Published : 25 Jun 2024 07:52 AM
Last Updated : 25 Jun 2024 07:52 AM

புதுமை புகுத்து - 22: விண்கல் மோதி கண்ணாடியாக மாறும் அதிசயம்!

நாசாவின் லேண்ட்சாட் 8 எனும் புவி தொலையுணர் செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்ட நிலப்பரப்பு படமாக்கும் கருவி (Operational Land Imager) கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ஒரு புகைப்படம் எடுத்தது. அதில் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள உப்பளப் பகுதியில் 7,000 ஆண்டுகள் முன்னர் விழுந்த விண்கல் மோதலின் வடு தெரிந்தது. 1.8 கி.மீ. விட்டம் கொண்ட வட்ட வடிவக் கிண்ணம் போன்ற 6 மீட்டர் ஆழமான குழி அது. விண்கல் மோதி உருவான குழி என விஞ்ஞானிகள் கருதினர்.

கடல்மட்டத்துக்கும் கீழே உள்ள இந்தப் பகுதியில் ஆண்டு முழுவதும் நீர் சூழ்ந்து இருக்கும். கடும் கோடையில் மட்டும் வற்றிவிடும். கடந்த மே 2022இல் இந்தப் பகுதிக்கு ஆய்வாளர்கள் சென்றனர். மண் மாதிரிகளை எடுத்து வந்து ஆய்வகத்தில் சோதனை நடத்தினர்.

விண்வெளியில் கோள்களுக்கு இடைப்பட்ட வெளியில் சிறு துகள் முதல் ஒரு மீட்டர் அளவுவரை சிறிதும் பெரிதுமாக விண்கற்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த விண்கற்கள் நொடிக்கு 11 முதல் 72 கி.மீ. வேகத்தில் பயணம் செய்கின்றன.

அவ்வப்போது இவற்றின் பாதையில் பூமி, நிலவு, ஏனைய கோள்கள் குறுக்கிடும். அவ்வாறு நிகழும்போது விண்கல் அந்தக் கோள் மீது மோதி விடும்.

நிலவின் மேலே அம்மைத் தழும்பு போலத் தென்படுபவை விண் கற்கள் மோதிய கிண்ணக்குழிகள்தான். நாள் ஒன்றுக்கு 44,000 கிலோ எடையுள்ள சிறிதும் பெரிதுமான விண்கற்கள் பூமியின் மீது மோதுகின்றன என மதிப்பீடு செய்துள்ளனர்.

ஆவியாகும் கற்கள்

இவ்வளவு வேகத்தில் விண்கற்கள் பூமியின் மீது விழும்போது காற்றில் உராய்ந்து 1500 டிகிரி முதல் 2000 டிகிரிவரை வெப்பம் ஏற்படும். இந்த மீவெப்பத்தில் (மீ-Ultra) சிறு கற்கள் ஆவியாகிவிடும். விண்கல்லின் அளவு கணிசமாக இருந்தால் அதில் ஒரு பகுதி பூமியின் தரையில் வந்து மோதி கிண்ணம் போன்ற குழி உருவாகும். மேலும் மீவெப்பம் மற்றும் மீஅழுத்தத்துடன் விழும்போது மண்ணில் உள்ள சிலிக்கான் உருகி கண்ணாடியாக மாறிவிடும். அரிதான பல கனிமங்கள் உருவாகும்.

பூமியில் இயற்கையில் கிடைக்கும் தனிமக் கலவையை விட வித்தியாசமான தாதுப்பொருள் கலவை கட்ச் பகுதியில் உள்ள பன்னி சமவெளி குழியின் அருகே நிலத்தடியில் கிடைத்தது. மீவெப்ப நிலை மற்றும் மீ அழுத்தத்தில் மட்டுமே உருவாகக்கூடிய சில கனிமங்கள் இதில் காணப்பட்டன. மேலும் விண்கல்லில் கணிசமான அளவு உள்ள இரிடியம் எனும் தனிமம் இந்தக் குழிக்கு அடியில் கிடைத்தது.

முன்னொரு காலத்தில்...

மேலும் மோதலின் விளைவாக இங்கிருந்த தாவரங்கள் மடிந்து எரிந்து சாம்பலானது. இந்த சாம்பல் பகுதியை கார்பன் காலக்கணக்கு வழியே ஆய்வு செய்தபோது 6900 ஆண்டுகள் முன்னர் நடைபெற்ற விண்கல் மோதலிது எனத் தெரிய வருகிறது. சிந்து சமவெளி ஹரப்பன்
நாகரிகம் தழைத்து ஓங்கிய காலகட்டத்தில் அங்கிருந்த குடியிருப்பு அருகில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

நிலவில் காற்று மண்டலம் இல்லாததினால் விண்கல் மோதல் அதன் தரைப்பரப்பில் கிண்ணக்குழிகளை ஏற்படுத்தும். ஆனால், பூமியில் வளி மண்டலத்தில் பெரும்பாலான விண்
கற்கள் எரிந்து சாம்பலாகிவிடும். கீழே விழுந்து கிண்ணக்குழி ஏற்பட்டாலும் காற்று, மழையால் அத்தனை தடயங்களும் அழிந்துவிடும். இருப்பினும் பூமியில் இதுவரை இதுபோன்ற விண்கல் மோதிய இருநூறு வடுக்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி.

தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x