Published : 26 Jun 2023 04:52 AM
Last Updated : 26 Jun 2023 04:52 AM
வீரர்கள் அந்த வீரனை ஒரு மரத்தின் அருகே இழுத்துக்கொண்டுவந்து நிறுத்தினார்கள். அந்த வீரனின் பெயர் குணபாலன் என்பதும் அவன் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவன் என்பதும் புலனாயிற்று. அப்போது அங்கே வேலை செய்துகொண்டிருந்த அனைவரும் வேலையை நிறுத்திவிட்டு குணபாலனையும் அவனை இழுத்துவந்த வீரர்களையும் சூழ்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். அவர்கள் வேலையை அப்படிப் பாதியிலேயே போட்டுவிட்டு வந்து வேடிக்கை பார்ப்பது புதிதில்லை. இப்படி யாருக்கேனும் தண்டனை வழங்கப்பட்டால் அதை அனைவரும் வேடிக்கை பார்ப்பதை அந்த பாளையத்தை நிர்வகித்த திருச்சேந்தி பாளையக்காரர் வழக்கமாக்கி வைத்திருந்தார். ஏனெனில் அங்கு குற்றவாளிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனையைப் பார்க்கும் எவருக்கும் அரசாங்கத்தை எதிர்க்கும் துணிச்சல் ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற நோக்கமும் பிரதானமாக இருந்தது.
வீரன் குணபாலனோ மற்ற வீரர்களின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள தன்னால் முடிந்தமட்டும் திமிறிக்கொண்டிருந்தான். ஆனால் அவனால்தன்முயற்சியில் வெற்றிபெறமுடியவில்லை. அவன் அங்கிருந்தஒரு ஒதியமரத்தில் கட்டிவைக்கப்பட்டான். ஒரு வீரன், ‘நம்ம தலைவருக்கு தகவல் அனுப்பியாச்சா?’ என்றான். இன்னொருவன், ‘ம்…அனுப்பியாச்சு. இன்னும் சில நிமிடங்களில் தலைவர் வந்திடுவார்’ என்றுபதில் உரைத்தான். அப்படிஅவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே தூரத்தில் புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஒரு குதிரையின் மேல் அவர்களின் தலைவர் திருச்சேந்தி பாளையக்காரர் வந்துகொண்டிருந்ததும் கூட்டத்தினருக்குத் தெரிந்தது.
வட்டமாக சூழ்ந்து நின்ற கூட்டம் புழுதியைக் கிளப்பிக்கொண்டு வந்த குதிரையைக் கண்டு விலகி, வழிவிட்டது. மக்கள் கூட்டத்தின் நடுவே புகுந்த குதிரை கம்பீரமாகக் கனைத்தபடி முன்னங்கால்களைத் தூக்கி எழுந்து பின்னங்கால்களால் நின்று பிறகு இரண்டு முன்னங்கால்களையும் பூமியில் ‘டக்’கென வைத்து கம்பீரமாகவே நின்றது. அதன் மேல் ஒய்யாரமாகத் தோரணையுடன் உட்கார்ந்திருந்த திருச்சேந்தி பாளையக்காரர் அங்கு குவித்துவைக்கப்பட்டிருந்த தானியக் குவியல்களையும் பொதிவண்டிகளையும் பார்த்து பெருமிதமாக ஒரு புன்சிரிப்பை வெளியிட்டார். ‘பலே, இந்த வருடம் அமோக விளைச்சல் போலிருக்கிறதே! சென்றவருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் நாம் நமது பேரரசர் சங்கடசேனனுக்கு செலுத்தப்போகும் திரை அதிகமாக இருக்கப்போகிறது. மன்னரும் நமது பாளையத்தை மனதார மெச்சி நிச்சயமாக பாராட்டுவாரே!’ என்றார். அதற்கு அங்கு நின்றிருந்த அதிகாரிகளும், ‘ஆமாம் தலைவரே! நீங்கள் சொல்வது உண்மைதான்.’ என்றனர்.
அப்போது கட்டிவைக்கப்பட்டும் திமிறிக்கொண்டிருந்த வீரன் குணபாலன் மேல்தன் பார்வையை செலுத்தினார் திருச்சேந்தி. அப்போதும்அவரது புன்னகை குறையவில்லை. அந்தப் புன்னகையின் உள்ளே ஓர் இகழ்ச்சியும் குரோதமும் கலந்திருந்தது. ‘ஓ! இவன்தானா அந்தக் கலகக்காரன்? ஏய்…. உன்னைப் பார்த்தால்பெரிய வீரனாய்த் தெரிகிறது. ஆனால் வீரம் இருந்தும் விவேகம் இல்லாமல்போய்விட்டதே!’ என்றவாறேதன் உறையிலிருந்த வாளை மெதுவாக வெளியே எடுத்தார்.
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மொத்தக் கூட்டமும் அடுத்து என்ன நடக்குமோ என்று திகிலுடன் பார்த்திருந்தனர். குணபாலன் கோபத்தினாலும் தன்னால் ஏதும் செய்யமுடியவில்லையே என்கிற வெறுப்பினாலும் தலையைத் தாழ்த்திபூமியை நோக்கிக் கொண்டிருந்தான். அவனது மோவாயில் தன் வாள் முனையை வைத்து அவனதுமுகத்தை மேல்நோக்கி நிமிர்த்தினார் திருச்சேந்தி. குணபாலன் இப்போது அவரை நேருக்கு நேராய் வெறுப்பு மாறாத விழிகளால் சுட்டுவிடுவதுபோல் பார்த்தான். அவரோ, ‘அட மதியிழந்தவீரனே! உன்னைப் பார்த்தால் மரணத்திற்கு பயந்தவன் போல் தெரியவில்லையே?’ என்றவர் தொடர்ந்து, ’உனதுவீரம் இதோ இந்த வாளுக்கு இரையாகப்போகிறதே என்று எனக்கு சற்று கவலையாகத்தான் உள்ளது.’ என்று நிறுத்தினார்.
அவ்வளவு நேரமும் பேசாமல் இருந்தகுணபாலன் அப்போதுதான் வாயைத்திறந்தான், ‘எனது வீரம் தோற்றுவிட்டதை நான்ஒப்புக்கொள்கிறேன். நான் சாவதுகூட எனக்குக் கவலை இல்லை. ஆனால் உங்களைப் போன்ற கோழைகளின் கைகளால் சாகும்படி ஆயிற்றே என்று எனக்கும் கவலையாகத்தான் உள்ளது’ என்று தன் மனதில் பட்டதை ஆவேசத்துடன் கூறினான்.
அவனது பேச்சைக் கேட்ட உடனேயே திருச்சேந்தி வெகுண்டெழுந்து, ‘அடேய், அற்பப் பதரே! உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்றபடி இறுக்கிப் பிடித்த வாளை மேல் நோக்கி உயர்த்தினார்.
(தொடரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT