Published : 24 Jan 2024 05:31 AM
Last Updated : 24 Jan 2024 05:31 AM
குழலி: வடக்கிருத்தல் பத்தி போன வாரம் பேசும்போது இரோம் ஷர்மிளாதான் நினைவுக்கு வர்றாங்கன்னு சொன்னியே அவங்க யாரு?
சுடர்: இந்தியாவோட வடகிழக்கு மாநிலங்கள்ல, காஷ்மீர்ல ஆயுதப்படை சிறப்பு அதிகாரசட்டம்னு ஒரு சட்டத்தை அமல்படுத்தினாங்களாம். இந்தச் சட்டத்த வைச்சு இராணுவம் சந்தேகத்தின் பேர்ல யாரை வேணும்னாலும் கைது செய்யலாம், சுடக்கூடச் செய்யலாம். எங்க வேணாலும் சோதனை போடலாம். இந்தச் சூழல்ல இராணுவத்தோட துணைப் படைப்பிரிவு மலோம்ங்கிற ஊர்ல ஒரு படுகொலையை நிகழ்த்திச்சாம். இந்தச்சம்பவம்தான் இரோம் ஷர்மிளாவை மணிப்பூரின் மகள்னு சொல்ற அளவுக்கு வீரமும் தீரமும் நிறைஞ்ச பெண்ணா மாத்தியிருக்கு.
குழலி: அப்படி அவங்க என்ன செஞ்சாங்க?
சுடர்: காரணமே இல்லாமப் பலரைக் கொல்றதுக்கும், சித்திரவதை செய்யறதுக்கும் துணை செய்ற இந்தச் சட்டத்தை அரசு திரும்பப் பெறணும்ங்கிற கோரிக்கைய முன்வைச்சு உண்ணாவிரதத்தைத் தொடங்கினாங்க. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாத் தன் போராட்டத்துல உறுதியா இருந்தாங்க இரோம் ஷர்மிளா.
இவர்களின் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த அப்பா, உங்களுக்கு திலீபனைத் தெரியுமா என்று கேட்க,
குழலி: எனக்குத் தெரியும்பா. இலங்கையில ஈழத் தமிழர்களோட நலனைப் பாதுகாக்குற விதமா ஐஞ்சு கோரிக்கைகள முன்வைச்சு, உண்ணாவிரதம் இருந்து வீரமரணம் அடைஞ்சவர் தானேப்பா...
அப்பா: அவர் தான்...
சுடர்: தன்னைச் சுத்தி இருக்குற மனுசங்களோட நலனுக்காக, உயிரையே கொடுக்கத் தயாராகுற மனசு எவ்வளவு உயர்ந்தது மாமா...
அப்பா: ஆமா சுடர். நீங்க பேசிக்கிட்டிருந்த வடக்கிருத்தல் ஒரு தனிமனுசன் தன் புகழ், பெருமை, வீரம், முக்தின்னு ஏதோ ஒரு காரணத்துக்காக எடுக்குற முடிவு. ஆனா நாம இப்பப் பேசினவங்க எல்லாம் இந்தச் சமூகத்து மேல இருக்கிற அக்கறையால, உண்ணாவிரதத்தை ஒரு போராட்ட வடிவமா முன்வைச்சவங்க.
குழலி: நீங்க சொல்றது ரொம்ப சரிப்பா. அந்தக் காலத்துல சமணத் துறவிகள்கூட உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பாங்களாம். அதுக்கு சல்லேகனைன்னு பேராம்.
சுடர்: துறவிகள் ஏன் இப்படிச் செய்யணும்... அவங்க தான் விருப்பு வெறுப்புகளை எல்லாம் துறந்தவங்களாச்சே.
குழலி: தங்களுக்கு மறுபிறப்பே வேணாம்னு இந்த உண்ணாநோன்ப இருப்பாங்களாம். பெண் துறவிகளும் இந்த நோன்ப இருந்திருக்காங்க. ஆனா சமண சமயத்துல பெண் துறவிகளுக்கு முக்தி நிலை கிடையாதாம்.
சுடர்: அப்பறம் எதுக்காக, அவங்க இந்த நோன்ப இருக்கணும்...
குழலி: அவங்க இந்தப் பிறப்புல பெண்ணாப் பிறந்துட்டேன். அடுத்த பிறப்புல ஆணாப் பிறக்கணும்னு வேண்டி நோன்பிருப்பாங்களாம்.
சுடர்: என்ன இது... முக்தி கொடுக்கறதுலகூட இப்படி ஒரு பாரபட்சமா...
குழலி: சங்க காலத்துல புலவர்கள் வீரமரணத்தைப் பாடியிருக்காங்கன்னு தான பேசினோம். போர்ல தோற்ற ஒரு மன்னனப் பத்திக்கூடப் பாடியிருக்காங்க.
சுடர்: அப்படியா...
குழலி: புறநானூற்றுல 66வது பாட்டு. வெண்ணிக் குயத்தியார் பாடினது. நின்னினும் நல்லன் அல்லனோ!ன்னு முடியும். வாகைத் திணையில, அரச வாகைத் துறையில அமைஞ்சது. சோழன் கரிகால் பெருவளத்தான் வெண்ணி என்கிற ஊர்ல நடந்த போர்ல, சேரமான் பெருஞ்சேரலாதனை வென்றானாம். அந்தப் போர்ல பெருஞ்சேரலாதனோட மார்புல பாய்ஞ்ச வேல், அவன் மார்பைத் துளைச்சு முதுகையும் புண்ணாக்கிடுச்சாம். தன் முதுகில புண்பட்டதானால, தன் வீரத்துக்கு அவமானம்னு நினைச்சு சேரன் வடக்கிருந்து உயிர்விட்டானாம்.
அதைக் கேள்விப்பட்ட வெண்ணிக் குயத்தியார், கரிகால் சோழனைப் பார்த்து, நீ போர்ல வெற்றிபெற்றதால, வெற்றிக்கான புகழை மட்டுமே அடைஞ்ச. ஆனா, பெருஞ்சேரலாதன் உனக்கு வெற்றியைத் தந்தது மட்டுமில்ல, உன்னால் ஏற்பட்ட புண்ணுக்கு நாணி, வடக்கிருந்து பெரும்புகழை அடைஞ்சி விண்ணுலகத்த சேர்ந்துட்டான். அதனால, அவன் உன்னவிடச் சிறந்தவன் இல்லையான்னு கேட்கிறதா அமைஞ்ச பாடல் தான் இது.
கட்டுரையாளர்: தமிழ்த் துறை பேராசிரியர்.
தொடர்புக்கு: janagapriya84@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT