Published : 08 Nov 2019 07:36 AM
Last Updated : 08 Nov 2019 07:36 AM
த.சத்தியசீலன்
கோவை
ஆழ்துளை கிணறுக்குள் தவறி விழுந்தகுழந்தையை மீட்கும் 'ஹெச்.ஓ.எஸ்.' கருவியைக் கொண்டு, கோவையில் பள்ளி மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
கோவை காந்திபார்க் பகுதியைச் சேர்ந்தவர் டி.நவநீத் (வயது 39). ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளரான இவர், நண்பர்களின் தொழில்நுட்ப உதவியுடன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தைகளை மீட்கும் கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார். அந்த கருவி எவ்வாறு இயங்குகிறது?, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பது எப்படி? என்பது குறித்துகோவை வடவள்ளி அருகே கல்வீரம்பாளையத்தில் உள்ள மருதாபுரம் ஸ்ரீ சௌடேஸ்வரி வித்யாலயா மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செயல் விளக்கம் அளித்தார்.
அப்போது, 'பிவிசி குழாயைக் கொண்டு ஆழ்துளைக் கிணறு போன்ற மாதிரியை உருவாக்கி, அதற்குள் குழந்தையைப் போல் தவறி விழுந்த பொம்மையை, 'ஹெச்.ஓ.எஸ்.' கருவியை, ஆழ்துளைக் கிணற்றுக்குள் அனுப்பி, உள்ளே சிக்கிக் கொண்டகுழந்தையை மேலே தூக்கி வந்துஉயிருடன் மீட்டதைப் போல் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இப்புதிய கருவியை உருவாக்கிய நவநீத், செய்தியாளரிடம் கூறியதாவது:இக்கருவியின் நுனிப்பகுதியில் கை விரல்களைப் போன்ற ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் மெல்லியது என்பதால் எவ்வகை ஆழ்துளை கிணற்றிலும் செலுத்த முடியும். கிணற்றுக்குள் குழந்தை சிக்கியுள்ள பொசிசனை கேமராவின் உதவியுடன் கண்டறிந்து, குழந்தையின் தோள்பட்டை சற்று கீழே உள்ள பகுதி உறுதி செய்யப்பட்டு, அந்த பகுதியை நோக்கி இக்கருவி செலுத்தப்படும். தோள்பட்டையுடன் இணைந்துள்ள கைப்பகுதிக்கு மேல் இக்கருவியை வைத்து, ரிமோட் மூலம் இயக்கினால், அப்பகுதியை கருவி இறுகப் பற்றிக் கொள்ளும். அதேநேரத்தில் குழந்தைக்கும் அழுத்தம் ஏற்படாது. அதை கேமரா மூலம் உறுதி செய்து விட்டு, கருவியை மெதுவாக மேல்நோக்கி இழுத்து, குழந்தையை எளிதாக மீட்டு விடலாம். இக்கருவியை அனைவரும் எளிதாக கையாள முடியும்.
இது ஆரம்பகட்ட கண்டுபிடிப்பு மட்டுமே. தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் இக்கருவியை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதை ரோபோவாக உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதன்மூலம் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் நடைபெற்ற ஆழ்துளை கிணறில் சிறுவன் சுஜித் இறந்தது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க முயற்சிப்போம்.
இதுபோன்ற கருவிகளை தயாரித்து, ஆழ்துளை கிணற்றில் குழந்தைகளை மீட்கும் தன்னார்வ அமைப்புகளுக்கு இலவசமாக வழங்க உள்ளோம். 'Hands of Sujith' என்பதைக் குறிக்கும் வகையில் இக்கருவிக்கு ஹெச்.ஓ.எஸ். கருவி என்று பெயரிட்டுள்ளோம். ஆழ்துளை கிணறுகளை மூடும் பணியில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளைக் கண்டுபிடித்து, அதை மூடி புகைப்படம் எடுத்து அனுப்பினால் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் 'மரபின் மைந்தன்' முத்தையா, பள்ளியின் தாளாளர் வழக்கறிஞர் ஆர்.சீனிவாசன், அறங்காவலர்கள் எஸ்பி சாம்ராஜ் (லயன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் காஸ்மோஸ்), எம். ஆறுமுகம், ஆர்.சுந்தரராஜன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT