றைப் பகுத்து அதன் வடிவத்தை அனுமானம் செய்வார்கள். இதனை CAS நுட்பம் என்பார்கள். கொடுக்கப்பட்ட மதிப்புகளின் தொகுப்பில் உள்ள சமத்துவமின்மையை அளவிடுவதற்கான ஒரு வழிதான் கினி குறியீடு (Gini index). தொலைதூர பால்வெளியின் டிஜிட்டல் படத்தில் ஒவ்வொரு பிக்ஸலிலும் உள்ள ஒளியின் பிரகாசத்தை அளவீடு செய்து ஒளி பரவலின் கணித சார்பைக் கணக்கிட்டு ஒளி பரவலின் சமத்துவமின்மையை அளவிடும் முறையே வானவியலில்கினி முறையாகும்.

ஒவ்வொரு வடிவ பால் வெளியும் குறிப்பிட்ட கினி குறியீடு கொண்டிருக்கும்; எனவே குறிப்பிட்ட பால்வெளியின் கினி குறியீட்டை அளவிடுவதன் மூலம் அதன் வடிவத்தை அனுமானம் செய்யலாம். இப்போது ‘டீப் ஃபேக்’ சிக்கலுக்கு வருவோம். நமது இரு கண் விழிகளும் அச்சு அசலாக ஒன்றாக இருக்காது என்றாலும் இடது கண் விழியில் காணப்படும் பிரதிபலிப்புக்கும் வலது கண் விழியில் காணப்படும் பிரதிபலிப்புக்கும் இடையில் வேறுபாடு இருக்காது.

ஆகவே, வானியலில் பயன்படும் CAS நுட்பம், கினி நுட்பம் இரண்டையும் பயன்படுத்தி ‘டீப் ஃபேக்’ படங்களை ஆய்வு மாணவி அடெஜுமோக் ஓவோலாபி அடையாளம் கண்டார். சுமார் 70 சதவீதம் போலியாக்க படங்களை அவரால் இந்த முறையைப் பயன்படுத்தி இனம் காண முடிந்தது.

குறிப்பிட்ட படம் போலியாக்கமா எனக் கணிப்பதில் CAS நுட்பத்தைவிட கினி குறியீட்டு நுட்பம் சிறந்தது எனவும் பேரா. கெவின் பிம்ப்லெட் பரிந்துரைத்துள்ளார். இடது, வலது கண் விழிகளில் உள்ள பிரதிபலிப்புகளைப் பகுத்து ஆய்வு செய்வது போலப் படத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள பிரகாசம், நிழல்கள், பிரதிபலிப்புகளில் நுட்பமான முரண்பாடுகளைப் பகுப்பாய்வு செய்து படம் போலியாக்க படமா இல்லையா என எதிர்காலத்தில் இனம் காண முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி; தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x